குடும்பங்கள் வலுவான சமூகப் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வதற்கான நல்வாய்ப்புகளை இரண்டாம் முறையாக நடைபெறும் ‘நம்ம குடும்பம்’ உருட்டுப்பந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவுத் தலைவர் ந.குணாளன் கூறினார்.
புக்கிட் பாத்தோக் ஹோம்டீம் என்எஸ் வளாகத்தில் ஜூலை 4ஆம் தேதி நடைபெற்ற அந்நிகழ்ச்சிக்கு மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவும் சிங்கப்பூர் பொதுமக்கள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்தன.
“ஒரே உருட்டுப்பந்துத் தடத்தில் தாத்தா-பாட்டி, பெற்றோர், பிள்ளைகள் என மூன்று தலைமுறையினரும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி விளையாடியதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.
“பரபரப்பான இன்றைய உலகில், குடும்ப உறுப்பினர்கள் தங்கள் பல்வேறு பொறுப்புகளுக்கு நேரம் ஒதுக்கி குடும்பத்தினருடன் செலவழித்து மகிழ்வதைக் காண்பது இன்பது தருகிறது. அந்த வகையில், ‘நம்ம குடும்பம்’ நிகழ்ச்சி உண்மையிலேயே ஒரு வெற்றியாகும்,” என்று திரு குணாளன் பெருமிதத்துடன் கூறினார்.
சிறுவர்கள், பெற்றோர், மூத்தோர் என 100க்கும் அதிகமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சிறப்பாக விளையாடி முதல் மூன்று நிலைகளில் வந்த குடும்பங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும், ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி, சிறந்த குழுவாக விளங்கி, ஒற்றுமையை வெளிப்படுத்திய குடும்பங்கள் சிறப்புக் ‘குடும்ப உணர்வு விருது’ பெற்றன.
தம் குடும்பத்தின் சார்பில் ‘குடும்ப உணர்வு’ விருதைப் பெற்றுக்கொண்ட டியோன் 44 வயது கேத்தி ஜேம்ஸ், தமது குடும்பத் தொழிலில் உள்ள பணிச்சுமைக்கு இடையிலும், உருட்டுப்பந்து போன்ற விளையாட்டுகளில் தம் குடும்பத்தினர் அனைவரும் தவறாமல் பங்கேற்பார்கள் என்று கூறினார்.
“என் பெற்றோர், என் பிள்ளைகள், நாங்கள் என மூன்று தலைமுறைகளைக் கடந்து, குடும்ப உறுப்பினர்களிடையே வலுவான பாசப்பிணைப்பை ஏற்படுத்துவது எங்களின் நோக்கம்.
“அடுத்த தலைமுறையான எங்கள் பிள்ளைகளும் குடும்பப் பிணைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அதனைத் வருங்காலத் தலைமுறைக்கும் கற்பிக்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம்,” என்றார் அவர்.
சிங்கப்பூர் பொதுமக்கள் சங்கத் தலைவர் எம்.பி.செல்வம், “பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த 24 குடும்பங்கள் உருட்டுப்பந்து விளையாட்டில் மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் ஈடுபடுவதைக் காண்பது அற்புதமாக உள்ளது,” என்று கூறினார் டியோன் கேத்தி ஜேம்ஸ்.

