நிலப்படத்தில் ஒரு சிறு புள்ளியாகக் காட்சியளித்தாலும், சுதந்திரம் பெற்றபின் இந்த 59 ஆண்டுகளில் சிங்கப்பூர் அடைந்துள்ள வளர்ச்சி அளப்பரியது.
ஆயினும், சிங்கப்பூரின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் நமது கடமைகளை நினைவில்கொண்டு, வருங்காலத்திலும் அவற்றைச் செவ்வனே நிறைவேற்றுவது முக்கியம் என்று வலியுறுத்தியுள்ளார் முஸ்லிம் லீக் (சிங்கப்பூர்) சமூக நல்லிணக்கச் சேவை அமைப்பின் தலைவரும், மூத்த சமூக அடித்தளத் தலைவருமான புதிய நிலா மு. ஜஹாங்கீர்.
ஜாமியா சிங்கப்பூர் மற்றும் முஸ்லிம் லீக் (சிங்கப்பூர்) சமூக நல்லிணக்கச் சேவை அமைப்பு இணைந்து ஆகஸ்ட் 4ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஜாமியா இஸ்லாமிய மையத்தில் தேசிய தின விழா ஒன்றை நடத்தின. இந்த இரண்டு அமைப்புகள் ஒன்றுசேர்ந்தது இதுவே முதல்முறை. ஜாலான் புசார் குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் ரிசால் வான் ஸக்காரியா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இவ்விரண்டு அமைப்புகள் ஒன்றிணைந்து தேசிய தினத்தை கொண்டாடுவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் முஸ்லிம் லீக் (சிங்கப்பூர்) சமூக நல்லிணக்க சேவை அமைப்பு, 20 மாணவர்களுக்குக் கல்வி நிதியுதவி வழங்கியது.
“இந்த நிதியுதவி என் கல்விப் பயணத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், என்னைப் போன்ற மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி கிடைப்பதால் தன்னம்பிக்கையும் கூடுகிறது,” என்றார் கல்வி நிதியுதவி பெற்ற மாணவர்களில் ஒருவரான அஷ்வக் அஹமத், 15.
‘ஒன்றாய் ஒன்றுபட்ட மக்களாய்’ எனும் இவ்வாண்டின் தேசிய தின கருப்பொருளை ஒட்டி அமைந்த இந்நிகழ்ச்சியின்போது, ஜாமியா தொடக்கக் கல்வி மைய மாணவர்கள் தேசிய தின பாடல்களைப் பாடி பலரையும் மகிழ்வித்தனர்.
“மக்களின் கடின உழைப்பும் நம் முன்னோடித் தலைவர்கள் ஆற்றிய பங்கும் இன்று சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. சிங்கப்பூரை மேலும் உயர்த்த நாம் தொடர்ந்து ஒற்றுமையாகப் பாடுபட வேண்டும்,’ என்றார் ஜாமியா சிங்கப்பூரின் முதன்மை இயக்குநர் டாக்டர் முகமது சலீம்.
தொடர்புடைய செய்திகள்
இதுபோன்ற கொண்டாட்டங்கள் நம் சமூகத்தையும் சமுதாயத்தையும் அடையாளப்படுத்துவதாக திரு ஜஹாங்கீர் குறிப்பிட்டார்.