தீபாவளித் திருநாளுக்காகத் தங்கள் வீட்டில் ஒளியேற்றவிருக்கும் திருவாட்டி பாமா வைத்திலிங்கம், 58, வேதனை எனும் இருளை நம்பிக்கையோடு களைகிறார்.
பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர், தம் மூத்த மகன் இருபது வயதைக் கடந்த நிலையில் இரண்டாவது பிள்ளை விக்ஷயா பிறந்தாள்.
ஆனால், விக்ஷயாவிற்கு ‘டௌன் சிண்ட்ரோம்’ எனப்படும் மனநலிவு நோய் இருந்ததாக மருத்துவர்கள் கூறியது, அந்த அன்னையின் அடிவயிற்றில் இடியாக விழுந்தது. பிறக்கும்போதே இருந்த இதயக் கோளாறு, இரண்டு வயதில் ரத்தப் புற்றுநோய் எனப் பேரிடர்கள் அடுக்கடுக்காய் முளைத்தன.
எப்போதும் பதைபதைத்துக் கொண்டிருந்த மனம், போகப்போக சிதையத் தொடங்கியது. பிள்ளைப்பேற்றுக்குப் பிந்திய மன அழுத்தம் அவரைப் பற்றியது.
“மன அழுத்தம் என்ற சொல்லை மக்கள் சாதாரணமாகச் சொல்கின்றனர். ஆனால், அதன் அனுபவம் மிகவும் கொடியதாக உள்ளது,” என்று கூறினார் திருவாட்டி பாமா.
குளிர்பதனப் பெட்டியைத் திறக்கும்போதோ, பிள்ளையைக் குளிப்பாட்டுவதற்கான தண்ணீரை எடுக்கும்போதோ தனக்கும் தன் குழந்தைக்கும் தீங்கு செய்யச் சொல்லி மனத்திற்குள் கொடூரமான குரல் ஒன்று தூண்டும் என்கிறார் இந்தத் தாயார்.
“என்னைப் போல் மன அழுத்தத்திற்கு ஆளாவோரைப் பிறர் எடைபோடுவது எளிது. ஆனால், அதை உணர்பவர்களே, மன அழுத்தத்தின் ஆழமான வலியையும் உணர முடியும்,” எனச் சொல்லி, இருள்மிகுந்த அந்நாள்களை நினைத்துக் கண்ணீர் சிந்தினார்.
தம் கணவர்க்கும் அப்போது இன்னும் இளையராக இருந்த தம் மகனுக்கும் நடந்தவற்றை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலவில்லை என்று திருவாட்டி பாமா சொன்னார்.
எப்போதாவது பேசும் நண்பர் ஒருவரின் அன்பு வார்த்தைகளே அப்போது அவருக்குக் கலங்கரை விளக்கமாக இருந்தன.
வளமான வரிகள் நிரம்பிய எம்ஜிஆர் பாடல்கள், இறை வழிபாடு ஆகியனவும் தம் மனத்தைத் தேற்றியதாகத் திருவாட்டி பாமா கூறினார்.
ஆனால், இறுதியில் மத்தாப்பைப் போல மின்னும் மகளின் புன்னகையே தம் வாழ்வில் திகழும் பேரொளி என பாமா உணர்ந்ததாகக் கூறினார்.
தற்போது 14 வயதாகும் விக்ஷயா, சிறப்புத் தேவைப் பள்ளியில் பயின்று வருகிறார். “அவள்தான் என் உயிர்,” என்று திருவாட்டி பாமா மலர்ந்த முகத்துடன் கூறினார்.
“அந்த இருளிலிருந்து என்னை எது மீட்டெடுத்தது என்று பலர் என்னிடம் கேட்கின்றனர். என் மகளே அதற்கான விடை. அவளது அப்பழுக்கற்ற பாசமும் நேசமும்தான் கடவுள் எனக்குக் கொடுத்த வெளிச்சம்,” என்று இவர் சொன்னார்.
