பள்ளி மாணவர்களுக்காக உணவு நன்கொடை நிறுவனமான ‘ஃபூட் ஃப்ரம் த ஹார்ட்’ அமைப்பு தயார்செய்யும் ஒவ்வோர் அன்பளிப்புப் பையிலும் உணவோடு வாழ்க்கைக்கான நம்பிக்கையும் நிரப்பப்படுவதாக திருமதி சசிகலா புஷ்பநாதன் கூறினார்.
வசதி குறைந்த எளிய குடும்பங்களில் கல்வி பயிலும் பிள்ளைகளின் வாழ்க்கையில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தும் இலக்குடன் 2004ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் ‘பள்ளிகளுக்கான அன்பளிப்புப் பை’ திட்டத்திற்குப் பொறுப்பு வகிக்கிறார் இவர்.
பிள்ளைகளின் உடல்நலம் காக்கவும் அவர்களின் உணவுத் தேவைகளை நிறைவு செய்யவும் பால், முட்டை, அரிசி, ரொட்டி, நூடல்ஸ், மைலோ உள்ளிட்ட 21 உணவுப் பொருள்கள் கொண்ட அன்பளிப்புப் பைகளைத் தொண்டூழியர்களுடன் இவர் இணைந்து தயாரிக்கிறார்.
நிதி உதவித் திட்டத்தில் பயன்பெறும் பிள்ளைகளுக்காக ஒவ்வொரு மாதமும் அத்தகைய பைகளை உரிய நேரத்தில் பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பதும் அதனை உறுதி செய்வதும் 41 வயது திருமதி சசிகலாவின் பொறுப்பு.
கல்வி கற்கும் பிள்ளைகள் பசியோடு செல்லக்கூடாது என்பதே திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ற அவர், தற்போது ஏறத்தாழ 80க்கும் அதிகமான பள்ளிகளில் உள்ள பிள்ளைகளுக்கு இந்தப் பைகள் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
இப்பணி தம் மனதிற்கு மிகவும் நெருக்கமானது என்று கூறிய திருமதி சசிகலா, “அன்பளிப்புப் பைகளைப் பெற்றதும் நன்றி என்ற சொல்லைக் கேட்கும்போது அதில் ஏற்படும் மனநிறைவுக்கு இணை ஏதுமில்லை,” என்றார்.
மாதாந்தர விநியோகம் என்றாலும் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அத்திட்டத்திற்கான பட்டியலைச் சரிபார்த்தல், உணவுப் பொருள்களை முறையாகப் பைகளில் தயார்செய்யும் தொண்டூழியர்களை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பற்பல பணிகளைக் கவனத்துடன் செய்வதும் முக்கியம் என்றார் அவர்.
பெரிய குடும்பங்கள், இளம் பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு இந்த அன்பளிப்புப் பைகள் உணவு சார்ந்த செலவினங்களில் துணைநிற்கின்றன. இதனால், பைகளைப் பள்ளிகளுக்கு அனுப்ப இயலாத நேரங்களில் ‘கிராப்’ சேவை வழியாக எப்படியாவது அப்பிள்ளைகளின் வாசல் வரை பொருள்களைக் கொண்டு சேர்த்துவிடுவதாக திருமதி சசிகலா தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, கூடுதல் தொண்டூழியர்கள் பங்கேற்றால் இந்த நோக்கம் மேலும் நன்கு நிறைவேறும் என்றார். தொண்டூழியப் பண்புகளை அடுத்த தலைமுறைக்குக் கற்றுத் தருவது மிகவும் முக்கியம் என்று கருதும் இவர், அதற்குத் தம்மால் இயன்ற பங்கையும் ஆற்றி வருகிறார்.
“முன்பு ஆசிரியையாக இருந்தேன். பிள்ளைகள் சந்திக்கும் சவால்கள் குறித்து அறிந்திருக்கிறேன். எனவே, என் இரு பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றபோது சக மாணவர்கள் யாரேனும் தேவையில் இருக்கிறார்களா என்பதைப் பார்த்து அவர்களுடன் உணவைப் பகிர்ந்துகொள்ள அவர்களிடம் கூடுதலாக உணவுப் பண்டங்களைக் தவறாமல் கொடுத்தனுப்பினேன்,” என்றார்.
கனிவுமிக்க சமுதாயமாக சிங்கப்பூர் திகழ, பிள்ளைகள் அவர்களால் இயன்ற பங்களிப்பை எதிர்காலத்தில் வழங்கிட இன்றே நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.