தேசிய தினத்தை முன்னிட்டு, குடும்பங்களை விளையாட்டு வழியே ஒன்றிணைத்து கொண்டாடும் நோக்கில், குடும்பமாக விளையாடி தேசிய தினத்தை கொண்டாடுவதற்கான ஒரு நிகழ்ச்சியை சிங்கப்பூர் விளையாட்டு மன்றம் (ஸ்போர்ட்எஸ்ஜி) ஏற்பாடு செய்தது.
எம்ஒய் வோர்ல்டு @ கேன்பெரா ஈஸ்ட்லிங்க் மையத்தைச் சேர்ந்த 4 முதல் 6 வயதுடைய 200 குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி, இவ்வாண்டு ஒன்பதாவது முறையாக நடைபெற்றது.
ஆண்டுதோறும் நடைபெறும் ‘நர்ச்சர் கிட்ஸ் ஃபேமிலி பிளேடே’ நிகழ்வு, இவ்வாண்டு ‘எம்ஒய் வோர்ல்டு’ உடன் இணைந்து முதன்முறையாகப் பெற்றோர்களையும் விளையாட்டுகளில் பங்கேற்கச் செய்தது.
இந்நிகழ்ச்சி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) காலை கேன்பெரா பிளாசாவில் நடைபெற்றது. சிங்கப்பூரர்கள் பல தலைமுறைகளாக ரசித்து விளையாடிவரும் பாரம்பரிய விளையாட்டுகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய தினக் கருப்பொருள் விளையாட்டுகள் இதில் இடம்பெற்றன.
சிங்கப்பூர் விளையாட்டு மன்றத்தின் வருடாந்தர ‘கெட் ஆக்டிவ்! சிங்கப்பூர்’ (GetActive! Singapore) இயக்கத்தின் முக்கிய அங்கமாக இந்த நிகழ்வு திகழ்கிறது. தேசிய தினத்தை முன்னிட்டு, விளையாட்டு வழியே மக்களை ஒன்றிணைத்து நல வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதே அதன் நோக்கம்.
ஆகஸ்ட் 3 முதல் 7 வரை தீவு முழுவதும் உள்ள 58 எம்ஒய் வோர்ல்டு மையங்களைச் சேர்ந்த 5,000 பாலர் பள்ளிக் குழந்தைகளையும் அவர்களின் பெற்றோர்களையும் இந்த முயற்சி சென்றடைந்தது.
கலாசார, சமூக, இளையர்துறை அரசாங்க நாடாளுமன்றக் குழு உறுப்பினர் எலிசா சென் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு குடும்பங்களை உற்சாகப்படுத்தினார்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தரமான நேரத்தைச் செலவிடவும், குழந்தைகளின் சமூகத் திறன்களை நேரில் காணவும் அந்நிகழ்வு வாய்ப்பாக அமைந்தது.
“என் மகள் மற்றக் குழந்தைகளுடன் எவ்வாறு பழகுகிறாள் என்பதை என்னால் பார்க்க முடிந்தது. அவள் மற்றவர்களுக்கு உதவியாக இருந்ததைப் பார்த்து வியந்தேன். என் குடும்பத்துடன் தேசிய தினத்தைக் கொண்டாட இது ஒரு நல்ல வழி,” என்று இரண்டு குழந்தைகளின் தாயாரான திருவாட்டி பானு பென் கூறினார்.
பணிச்சுமைக்கு இடையே குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குவது சவாலாக இருக்கும் பெற்றோருக்கும் இந்த நிகழ்வு பயனுள்ளதாக அமைந்தது.
“நானும் என் கணவரும் வேலைக்குச் செல்வதால், குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவது கடினமாக உள்ளது. அதனால் குடும்ப உறவை வலுப்படுத்த இதுபோன்ற நிகழ்ச்சிகள் மிகவும் உதவியாக இருக்கின்றன,” என்று திருவாட்டி வித்யா நாயுடு, 30, தெரிவித்தார்.


