பள்ளிப் பருவத்தில் தவறான நண்பர்களின் சேர்க்கையாலும் போதைப்பொருள் பழக்கத்தாலும் திசைமாறி, சாங்கி சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டவர் யுரேஷ் (33).
இன்று அந்த இருண்ட காலம் மறைந்து, இசையின் மூலம் வாழ்க்கையில் புதிய ஒளியை அவர் கண்டிருக்கிறார்.
தற்போது சிங்கப்பூரின் மிகப் பெரிய இசைக்குழுக்களில் ஒன்றான ‘த பர்ப்பள் சிம்ஃபனி’யில் பாடகராக இருக்கிறார் யுரேஷ். இந்த இசைக்குழுவில் மாற்றுத்திறனாளிகள், சாதாரணக் கலைஞர்கள் எனப் பலதரப்பினரும் இணைந்து பணியாற்றுகின்றனர். இது ஒருவருக்கொருவர் துணையாக நின்று செயல்படும் இசைத் தளமாகும்.
“இங்குச் சிந்திப்பதற்கு எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. இசையின் மூலம் ஆக்கபூர்வமாகச் சிந்திக்க இது ஒரு நல்வழியை அமைத்துக்கொடுத்தது. பல்வேறு தரப்பு மக்கள் ஒன்றிணைந்து இசைக்கருவிகளை வாசிப்பதையும் அவர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்த ஒரு வழியைக் கண்டறிவதையும் நான் பார்த்திருக்கிறேன்,” என்று யுரேஷ் கூறினார்.
பல்வேறு பின்னணிகளைக் கொண்ட கலைஞர்களுடன் இணைந்து ‘ஸ்டாண்ட் பை மீ’ போன்ற பாடல்களைப் பாடியது, அவருக்குள் நம்பிக்கையையும் துணிவையும் விதைத்துள்ளது. ஒரு குழுவாக இணைந்து செயல்படுவது, ஒருவருக்கொருவர் துணையாக நிற்பது போன்ற பண்புகளை இந்த இசைக்குழுவின் மூலம் யுரேஷ் கற்றுக்கொண்டார்.
“கலை என்பது நாம் யார் என்பதைக் கண்டறியும் ஒரு களம். இந்த வாய்ப்புகள் எங்களின் திறமைகளை வெளிப்படுத்த ஒரு தளத்தை அமைத்துக் கொடுப்பது மட்டுமல்லாமல் எங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கு நம்பிக்கையையும் தருகிறது,” என்று அவர் கூறினார்.
யுரேஷுக்குப் பாடல் எழுதுவதிலும் இசை அமைப்பதிலும் மிகுந்த ஆர்வம் உள்ளது.
தண்டனைக்காலம் முடிந்து வெளியே வந்ததும், இசைப் பயணத்தைத் தொடரப்போவதாக அவர் உறுதியுடன் கூறுகிறார். யுரேஷின் இசைப் பயணம், திறமைக்குத் தடையில்லை என்பதையும் நம்பிக்கை இருந்தால் எத்தகைய இருளிலிருந்தும் மீண்டுவரலாம் என்பதையும் நிரூபித்துள்ளது.

