இந்தியப் பண்பாடுகளை ஒன்றிணைத்த ‘நமஸ்தே பாரத்’

கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள்

இந்தியப் பண்பாடுகளை ஒன்றிணைத்த ‘நமஸ்தே பாரத்’

படம்: தமிழ் முரசு

30 Oct 2026 - 6:00 am

3 mins read

வணிக நிறுவனங்கள் தங்களின் வருங்கால வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்வதற்கான ஒரு சிறந்த தளமாக விளங்கி வருகிறது ‘நமஸ்தே பாரத்’ கண்காட்சி.

இது வணிகம் முதல் வணிக வாடிக்கையாளர்வரை (B2B2C) முறையிலான ஒரு தனித்துவமான தளமாகும்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டவற்றை உலகளவில் கொண்டுசெல்ல குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், குடிசைத் தொழில்கள், கைவினைஞர்கள், கிராமப்புற - நகர்ப்புற பெண் தொழில்முனைவோர் ஆகியோரை ஊக்குவிப்பதன்மூலம், அவர்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கான மின்வணிகச் சூழலை ஏற்படுத்துவதே இந்தக் கண்காட்சியின் முக்கிய நோக்கம்.

இவ்வாண்டுக் கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் பங்கேற்று, கலைகள், மரபு, உணவு வகைகள், உயர்தர ஆடைகள், இயற்கையான கைவினைப் பொருள்கள் உள்ளிட்ட பல புதுமையான தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளனர்.

‘நமஸ்தே பாரத்’ கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
‘நமஸ்தே பாரத்’ கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. - படம்: தமிழ் முரசு

2013ஆம் ஆண்டு முதல் ‘டி ஐடியாஸ் பிரைவேட் லிமிடெட்’ இக்கண்காட்சியை நடத்தி வருகிறது.

“நமஸ்தே பாரத் என்பது வெறும் ஒரு நிகழ்வு மட்டுமன்று, அது ஓர் உணர்வு,” என்கிறார் டி ஐடியாஸ் நிறுவனர் பூர்ணிமா காமத்.

“விற்பனையாளர்களில் பலரும் கிராமப்புறங்களைச் சேர்ந்த கைவினைஞர்கள், நெசவாளர்கள் என்பதுதான் நமஸ்தே பாரத் கண்காட்சியின் தனித்துவம். அவர்கள் இடைத்தரகர்கள் அல்லர். அவர்கள்தான் பொருள்களின் நேரடி உற்பத்தியாளர்கள். அவர்களே விற்பனையாளர்கள் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருள்களும் ஒரு நல்ல அனுபவமும் பெறமுடியும்,” என்றார் திருவாட்டி பூர்ணிமா.

‘வயான் திரெட்ஸ் ஆப் இந்தியா’ என்ற நிறுவனத்தின் உரிமையாளர் அஜந்தா நைக், கோவா மாநிலத்தைச் சேர்ந்தவர். நமஸ்தே பாரத் கண்காட்சியில் அவரது நிறுவனம் பங்கேற்பது இதுவே முதன்முறை.

“இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளவை அனைத்தும் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் நாங்கள் தனித்துவமாகத் தயாரிக்கும் புடவைகள் ஆகும். இவை பாரம்பரிய கைத்தறித் துணிவகைகள். தூய பட்டு, ஜார்ஜெட், சிஃபான், லெஹரியா, கட்ச் பகுதியின் நேர்த்தியான மோடால், டோலா பட்டுப் புடவைகள் போன்றவை இதில் அடங்கும். இங்குள்ள எந்த இரு புடவைகளும் ஒரே மாதிரியாக இருக்காது, ஒவ்வொன்றும் தனித்துவமானவை,” என்று அவர் விளக்கினார்.

நமஸ்தே பாரத் கண்காட்சியில் பங்கேற்ற வாடிக்கையாளர்களில் ஒருவரான லிட்டில் இந்தியா வட்டரத்தில் வசிக்கும் சுதா ஆனந்த், தம் தோழியருடன் கண்காட்சியில் கலந்துகொண்டார்.

“நமஸ்தே பாரத் கண்காட்சியில் சில புடவைகள் இந்தியாவைவிட இங்கு மலிவாக உள்ளன. இந்தியாவை ஒப்பிடும்போது தனித்துவமான கலைப்படைப்புப் புடவைகள் இங்கு விலை குறைவாகக் கிடைக்கின்றன. மேலும், வடிவமைப்பாளர் ஆடைகளை இங்கு எளிதாகப் பெற முடிகிறது. அதனால்தான் என் தோழியருடன் தீபாவளிக்குப் பொருள்கள் வாங்க இந்தக் கண்காட்சிக்கு வந்தேன்,” என்று அவர் சொன்னார்.

இதுபோன்ற கண்காட்சி சிங்கப்பூரின் பல இன சமூகத்தில் இந்தியப் பண்பாட்டைக் காட்சிப்படுத்துவதற்கான ஒரு தளமாகவும், கைவினைஞர்களும் நெசவாளர்களும் வாடிகையாளர்களை அணுகக்கூடிய வாய்ப்பாகவும் அமைகிறது என்றும் திருவாட்டி சுதா குறிப்பிட்டார்.

மேலும், நாட்டுப்புறக்கலை, உடல்நலம் குறித்த கலந்துரையாடல்கள், இந்தித் திரைப்படவுலக நடனப் பயிலரங்குகள், நவீன ஆடை வடிவமைப்பு முதல் ஆடம்பரப் பொருள்கள் வரை, புகைப்படக் கலை முதல் கைவினைத் தொழில்வரை என பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளையும் காட்சியமைப்புகளையும் ‘நமஸ்தே பாரத்’ ஒருங்கிணைத்துள்ளது.

சிறப்பு நிகழ்ச்சியின் தொகுப்பாக, தமிழ் முரசுவும் தப்லாவும் இணைந்து நடத்திய நல்வாழ்வுக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதில் நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் குடும்ப மருத்துவ வல்லுநருமான மருத்துவர் ஹரேஷ் சிங்கராஜு, உடற்பயிற்சி நிபுணர் சுரேஷ் வனஸ் ஆகியோர் நல்வாழ்வு, உடற்பயிற்சி போன்றவை குறித்து விரிவான ஆலோசனைகளையும் பயனுள்ள தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.

இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சி, சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு கண்காட்சி மையத்தில் அக்டோபர் 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை அரங்கேறியது.

குறிப்புச் சொற்கள்