‘நல்லி’ என்ற பெயரை தங்கள் வர்த்தகப் பொருள்களில் பயன்படுத்தியதன் தொடர்பில் நடைபெற்று வந்த வழக்கில், உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டுப் பிரிவு, நல்லி பிரைவேட் லிமிடெட் (என்பிஎல்) நிறுவனத்திற்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கியது.
மேலும், இதன் தொடர்பில் இந்நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவையும் மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்வதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.
‘நல்லி’ என்ற வர்த்தகப் பெயருக்குச் சொந்தம் கொண்டாடிய இருதரப்பினர்: வழக்கின் பின்னணி
நல்லி சின்னசாமி செட்டி நிறுவனம், தமிழ்நாட்டில் 1928ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் இரண்டு பங்குதாரர்கள் நல்லி சின்னசாமி செட்டி பிரைவேட் லிமிடெட் (என்சிசிபிஎல்) நிறுவனத்தின் பங்குதாரர்கள். இவர்கள், நல்லி சின்னசாமி செட்டியின் முதல் மனைவியின் வாரிசுகள்.
மற்றொரு புறம், மேல்முறையீட்டாளர் நிறுவனமான நல்லி பிரைவேட் லிமிடெட்டின் முக்கியப் பங்குதாரர்களில் ஒருவரான திருமதி ஏ.எம்.மாதவன், சின்னசாமி செட்டியின் இரண்டாம் மனைவியின் பேத்தி.
‘நல்லி’ என்ற பெயரைப் வர்த்தகத்திற்காகப் பயன்படுத்துவது குறித்தும், அவர்கள் பயன்படுத்த வேண்டிய வணிக முத்திரை குறித்தும் நல்லி பிரைவேட் லிமிடெட் (என்பிஎல்), நல்லி சின்னசாமி செட்டி பிரைவேட் லிமிடெட் (என்சிசிபிஎல்) இவ்விரு கடை உரிமையாளர்களுக்கும் இடையே 1997ல் ஒப்பந்தம் ஏற்பட்டுத் தீர்வுப் பத்திரம் வரைவு செய்யப்பட்டது.
எனினும், 2020ல் என்பிஎல் நிறுவனம், எண் 2சி பஃப்ளோ ரோட்டில் அதன் கடையைத் தொடங்கியபோது, குறிப்பாக ‘நல்லி’ என்னும் பெயரை அது வர்த்தகச் செயல்பாட்டில் பயன்படுத்திய விதம் தொடர்பாக அந்நிறுவனத்திற்கு எதிராக 2020 மார்ச்சில் என்சிசிபிஎல் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
தீர்வுப் பத்திர ஒப்பந்தத்தை நல்லி பிரைவேட் லிமிடெட் மீறிவிட்டதாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லி சின்னசாமி செட்டி நிறுவனமும் சிங்கப்பூரின் நல்லி சின்னசாமி செட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் வழக்கறிஞர்கள் மூலம் வாதாடினர்.
அந்நிறுவனங்களின் வழக்கறிஞர்கள், என்பிஎல் நிறுவனம் ‘நல்லி’ என்ற பெயரை பிரதானமாக விளம்பரப்படுத்தியும், அதனுடன் இணைந்திருக்க வேண்டிய ‘பிரைவேட் லிமிடெட்’ என்ற வாசகங்களை முக்கியத்துவம் இல்லாத வகையில் பெயர்ப் பலகையில் சிறியதாக இடம்பெறச் செய்ததாகவும் வாதிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்த வழக்கில் 2022ல் வழங்கப்பட்ட தீர்ப்பில், என்பிஎல் நிறுவனம் ஒப்பந்தத்தை மீறியதாகக் குறிப்பிட்ட நீதிபதி, அந்நிறுவனம் தனது பைகள், புடவை விற்பனையில் பயன்படுத்தப்படும் விற்பனைப் பைகள், புடவைப் பெட்டிகள், விலைப் பட்டியல் போன்றவற்றில் ‘நல்லி’ என்ற பெயரை ஒப்பந்தத்தை மீறும் வகையில் பயன்படுத்தியதால், அதற்குத் தடை உத்தரவு விதித்து தீர்ப்பளித்தார்.
மேல்முறையீட்டு வழக்கில் வெளியான தீர்ப்பின் விவரம்:
இந்நிலையில், இந்த தீர்ப்பின் தொடர்பில் நடைபெற்று வந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது, முன்னதாக என்பிஎல் நிறுவனம் ஒப்பந்தப் பத்திரங்களை மீறவில்லை என்பதையும் வணிக முத்திரை மீறல், வணிகப் பெயரின் சட்டவிரோதப் பயன்பாடு, வேண்டுமென்றே பொய்யுரைத்தல் ஆகியவற்றுக்கு அந்நிறுவனம் பொறுப்பல்ல என்பதையும் நீதிமன்றம் கண்டறிந்தது.
