‘மீலாதுன் நபி’ ஆவணப்படம்: நல்லிணக்கத்தைப் போற்றுவதாகப் பாராட்டு

‘மீலாதுன் நபி’ ஆவணப்படம்: நல்லிணக்கத்தைப் போற்றுவதாகப் பாராட்டு

3 mins read
3842b517-7044-4f3d-a5a8-e1b9149790dd
சுல்தான் பள்ளிவாசலில் ஆவணப்படக் காட்சிகள் திரையிடப்பட்ட நிகழ்ச்சியில் இயக்குநர் மில்லத் அகமதுடன் (நடுவில்) நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக், தமிழ் முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவர் முஹம்மது கௌஸ் (இடது). - படம்: மில்லத் அகமது

இஸ்லாத்தின் இறைத்தூதர் நபிகள் நாயகம் பற்றிய ‘மீலாதுன் நபி’ ஆவணப்படத்தின் சில பகுதிகள் சுல்தான் பள்ளிவாசல் அரங்கத்தில் மார்ச் 28ல் திரையிடப்பட்டன.

மாணவர்களின் கல்வி நிதிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் திரையிடலில் கிட்டத்தட்ட 620 பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரஸாக் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தார்.

குறிப்பிட்டதொரு சமயத்தின் கோட்பாடுகளாக மட்டுமல்லாமல், ஒரு மனிதன் சமூகத்தோடு இணைந்து வாழ வேண்டிய மனிதாபிமான நெறிகளை இயக்குநர் மில்லத் அகமது பதிவு செய்துள்ளார்.

ஆவணப்படம் குறித்துப் பலர் தங்களது பாராட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.

“பெண்களுக்கான உரிமைகள், குடும்ப வாழ்வியல் ஆகியவை குறித்த தவறான புரிதல்களை இந்தப் படம் அறிவார்ந்த முறையில் போக்கியுள்ளது,” என்றார் தமிழ் முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவர் முஹம்மது கௌஸ்.

குறிப்பாக, சமூகச் சேவை மற்றும் அண்டை வீட்டாருடனான அன்பு குறித்த நபிகளின் போதனைகள் இன்றைய இளைய தலைமுறைக்கு மிகச் சிறந்த வழிகாட்டுதலாகும் என்றும் அவர் கூறினார்.

இவருடன் உடன்படும் வளர்தமிழ் இயக்கத் துணைத் தலைவர் ஜோதி மாணிக்கவாசகம், இஸ்லாம் எப்படித் தோன்றியது என்பதையும், அதன் பின்னணியில் நபிகள் பட்ட சிரமங்களையும் அறிவது இதுவே முதல் முறை எனக் குறிப்பிட்டார்.

நீண்ட நாள்களுக்குப் பின் நல்லதொரு திரைப்படத்தைக் கண்டு ரசித்ததாகப் பாராட்டிய எழுத்தாளர் மணிமாலா மதியழகன், அந்தப் படத்தினால் இஸ்லாத்தைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும் என்றார்.

“ஒருவரது உருவத்தைக் காட்டாமல் அவரைப் பற்றிப் பார்வையாளர்களுக்கு எடுத்துச் சொல்வது மிகவும் சவாலான காரியமாகும். அதைச் சிறப்பாகச் செய்துள்ளார் இயக்குநர் மில்லத்,” என்று அவர் கூறினார்.

இயக்குநர் மில்லத் அகமதின் கடின உழைப்பு, ஆராய்ச்சி மற்றும் புதுமையான அணுகுமுறை மிகவும் பாராட்டத்தக்கவை என்றார் தணிக்கையாளர் முனைவர் அப்துல் காதர்.

பென்கூலன் பள்ளிவாசல் மதரஸா ஆசிரியர் மெளலவி கலில் அஹமது ஹசனி, தமது 55 மாணவர்களைப் படம் பார்க்க அழைத்து வந்ததாகக் குறிப்பிட்டார்.

“இதில் மார்க்கத்தைப் பற்றிய முரண்பாடுகள் எதுவுமின்றி, எல்லாத் தரப்பு மக்களும் பார்க்கக்கூடிய வகையில் படமாக்கப்பட்டுள்ளது. மூன்று உலமாக்கள் மூலம் கதை சொன்ன விதம் சிறப்பு. இயக்குநருக்கு வாழ்த்துகள்,” என்றார் அவர்.

இரண்டு மணி நேர ஆவணப்படத்தில் இடையிடையே புகழ்பெற்ற பாடகர்களை வைத்துப் பாடல்களை இடம்பெறச் செய்திருப்பதும், உலகின் பல நாடுகளில் உள்ள பள்ளிவாசல்களைக் காண்பித்திருப்பதும் சோர்வு தெரியாமல் இயக்குநர் படத்தை நகர்த்தியிருப்பதாகச் செம்மொழி ஆசிரியர் எம். இலியாஸ் குறிப்பிட்டார்.

“தலாக் எனும் விவாகரத்து மற்றும் பலதார மணங்களை, குறிப்பாக நான்கு மனைவியர் வரை ஒரு முஸ்லிம் திருமணம் செய்து கொள்ள முடியும், அது ஏன்? எதற்கு? என்பதற்கான குழப்பத்திற்கு விளக்கம் தந்திருப்பதும், அதுவும் மூன்று இமாம்களை வைத்துச் சொல்ல வைத்திருப்பதும் இயக்குநரின் சாதுரியத்தைக் காட்டுகிறது,” என அவர் கூறினார்.

இந்த ஆவணப்படத்தின் தொழில்நுட்பம், ஒளி, ஒலிக் காட்சிகள் யாவும் மிகவும் சிறப்பாக இருப்பதாகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் சுப. திண்ணப்பன் பாராட்டினார்.

“இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு இந்தப் படம் பல ஐயங்களைப் போக்குகிறது,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்