மாணவச் செய்தியாளர்களின் கைவண்ணத்தில் மிளிர்ந்த முரசு360

தமிழ்மொழி விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பல புதுமைகள்

மாணவச் செய்தியாளர்களின் கைவண்ணத்தில் மிளிர்ந்த முரசு360

4 mins read
8b58d07d-dd5b-4ff0-a965-953c9bdb37ad
இளையர்கள் வடிவமைத்து, முன்னின்று நடத்திய தமிழ்மொழி விழாவின் நிறைவு நிகழ்ச்சியைக் கண்டு களிக்கும் விருந்தினர்கள். - படம்: பே கார்த்திகேயன்

தமிழ்மொழி விழா, சமூகத்தின் எல்லாத் தளங்களிலிருந்தும் மொழியின் சிறந்த அம்சங்களை வெளிக்கொணர்ந்துள்ளதாகச் சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை கூறியுள்ளார்.

மூத்த தலைமுறையின் ‘மீள்திறன் பாடம்’ முதல் இளையர்களின் ‘இணையவழி இயக்கம்’ வரை தலைமுறைகளுக்கிடையிலான செயல்பாடுகள் சமூகத்தை ஒன்றிணைத்துள்ளதாக அவர் சொன்னார்.

தமிழ்மொழி விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெற்ற ‘முரசு360’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திரு முரளி பிள்ளை, “இக்கட்டில் இணைந்தோர் இலகுவாய்க் கடப்பர் எனும் பழமொழி சொல்வதுபோல நிச்சயமற்ற சூழலில் இன, சமய வேறுபாடின்றி ஒன்றுபடுவதே வலிமை,” என்றார்.

ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்மொழி விழாவில் நிகழ்ச்சிகள் படைத்த அமைப்புகளைச் சேர்ந்தோர், சமூகத் தலைவர்கள், இளையர்கள் எனக் கிட்டத்தட்ட 180 பேர் பங்கேற்றனர். நேரலை மூலமாகவும் மேலும் பலர் இணைந்தனர்.

“தமிழ்மொழி விழா ஒரு தனி நிகழ்ச்சியல்ல. 40க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய ஒரு திருவிழா. அவை அனைத்திலும் பங்கேற்க இயலாதோர்க்கும் பங்கேற்றோர்க்கும் அவற்றைப் பற்றிய முழுப் பார்வையை வழங்கியுள்ளோம்,” என்றார் தமிழ் முரசின் ஆசிரியர் த. ராஜசேகர்.

மேடையில் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர் கனியை நேர்காணல் செய்த மாணவச் செய்தியாளார் ஹர்ஷவர்த்தினி.
மேடையில் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர் கனியை நேர்காணல் செய்த மாணவச் செய்தியாளார் ஹர்ஷவர்த்தினி. - படம்: பே கார்த்திகேயன்

இவ்வாண்டு தமிழ்மொழி விழாவின் கருப்பொருள் ‘ஈடுபாடு’ என்பதால் 15 இளையர்களைத் தெரிவுசெய்துப் பயிற்சியளித்ததையும் அவர் சுட்டினார்.

நிகழ்ச்சியை இளையர்களே வடிவமைத்துப் படைத்ததைச் சுட்டிய திரு ராஜசேகர், “இளையர்களுக்குத் தளம் அமைத்துக் கொடுத்துள்ளோம். இனி அவர்கள் மொழியை இன்னும் சிறப்பாக அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வார்கள் என நம்புகிறோம்,” என்றார்.

தமிழ்மொழி விழாவில் பங்கெடுத்த பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர், சமூகத் தலைவர்கள், இளையர்கள் எனப் பலர் நிறைவு நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
தமிழ்மொழி விழாவில் பங்கெடுத்த பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர், சமூகத் தலைவர்கள், இளையர்கள் எனப் பலர் நிறைவு நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். - படம்: பே கார்த்திகேயன்

“நிகழ்ச்சியின் பெயருக்கேற்றபடி அனைத்து நிகழ்ச்சிகளையும் 360 கோணக் கண்ணோட்டத்தில் தொகுத்து வழங்கியது சிறப்பு. கடந்த ஒரு மாதம் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தமிழ்முரசு அதன் இளமை துள்ளும் செய்தியாளர்களைப் பங்கேற்கச் செய்து, அவர்களின் மூலம் அனைத்து நிகழ்ச்சிகளையும் காணச் செய்தனர். இது சிறந்த முயற்சி. அதனை ஒன்றிணைத்துப் படைத்ததும் சிறப்பு,” என்றார் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர்கனி.

“மொத்தம் 40க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து ‘முரசு360’ அழகாக வழங்கியது. இளையர்களின் கண்வழி அதனைப் பார்க்க முடிந்தது. இது ஒவ்வோர் ஆண்டும் நடக்க வேண்டும் என விரும்புகிறேன்,” என்றார் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹரே‌ஷ் சிங்கராஜூ. இயல், இசை, நாடகம் என மூன்று அம்சங்களையும் மாணவர்கள் அழகாய்ப் படைத்ததாகச் சொன்னார் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக்.

முரசு360

முழுமையாக இளையர்களால் நடத்தப்பட்ட நிறைவு நிகழ்ச்சி துடிப்புடனும் உற்சாகமூட்டும் வகையிலும் அமைந்தது.

‘செய்தியாளர் வாழ்வில் ஒருநாள்’ எனும் காணொளி படைக்கப்பட்டது. தமிழ்மொழி விழாவில் நடைபெற்ற மொத்த நிகழ்ச்சிகளின் தொகுப்புகள் மூன்று காணொளிகளாகத் திரையிடப்பட்டன.

வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் பங்கெடுத்த மாணவர்கள், முரசு360ல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட காட்சி.
வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் பங்கெடுத்த மாணவர்கள், முரசு360ல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட காட்சி. - படம்: பே கார்த்திகேயன்

தொடர்ந்து, மேடையில் நேரடியாகத் தமிழ்மொழி விழா குறித்த நேர்காணலும் வலையொலியும் படைக்கப்பட்டன. திரு. நசீர்கனி பங்கேற்ற இந்த அங்கங்களை இளம் செய்தியாளர்கள் வழிநடத்தினர்.

இம்மாதம் முழுவதும் தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களையும் பாடங்களையும் அவர்கள் மேடையில் படைத்தனர். தமிழ்மொழி விழாவில் நிகழ்ச்சிகளைப் படைத்த இளையர்கள் சிலரும் அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்தனர்.

புகழ்பெற்ற கலைஞர் வடிவழகனின் வரிகளில் செயற்கை நுண்ணறிவின் துணையுடன் உருவாக்கப்பட்ட காணொளியும் திரையிடப்பட்டது.

இளம் மாணவச் செய்தியாளர்களுக்குப் பயிற்சி

தமிழ்மொழி மாதம் முழுவதும் தமிழ் முரசுடன் பயணம் செய்த மாணவச் செய்தியாளர்களை மேடையில் அறிமுகம் செய்துவைத்தார் தமிழ் முரசின் ஆசிரியர் த. ராஜசேகர்.
தமிழ்மொழி மாதம் முழுவதும் தமிழ் முரசுடன் பயணம் செய்த மாணவச் செய்தியாளர்களை மேடையில் அறிமுகம் செய்துவைத்தார் தமிழ் முரசின் ஆசிரியர் த. ராஜசேகர். - படம்: பே கார்த்திகேயன்

தெரிவுசெய்யப்பட்ட 15 இளம் மாணவச் செய்தியாளர்களுக்கும் பயிற்சிகளை வழங்கினர் தமிழ் முரசின் அனுபவமிக்க செய்தியாளர்கள். செய்தி சேகரிப்பு, நேர்காணல் செய்தல், செய்தி எழுதும் முறை, காணொளிப் பதிவு, காணொளித் தொகுப்பு, காணொளி முன்தோன்றிப் பேசுவது என அனைத்தையும் பயிலரங்கில் மாணவர்கள் கற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து, அவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, மூத்த செய்தியாளர்களுடன் தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகளுக்கு அனுப்பப்பட்டனர். மூத்தவர்களின் வழிகாட்டுதல்களுடன் மாணவர்கள் செய்திகளை எழுதி அவற்றில் பலவும் தமிழ்முரசில் வெளியாயின.

“ஜெனரேட்டிவிட்டி’, அதாவது மூத்த செய்தியாளர்களுடன் பயணம் செய்து அதன்மூலம் இளம் செய்தியாளர்கள் நேரடியாகக் கற்றது சுவாரசியமான ஒன்று,” என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக்.

“இவ்வாண்டு தமிழ் முரசு, 15 மாணவர்களைச் செய்தித் துறையில் ஈடுபடுத்த எடுத்துள்ள முயற்சி பாராட்டத்தக்கது,” என்றார் தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழிச் சேவைப் பிரிவுத் தலைவர் அழகிய பாண்டியன்.

“இளம் மாணவச் செய்தியாளர்களுக்கு அனுபவம் குறைவாயினும், சிந்தனையில் தெளிவு இருக்கிறது. இளையர்களை ஈடுபடுத்தியதைப் பார்ப்பதில் மனநிறைவு,” என்றார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன்.

“கடந்த ஈராண்டுகளாக தமிழ் முரசு பற்பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இவ்வாண்டு பல நிகழ்ச்சிகளில் இளம் மாணவர்களைக் காணமுடிந்தது. இது சிறப்பான முன்னெடுப்பு,” என்றார் இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் முகமது பிலால்.

“இந்நிகழ்ச்சியின் மூலம் இளம் மாணவர்களைப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்துள்ளோம். மாணவர்கள் செய்திகளை வாசிக்கும் பழக்கம் குறைந்துவரும் நிலையில் அவர்களின் மொழிப் பங்கேற்பை அதிகரித்ததுடன், செய்தித்துறையிலும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளோம். இது இன்னும் இளையர்கள் பலரை எதிர்காலத்தில் ஈர்க்கும் என நம்புகிறோம்,” என்றார் தமிழ் முரசின் செய்தி ஆசிரியர் இர்‌‌‌ஷாத் முஹம்மது.

“மாணவர்களுடன் எங்கள் செய்தியாளர்கள் நெருக்கமாகச் செயல்பட்டு, அவர்களை வழிநடத்தினர். உதவியாசிரியர்கள் அவற்றை மெருகேற்ற உதவினர். செய்தி உலகில் நாற்பதாண்டுக்கும் மேலான அனுபவம் எனக்கு உள்ள நிலையில் மாணவர்கள் எழுதுவதைப் பார்ப்பதில் ஆனந்தம். எதிர்காலத்தில் இத்துறையை மேலும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்வார்கள் எனும் நம்பிக்கை பிறந்துள்ளது,” என்றார் தமிழ் முரசின் இணை ஆசிரியர் வீ. பழனிச்சாமி.

குறிப்புச் சொற்கள்