நல்லி சின்னசாமி செட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அதன் பெயரை விளம்பரப் பலகையில் சாய்ந்த நிலையில் வடிவமைத்தது.
இதனிடையே, நல்லி பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பெயர்ப் பலகையில் அதன் பெயரை ‘நல்லி’ எனும் வார்த்தையில் வரும் “i” எனும் எழுத்தை ஒளியூட்டப்பட்ட மெழுகுவர்த்தி சின்னமாக வடிவமைத்தது.
இந்தியக் கலாசாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மெழுகுவர்த்தி, நெருப்பு, ஒளி ஆகிய அனைத்துடனும் தனது வணிகப் பெயரை அந்நிறுவனம் தொடர்புபடுத்தி தனது வாடிக்கையாளர் இலக்கை தெரிவு செய்துள்ளது.
இந்த அம்சங்கள் எதிர்த்தரப்பு நிறுவனத்தாரிடம் இல்லை என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்பிஎல் நிறுவனம், வர்த்தக முத்திரை மீறலில் ஈடுபடவில்லை எனவும் வழக்கு தொடர்பில் இரு நிறுவனங்களும் ‘நல்லி’ என்ற சொல்லை தங்கள் வணிகங்களுக்குப் பயன்படுத்தினாலும், தங்களது வர்த்தக முத்திரையில் ‘நல்லி’ என்ற சொல்லை அவை பயன்படுத்தும் விதத்தால் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.
இதன் அடிப்படையில் ஒப்பந்தப் பத்திரங்களும் வணிக முத்திரையும் மீறப்பட்டதாகக் கூறப்படுவதிலிருந்து மேல்முறையீட்டாளரான என்பிஎல் நிறுவனத்தை விடுவிப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இரு தரப்பிலிருந்தும் சமர்ப்பிக்கப்பட்ட தீய எண்ணத்துடன் பொய்யுரைத்தாக கூறப்படுவது நிராகரிக்கப்பட்டது. மேலும், இவ்விவகாரத்தில் எழுந்த சர்ச்சையை உணர்ந்து, எதிர்கால நல்வாழ்வினைக் கருதி இணக்கமான தீர்வை சம்பந்தப்பட்டோர் எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
மேல்முறையீட்டு வழக்கின்போது என்பிஎல் நிறுவனத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கந்தசாமி ராஜேந்திரன், இவ்வழக்கு ஒரு நீண்ட சட்டப்போராட்டம் எனவும், வழக்கு நடந்த காலத்தில் தம் கட்சிக்காரர்கள் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளாயினர் என்றும் தமிழ் முரசிடம் கூறினார்.
“ஆரம்பக்கட்டத்தில், வர்த்தக முத்திரை பயன்பாடு குறித்து சுமுக உடன்பாடு ஏற்படுத்தும் நோக்கில் நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டு, எதிர்பார்த்த தீர்வு கிடைக்கவில்லை.
“ஆயினும், தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, என்பிஎல் நிறுவனம் அதன் வர்த்தகப் பொருள்களில் ‘நல்லி’ எனும் பெயரைச் சுதந்திரமாகப் பயன்படுத்த முடியும்,” என்றார் அவர்.
எதிரணியினர் அவர்களின் வர்த்தக அடையாளப் பலகைகளில் ‘நல்லி’ எனும் பெயரைத் தனி வணிகப் பெயராகப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ‘நல்லி சின்னசாமி செட்டி’ என்றே பயன்படுத்த வேண்டும்.
அதேவேளையில், என்பிஎல் நிறுவனத்தின் வர்த்தக முத்திரை பயன்பாட்டின்போது தனது வணிக அடையாளக் குறியீடான ‘வுமன் ஃபேஸ் மார்க்’ எனப்படும் பெண்ணின் முகத்தைத் தாங்கிய தொகுப்பு குறியீட்டைக் கொண்டிருக்க வேண்டும்,” என்று தீர்ப்பின் முக்கிய அம்சங்களை விவரித்தார் திரு ராஜேந்திரன்.
“இந்த மேல்முறையீடு, பணம் சம்பந்தப்பட்டது அல்ல. அது ‘நல்லி’ எனும் வர்த்தகப் பெயரையும் அதன் நன்மதிப்பையும் பற்றியது. என் கட்சிக்காரர்களுக்குக் கிடைத்துள்ள தீர்ப்பு, முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியைக் குறிக்கிறது,” என்று குறிப்பிட்டார் அவர்.
இதற்கிடையே, இவ்வழக்கின் மற்றொரு தரப்பினரான என்சிசிபிஎல்-ஐ தொடர்புகொண்டு அதன் கருத்துகளைப் பெறத் தமிழ் முரசு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

