‘ஃபிரிஸ்பீ’ விளையாடி அகமகிழ்ந்த வெளிநாட்டு ஊழியர்கள்

2 mins read
c4a22144-11cc-4ad4-b2f4-5697f3f1085a
வெஸ்ட்லைட் நிறுவனத்தின்கீழ் இயங்கும் வெவ்வேறு தங்குவிடுதிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 20 வெளிநாட்டு ஊழியர்களும் இல்லப் பணிப்பெண்களும் ‘ஃபிரிஸ்பீ’ விளையாட்டில் பங்கேற்றனர். - படங்கள்: பே.கார்த்திகேயன்

சிறு வயதிலிருந்து தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடியில் வல்லவராகத் திகழ்கிறார் தமிழகத்தின் காரைக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சார்ல்ஸ் இளங்கோவன், 39.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வந்த அவர், ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) முதன்முதலாக ‘ஃபிரிஸ்பீ’ விளையாட்டில் ஈடுபட்டார்.

“ஃபிரிஸ்பீயைப் போலல்லாமல் கபடிக்கு அதிக உடல் வலிமை தேவைப்படுகிறது,” என்று தமிழ் முரசிடம் தமது அனுபவத்தை அவர் பகிர்ந்தார்.

அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. - படங்கள்: பே.கார்த்திகேயன்

திரு சார்ல்சைப் போல, வெஸ்ட்லைட் நிறுவனத்தின்கீழ் இயங்கும் வெவ்வேறு தங்குவிடுதிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 20 வெளிநாட்டு ஊழியர்களும் இதர இல்லப் பணிப்பெண்களும் ஞாயிற்றுக்கிழமை காலை சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் ‘ஏலிஸ் அண்ட் பீட்டர் டான்’ கல்லூரி வளாகத் திடலில் ‘ஃபிரிஸ்பீ’ விளையாட்டுகளில் பங்கேற்றனர்.

டிசம்பர் 18ஆம் தேதி அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, மனிதவள அமைச்சின் ஆதரவில் வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தங்குமிட வசதிகளை வழங்கும் ‘செஞ்சூரியன்’ நிறுவனத்தின் ஏற்பாட்டில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக மாணவர்கள் விளையாடினர்.

விளையாட்டுகள் தொடங்குவதற்கு முன் ஊழியர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் அனுபவங்களைப் பகிர்ந்தனர்.

பொதுவாக, வெளிநாட்டு ஊழியர்களுக்கு ‘ஃபிரிஸ்பீ’ ஒரு புதிய விளையாட்டு என்பதால் அவர்கள் அதைக் கற்றுக்கொள்ள சிறிது நேரம் ஒதுக்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்களை ஆதரிக்கும் 24ஏ‌ஷியா அறநிறுவனத்திலிருந்து வந்திருந்த தொண்டூழியர்கள் விளையாட்டு மகிழ்ச்சியில் திளைத்தனர்.

“வெளிநாட்டு ஊழியர்கள் இங்கு சமூகத்தில் ஒருங்கிணையும் உணர்வைப் பெறுவதற்கு இதுபோன்ற முயற்சிகள் பெரிதும் உதவுகின்றன,” என்றார் 24ஏ‌ஷியா அறநிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்கவுள்ள ஜோசஃப்.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற குழுக்களுக்குப் பதக்கமும் சிறப்புப் பரிசும் வழங்கப்பட்டன. அவர்களுக்குச் சுவையான மதிய உணவும் பரிமாறப்பட்டது.

பொதுவாக, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுப்பு கிடைப்பதால் அவ்வப்போது தம் நண்பர்களுடன் விளையாட்டுகளில் ஈடுபடுவது திரு கார்த்திகேயனுக்கு வழக்கம்.

இந்த அனுபவம் தமக்கு மனத்தளவில் தெளிவும் உடலளவில் வலிமையும் அளிப்பதாக அவர் சொன்னார்.

அதுமட்டுமின்றி, வெளிநாட்டு ஊழியர்கள் சந்திக்கும் கண்ணுக்குத் தெரியாத மனவுளைச்சலை விளையாட்டுகள் போக்குவதாக வெஸ்ட்லைட்-பாப்பன் தங்குவிடுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி, 50, சொன்னார்.

“அனைவரும் போட்டி மனப்பான்மையுடன் ஒன்றுகூடுவது நன்மையே,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்