சிங்கப்பூருக்கு 2022ஆம் ஆண்டின் மத்தியில் குடியேறியபோது, தம் வாழ்வின் மிகக் கடினமான காலகட்டத்தைக் கடந்துவிட்டதாகத் திருவாட்டி கின்னாரி போசாலே நம்பினார்.
கட்டடக் கலைஞரும் இரட்டை ஆண் குழந்தைக்குத் தாயுமான அவர், தமது வாழ்க்கையில் ஏற்கெனவே பெரும் சோதனைகளைச் சந்தித்திருந்தார்.
இந்தியாவில் கொவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக இருந்தபோது, எதிர்பாராத கர்ப்பத்துடனும் நோய்த் தொற்றுடனும் போராடி, குறைப்பிரசவத்தில் குழந்தைகளை அவர் பெற்றெடுத்தார்.
சிங்கப்பூர் தமக்கு ஒரு நிலையான வாழ்க்கையையும், தம்மை மீண்டும் கட்டமைத்துக்கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்கும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால், அவர் சற்றும் எதிர்பாராத போராட்டக்களமாக அது மாறியது.
திருவாட்டி கின்னாரியின் பிரச்சினைகள் முதன்முதலில் 2025 ஜனவரி 2ஆம் தேதி தொடங்கின. அப்போது 34 வயதான அவர், தமது இடது மார்பகத்தில் தொடர்ச்சியான வலியை உணர்ந்தார். ஆரம்பத்தில் இது வழக்கமான ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் வலி என்று அவர் நினைத்தார். ஆனால் இரண்டு வாரங்களுக்குள், அவரது மார்பகம் வழக்கத்திற்கு மாறாக இறுகிப்போனது.
“என் மார்பகத்தைத் தொடும்போது அதன் உள்ளே ஒரு கல் இருப்பதுபோல் இருந்தது,” என்றார் அவர்.
அவரது குடும்ப மருத்துவர் அது மார்பகப் புற்றுநோயாக இருக்கலாம் எனச் சந்தேகித்தார். எப்போதும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்த கின்னாரி இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“அன்றாடம் என் இரண்டு குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு பரபரப்பான சூழலில் வாழ்ந்து வந்தேன். எனவே, இது எனக்கு நடக்குமென்பதை என் மனம் ஏற்க மறுத்தது,” என்று நினைவுகூர்ந்தார் திருவாட்டி கின்னாரி.
தொடர்புடைய செய்திகள்
அதைத் தொடர்ந்து ‘மெமோகிராம்’ (Mammogram), அல்ட்ராசவுண்ட், திசுப் பரிசோதனைகள் (Biopsy) மேற்கொள்ளப்பட்டன. மூன்று மாதங்களுக்குப் பிறகு அது புற்றுநோய் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.
மாறாக, அவருக்கு ஏற்பட்டிருந்தது ‘இடியோபாதிக் கிரானுலோமாட்டஸ் மாஸ்டிடிஸ்’ (Idiopathic Granulomatous Mastitis - ஐஜிஎம்) எனப்படும் அரிய வகை நோய் என்று தெரியவந்தது.
ஐஜிஎம் என்பது மார்பகத் திசுக்களில் ஏற்படும் ஒரு நாள்பட்ட அழற்சி நோயாகும். இதில் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே தவறுதலாக மார்பகத் திசுக்களைத் தாக்குகிறது.
புற்றுநோய் இல்லை என்பது நிம்மதியளித்தாலும், இந்த நோய் உறுதிசெய்யப்பட்டது கின்னாரிக்குப் புதிய அச்சத்தை ஏற்படுத்தியது. ஐஜிஎம் நோய்க்கு நிரந்தரத் தீர்வு கிடையாது என்பதுடன், அதிலிருந்து குணமடைந்தாலும் அது மீண்டும் தீவிரமாகத் தாக்கும் அபாயமும் உண்டு.
திருவாட்டி கின்னாரியின் உடல்நிலை வேகமாக மோசமடைந்தது. உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறிக்கும் ‘இஎஸ்ஆர்’ (ESR) அளவு 80ஆக அதிகரித்தது; இது ஆரோக்கியமான வரம்பைவிட நான்கு மடங்கு அதிகம்.
வலிமிகுந்த கட்டிகள் உருவாகி, அவற்றில் சீழ் கோத்தது. ஒருமுறை அவர் குளித்துக்கொண்டிருந்தபோது கட்டி ஒன்று வெடித்தது.
“ரத்தமும் சீழும் மார்பிலிருந்து வடிந்ததைப் பார்த்து நான் பீதியடைந்தேன். உடனே மருத்துவமனைக்கு விரைந்தேன்,” என்று திருவாட்டி கின்னாரி குறிப்பிட்டார்.
அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்வது அவருக்கு வழக்கமானது. பலமுறை ஊசி மூலம் நீர்மத்தை அகற்றுதல், வலிமிகுந்த காயங்களுக்கு மருந்திடுதல் என சிகிச்சைகள் தொடர்ந்தன. கடந்த ஏப்ரல் மாதத்திற்குள் அறுவை சிகிச்சை தவிர்க்க முடியாததாகிவிட்டது.
மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டதையடுத்து, மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட திசுக்களை அகற்றி, காயத்தை ஆற்ற ‘வெற்றிடக் காயச் சிகிச்சை முறையை’ (vacuum-assisted wound therapy) மேற்கொண்டனர்.
குணமடையும் காலம் மிகக் கடினமாக இருந்தது. வீரியமிக்க ஸ்டிராய்டு மருந்துகள் அவருக்கு அளிக்கப்பட்டன. இதனால் உடல் எடை அதிகரிப்பு, முடி உதிர்வு, முகப்பரு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டன. வாரத்திற்கு 15 மாத்திரைகளை உட்கொள்ள வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.
உடல் வலியைவிட, மன ரீதியான தாக்கமே கடுமையாக இருந்ததாக திருவாட்டி கின்னாரி தெரிவித்தார்.
அந்தக் கடினமான காலத்தில், அவரது குடும்பத்தினர் (கணவர் திரு சத்யஜித் போசாலே, இரட்டை மகன்கள் ஆனந்த், அன்வே) அவருக்குப் பெரிதும் ஆறுதலாக இருந்தனர்.
“மகன்களைத் தூக்க முடியாதது என்னை மனமுடையச் செய்தது. இருவரையும் அரவணைக்க வேண்டும் என்பது மட்டுமே என் ஆசையாக இருந்தது,” என்றார் திருவாட்டி கின்னாரி.
குழந்தைகளும் கவனமாக இருக்கக் கற்றுக்கொண்டனர். அம்மாவுக்குக் காயம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட அவர்கள், செவிலியர்கள் காயத்திற்கு மருந்திடும்போது அமைதியாகக் காத்திருப்பார்கள். தாயின் மார்பில் படாமல் அவரை மெதுவாகக் கட்டியணைக்கப் பழகிக்கொண்டனர்.
“ஒரு கட்டத்தில், என் மார்பகங்களை முழுவதுமாக அகற்றிவிடுங்கள் என்று மருத்துவரிடம் கெஞ்சினேன். அந்தளவுக்கு நான் சோர்வடைந்திருந்தேன். வலியும் பயமும் நின்றால் போதும் என்ற மனநிலை,” என்றார் திருவாட்டி கின்னாரி.
ஐஜிஎம் நோய்க்கான மருத்துவக் காரணம் அறியப்படாவிட்டாலும், பல ஆண்டுகளாகத் தேக்கி வைத்திருந்த மன அழுத்தமே இதற்கு முழுக் காரணம் என்று அவர் நம்புகிறார். கட்டடக் கலை மாணவராக இருந்தபோது பார்த்த இரவுநேரப் பணிகள், தாய்மைக்குப் பிறகு இழந்த தொழில் அடையாளம், புதிய நாட்டில் குறைப்பிரசவக் குழந்தைகளுடன் வாழ வேண்டிய சூழல் எனப் பல்வேறு மன அழுத்தங்களை அவர் எதிர்கொண்டார்.
“என் மனம் வாய்விட்டுச் சொல்லாததை, என் உடல் காட்டிக் கொண்டிருந்தது. என் தேவைகளை நான் எப்போதும் பின்தள்ளியே வைத்திருந்தேன். அதற்கு என் உடல் அளித்த பதிலடிதான் இது என்று நினைக்கிறேன்,” என்றார் கின்னாரி.
இன்று, அவரது நோய் கட்டுக்குள் (remission) உள்ளது. ஆனால் அது எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வரலாம் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு அவர் வாழ்கிறார். பயத்திற்குப் பதிலாக, அவர் ஒரு முழுமையான, ஒழுங்கான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளார்.
உடலில் அழற்சியைக் குறைக்க, கோதுமைக்குப் பதிலாக கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்கிறார். தியானம், வழிபாடு, ஓய்வு போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கிறார்.
மிக முக்கியமாக, தமக்கான எல்லைகளை வகுத்துக்கொள்ளக் கற்றுக்கொண்டார். “என்னை நான் முதன்மைப்படுத்துவதற்காக மற்றவர்களிடம் மன்னிப்புக் கேட்பதை நிறுத்திவிட்டேன்,” என்று கூறிய அவர், அவ்வப்போது மன நிம்மதிக்காக தனியாக வெளியூர்ப் பயணங்களையும் மேற்கொள்வதாகக் கூறினார்.
“மார்பகப் பிரச்சினைகள் அனைத்தும் வலியுடன் தோன்றவேண்டும் என்பதில்லை. அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியாமலும் இருக்கலாம். உடலில் வழக்கத்துக்கு மாறாக எதையாவது உணர்ந்தால், தயங்காமல் உடனடியாக உதவி நாடுங்கள். உங்கள் உடல்நலத்திற்கு நீங்களே குரல் கொடுக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்,” என்று திருவாட்டி கின்னாரி மற்ற பெண்களிடம் கூற விரும்புகிறார்.
தற்போது கட்டடங்களுக்கான வரைபடங்களை வரையாவிட்டாலும், அதைவிட அர்த்தம் அதிகமுள்ள ஒரு செயலில் இறங்கியுள்ளார். ஆழ்ந்த விழிப்புணர்வுடனும் அசைக்க முடியாத உறுதியுடனும் தம்மைத்தாமே மீண்டும் கட்டமைத்துக் கொள்ளும் வாழ்க்கைப் பயணமே அது.

