தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான கா.சண்முகம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) லிட்டில் இந்தியா வட்டாரத்திற்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது தமது பண்டிகை நாள் வழக்கங்கள் குறித்துத் தமிழ் முரசிடம் அவர் பகிர்ந்துகொண்டார்.
இவ்வாண்டு தீபாவளி நாளன்று காலையிலேயே உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்குச் சென்று, அங்குப் பணியாற்றும் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் அமைப்பின் அதிகாரிகளை நேரில் சந்திக்கவுள்ளதாக அமைச்சர் கூறினார்.
“தீபாவளி, கிறிஸ்துமஸ், நோன்புப் பெருநாள் என எந்தப் பொது விடுமுறை நாளாக இருந்தாலும், அன்றைய தினம் காலையிலேயே உள்துறை அமைச்சின்கீழ் இயங்கும் பல்வேறு பிரிவுகளுக்குச் சென்று, விடுமுறை நாளிலும் பணிபுரியும் ஊழியர்களைச் சந்திப்பது எனது வழக்கம்,” என்று திரு சண்முகம் கூறினார்.
பொதுமக்கள் பண்டிகையைக் கொண்டாடும் வேளையில், நாட்டின் பாதுகாப்பிற்காக உள்துறை அமைச்சின் அதிகாரிகள் விடுமுறை நாளிலும் பணிபுரிவதை அவர் சுட்டினார்.
எப்போது வேண்டுமானாலும் அவசரத் தேவைகள் எழலாம் எனச் சுட்டிக்காட்டிய அவர், “பொது விடுமுறை நாள் என்பதால் பணிச்சுமை குறைந்துவிடும் என்று கூற முடியாது. எப்போது என்ன நடக்கும் என்று கணிக்க முடியாது என்பதால், எப்போதும் தயார்நிலையில் இருக்க வேண்டும்,” என்றார்.
அலுவலகப் பணிகளை நிறைவுசெய்த பிறகே, நேரம் கிடைக்கும் பட்சத்தில் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது தமது வழக்கம் என்றும் திரு சண்முகம் குறிப்பிட்டார்.
