சென்னையின் பரபரப்பான அண்ணா சாலையில் அமைந்துள்ள நவீன பிரெஸ்டீஜ் பாலிகான் (Prestige Polygon) கட்டடத்தின் ஒன்பதாவது மாடிக்கு மின்தூக்கி உங்களை அழைத்துச் சென்றால், அங்குள்ள சூழல் முற்றிலும் மாறுபட்டு இருப்பதை உணர்வீர்கள்.
சிங்கப்பூர் துணைத் தூதரகத்தின் கதவுகளைத் திறந்து உள்ளே அடியெடுத்து வைத்ததும், காதுகளில் ஒலிக்கும் ‘சிங்லிஷ்’ பேச்சு. சரியான நேரத்திற்குச் சென்றால், அன்னாசிப்பழ பலகாரத்தின் சுவையும் உங்களை அன்போடு வரவேற்கும்.
அங்கு பணிபுரியும் தூதரக அதிகாரிகளுக்கும், தினந்தோறும் வருகை தரும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கும் புத்துணர்ச்சியையும் சுறுசுறுப்பையும் இந்தப் புதிய அலுவலகம் தந்துள்ளது.
இல்லத்தை நினைவூட்டும் இடம்
இந்த இடமாற்றம், பொதுமக்களின் வசதிக்கான ஒரு முக்கிய மேம்பாடாக அமைந்துள்ளது.
குடியேற்றம், விசா செயலாக்கம், சான்றொப்பம் (Attestation) போன்ற சேவைகளை நாடி வருகை அளிப்பவர்கள் எளிதில் வந்தடையும் வகையிலும், போதிய வாகன நிறுத்துமிடம், தரைத்தளத்தில் அமைந்துள்ள உணவகங்கள் போன்ற வசதிகளோடும் அமைந்துள்ளது.
சிங்கப்பூரிலிருந்து 2,900 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருந்தாலும், தாய்நாட்டின் நினைவுகளை எப்போதும் துடிப்புடன் வைத்திருக்கிறது இவ்வலுவலகம்.
சீனப் புத்தாண்டு, நோன்புப் பெருநாள், தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற முக்கியப் பண்டிகைக் காலங்களில், அலுவலகப் பலகார அறை சுவையான உணவுகளோடு நிரம்பி வழியும்.
“எங்கள் சக ஊழியர்கள் சிங்கப்பூருக்கு விடுமுறைக்குச் சென்று திரும்பும்போது கொண்டுவரும் தின்பண்டங்களை நாங்கள் இங்கு ரசித்து சாப்பிடுவோம்,” என்றார் துணைத் தூதரக அதிகாரி (அரசியல்) வைஷ்ணவி வாசுதேவன்.
“அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் நல்ல உணவின்மீது பொதுவான காதல் உண்டு,” என்றார் அவர்.
இந்தத் துணைத் தூதரகம், சென்னையில் வாழும் சிங்கப்பூர் சமூகத்திற்கான ஒரு முக்கிய மையமாகவும் திகழ்கிறது. இங்கு வழக்கமாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் 100 முதல் 150 பேர் வரை எளிதாகக் கூடிவிடுவர்.
தாய்நாட்டை விட்டுப் பிரிந்து வாழும் தூதரக அதிகாரிகளுக்கு, தேசிய தினக் கொண்டாட்டங்களின்போது ஒன்றிணைந்து நிற்பது ஒரு தனித்துவமான அர்த்தத்தைத் தருகிறது.
“தாய்நாட்டை நினைவூட்டும் இம்மண்ணில், சக சிங்கப்பூரர்களோடு இணைந்து தேசிய கீதம் பாடுவதும் உறுதிமொழி ஏற்பதும் மனத்திற்கு எப்போதும் நெகிழ்ச்சியளிக்கும் ஒன்று. தூரத்தில் ஒலிக்கும் ‘சிங்லிஷ்’ மொழியை வைத்தே ஒரு சிங்கப்பூரரை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்,” என்றார் வைஷ்ணவி.
அத்தியாவசிய தூதரகச் சேவை
பண்டிகைக் கொண்டாட்டங்களைத் தாண்டி, தென்னிந்தியாவில் வசிக்கும் அல்லது பயணம் மேற்கொள்ளும் சிங்கப்பூரர்களின் நலனை உறுதிசெய்யும் முதன்மைப் பணியையும் துணைத் தூதரகம் மேற்கொள்கிறது.
காலமான குடிமக்களின் உடல்களைச் சிங்கப்பூர் கொண்டு வருவதற்கான நடைமுறை ஏற்பாடுகள் முதல், வெளிநாடுகளில் காவலில் வைக்கப்பட்டுள்ள சிங்கப்பூரர்களின் நலனை உறுதிசெய்வது வரை, துணைத் தூதரகம் ஓர் அத்தியாவசியப் பாதுகாப்பு அரணாகச் செயல்படுகிறது.
தொலைந்த அல்லது சேதமடைந்த கடப்பிதழ் போன்ற இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பயணிகளுக்கு, துணைத் தூதரகம் விரைவாகச் செயல்பட்டு அவசரப் பயண ஆவணத்தை வழங்கி, பாதுகாப்பாக சாங்கி விமான நிலையம் திரும்ப வழிவகுக்கிறது.
தென்னிந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் அல்லது தொழில்நுட்ப மையங்களுக்குப் பயணம் செய்யத் திட்டமிடுபவர்களுக்கு துணைத் தூதரகம் விடுக்கும் வேண்டுகோள், சிங்கப்பூரர்கள் தங்கள் பயணத்திற்கு முன் வெளியுறவு அமைச்சின் இணையத்தளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பதே.
தேவைப்படும் இடங்களுக்குத் தூதரக உதவிகளை விரைவாகக் கொண்டுசேர்க்க அது உதவும் என்று துணைத் தூதரகம் தெரிவித்தது.
மேலும், பயணங்கள் இனிமையாகவும் பாதுகாப்பாகவும் அமைவதை உறுதிசெய்ய, முழுமையான பயணக் காப்புறுதியைப் பெற்றுக்கொள்ளுமாறும், தனிப்பட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுமாறும் பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

