தோ பாயோவில் பல்லின ஹோலி நிகழ்ச்சி

துன்பம் மறந்து ஒன்றாய் இன்பமுற்ற நற்தருணம்

தோ பாயோவில் பல்லின ஹோலி நிகழ்ச்சி

2 mins read
4b824311-0622-4efb-8b27-bca06de7436c
சிறார்முதல் பெரியோர்வரை கொண்டாடி மகிழ்ந்த ஹோலிப் பண்டிகை.  - படம்: மக்கள் கழகம்

துள்ளிக் குதித்தாடி வண்ணப் பொடிகளை ஒருவர்மீது ஒருவர் தூவி, ஹோலிப் பண்டிகையை தோ பாயோ வட்டாரவாசிகள் விமர்சையுடன் கொண்டாடினர்.

விறுவிறுப்பான ஆடலும் பாடலும் நிறைந்த ‘ரங்கீலா’ என்ற நிகழ்ச்சி, தோ பாயோ வெஸ்ட் குடியிருப்பின் அக்கம்பக்கத்தில் மார்ச் 7ஆம் தேதி நடைபெற்றது. கிட்டத்தட்ட 200 பேர் பங்கேற்ற அந்நிகழ்ச்சியில், அதிர்ஷ்டக் குலுக்கலுக்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தோ பாயோவில் இளையர் பல்வண்ணச் சாயம்பூசி விளையாடி மகிழ்கின்றனர்.
தோ பாயோவில் இளையர் பல்வண்ணச் சாயம்பூசி விளையாடி மகிழ்கின்றனர். - படம்: மக்கள் கழகம்

இந்தியர்களுக்கு மட்டுமல்லாது எல்லா இனத்தவர்களுக்குமே இந்தக் கொண்டாட்டம் இடம் அளிப்பதாகத் தோ பாயோ வெஸ்ட் சமூக மன்ற நற்பணிச் செயற்குழுவின் தலைவர் வி.ஜி. பாலச்சந்தர் தெரிவித்தார். 

பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரோடு ஒருவர் பழகிக் கொண்டாட்டத்தில் மகிழும் வாய்ப்பை ஏற்படுத்துவது இந்நிகழ்ச்சியின் நோக்கம் என்று அவர் கூறினார்.

தம் மனைவியுடனும் இளம் பிள்ளைகளுடனும் தைவானிலிருந்து சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த 38 வயது பொறியாளர் டேனி, “கடந்த ஆண்டு நாங்கள் வெள்ளைச் சட்டை, வெள்ளைக் காலணிகள் உள்ளிட்டவற்றை அணிந்திருந்தோம். அந்தத் தவற்றை நாங்கள் இம்முறை செய்யவில்லை,” எனச் சிரித்தவாறு கூறினார். ‘சோட்டா’ கலைப்பள்ளியில் நாடகக்கலை பயிலும் 15 வயது ஆத்யா குமார்,  பெருந்தொற்றுக்கு முன்பு நடந்த ஹோலி பண்டிகைக்குப் பிறகு வேறு எந்த ஹோலி நிகழ்விலும் கலந்துகொள்ளவில்லை.

நீர்ப்பாய்ச்சி விளையாடும் சிறுமி.
நீர்ப்பாய்ச்சி விளையாடும் சிறுமி. - படம்: மக்கள் கழகம்

“இந்நிகழ்ச்சி வண்ணமயமாகவும் சிறந்த இசையுடன் மகிழ்ச்சி உணர்வு நிறைந்ததாகவும் அமைந்தது,” என்று அவர் கூறினார்.

ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியில் படிக்கும் அவரது 13 வயது தங்கை அத்விகாவும் அதே கருத்தைத் தெரிவித்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு, தங்கள் பகுதியில் நடந்த ஹோலி கொண்டாட்டத்தில் தாங்கள் கலைநிகழ்ச்சி படைத்ததை அந்தச் சகோதரிகள் மலர்ச்சியுடன் நினைவுகூர்ந்தனர். 

“சிங்கப்பூர் பல்லின நாடு. எனவே, மற்றவர்களை நமது கலாசாரத்தில் ஈடுபடுத்தி, நாம் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதை அவர்கள் நேரடியாக அனுபவிக்க இந்நிகழ்ச்சி வாய்ப்பு தருகிறது,” என அத்விகா கூறினார்.

குறிப்புச் சொற்கள்