சிங்கப்பூரின் தொடக்கக் காலத்திலிருந்தே இந்திய முஸ்லிம்கள் வணிகம், கலை, கல்வி எனப் பல துறைகளில் செயல்படுவதன் மூலம், தேசத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்து வருவதாக மனிதவள, கலாசார, சமூக, இளையர் துறைத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை சார்பில் ஆகஸ்ட் 17ஆம் தேதி பென்கூலன் பள்ளிவாசலில் தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் பங்கேற்றுப் பேசிய திரு தினேஷ் வாசு, “சமூகத்தில் சவால்களை எதிர்கொள்ள இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது. இந்தியச் சமூக முன்னேற்றத்துக்காக நானும் சட்ட, போக்குவரத்து துணை அமைச்சர் முரளி பிள்ளையும் இணைந்து வழிநடத்தவுள்ள ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக முஸ்லிம் சமூகத்துடனும் இணைந்து செயல்பட விரும்புகிறேன்,” என்றார்.
பொதுவாக, பல நாடுகளில் இரட்டை அடையாளம் கொண்டவர்களுக்குச் சவால் இருக்கும் என்ற அவர், “சிங்கப்பூர், முற்றிலும் வேறுபட்ட சூழல் கொண்டது. இந்திய முஸ்லிம்கள் தங்களது இனம், மொழி என இரு அடையாளங்களையும் பெருமையுடன் கொண்டாட திட்டங்களும் சமூகப் பழக்க வழக்கங்களும் வழிவகுக்கின்றன,” என்றார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மகிழ்ச்சி என்றும் தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை எதிர்நோக்குவதாகவும் அவர் சொன்னார்.
நிகழ்ச்சியில் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன், இந்திய மரபுடைமை நிலையத்தின் தலைவரும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பதிவாளருமான ரா.ராஜாராம், தமிழ் முரசின் ஆசிரியர் த.ராஜசேகர் உள்ளிட்ட பல பேராளர்களும் பங்கேற்றனர்.
விருந்தினர்களை வரவேற்றுப் பேசிய சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் முகமது பிலால், “பொதுவாக, எல்லா நாடுகளும் பெரும் போராட்டங்களுக்குப் பின்னரே சுதந்திரம் பெறும். சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற பின் பெரும் போராட்டங்களைச் சந்தித்து வளர்ச்சி கண்டுள்ளது. அதனை நினைவுகூரவும் கொண்டாடவும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது,” என்றார்.
திருக்குர்ஆனில் இருந்து சில வசனங்களை ஓதி, அவ்வசனங்களை மொழிபெயர்த்துத் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்த லீ குவான் யூ, யூசோஃப் இஷாக், எஸ்.ராஜரத்தினம், எம்.கே.ஏ.ஜபார், கோ.சாரங்கபாணி, ஏ.என்.மொய்தீன் ஆகியோர் குறித்துப் பேசினார் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி ஃபவ்சுல் ஹினாயா. தேசத்துகான சேவை எனும் தலைப்பில் பேசினார் தொழில்நுட்ப ஊழியர் முகம்மது இம்ரான்.
தொடர்புடைய செய்திகள்
பின்னர், இந்திய முஸ்லிம் பேரவையின் வரலாறு, பென்கூலன் பள்ளிவாசலின் முக்கிய நிகழ்ச்சிகள் ஆகியவை குறித்த காணொளி ஒளிபரப்பப்பட்டது. பங்கேற்பாளர்கள் அனைவரும் தேசிய கீதத்தைப் பாடினர். பென்கூலன் பள்ளிவாசல் தலைவர் ஹாஜி எம்.ஒய்.முஹம்மது ரஃபீக் ஆங்கிலத்திலும் தமிழிலும் தேசிய உறுதிமொழி கூற அனைவரும் அதை முன்மொழிந்தனர்.
பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் விருந்துணவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.