அரங்கை அதிரவைக்க அணிவகுப்பு ஏற்பாடுகள் தயார்

அரங்கை அதிரவைக்க அணிவகுப்பு ஏற்பாடுகள் தயார்

4 mins read
15f645c5-d9b3-4922-8c04-152c241aa464
மனித இனத்தின் வரலாற்றையும், பல்லின, பண்பாட்டுச் சமூகத்தின் வேர்களையும் எடுத்துக்காட்டும் கப்பல் வடிவிலான ஒளிபொருந்திய அமைப்புகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் விலங்கினங்களின் வரலாற்றை எடுத்தியம்பும் வகையில் கம்பீரமான, கற்பனைத்திறன்மிக்க வடிவமைப்புகள் இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பில் இடம்பெறவுள்ளன.

இவ்வாண்டு தேசிய தினக் கொண்டாட்டங்களில் பலதரப்பட்ட அலங்கார ஊர்திகளும் பொம்மைகளும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் கலைநயத்துடனும் நேர்த்தியாகவும் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

தேசிய தின அடையாள பொம்மைகளைத் தாண்டி, மூன்று வகை சிறப்புப் பொம்மைகளும் இடம்பெறுகின்றன. காற்று அடைக்கப்பட்ட பொம்மைகள், மூன்று சக்கர மிதிவண்டியில் வலம் வரும் பொம்மைகள், வடிவமைக்கப்பட்ட தளத்தின்மீது கட்டமைக்கப்பட்ட அலங்கார ஊர்தியில் வரும் பொம்மைகள் ஆகியவே அவை. அலங்கார ஊர்திகளில் சில ‘ஜாய்ஸ்டிக்’ எனப்படும் இயக்குபிடியின் உதவியுடன் வலம்வரும்.

இரண்டாவது பிரிவில், பாதுகாத்தல், (Protect) வழங்குதல், (Provide) படைத்தல், (Create) கட்டமைத்தல், (Build) பராமரித்தல், (Care) நீதி (Justice) ஆகிய ஆறு முக்கிய விழுமியங்களை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்த அலங்கார ஊர்திகள் வலம்வரும்.

ஆறு பிரிவுகளைக் கொண்ட இவ்வாண்டு அணிவகுப்பு நிகழ்ச்சியின் மூன்றாவது பிரிவில், செழிப்பான துறைமுகமாகத் தொடங்கிய சிங்கப்பூரின் வரலாற்றையும், பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றும் அங்கத்தை வடிவமைத்துள்ளனர் திருவாட்டி பெட்ரினா டான் டான், 37, குழுவினர்.

தமது குழு வடிவமைத்த பிரம்மாண்டப் பாவைகளுடன் வடிவமைப்பாளர் பெட்ரினா டான் டான்.
தமது குழு வடிவமைத்த பிரம்மாண்டப் பாவைகளுடன் வடிவமைப்பாளர் பெட்ரினா டான் டான். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மூன்றாவது பிரிவு, மின்னும் விளக்குகளுடன் ஒளிபொருந்திய அங்கமாக வடிவமைக்கப்பட்டதைக் குறிப்பிட்ட அவர், அது அப்பிரிவில் இடம்பெறும் பிற நிகழ்ச்சிகளோடு ஒத்திசைவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

தங்க நிறத்தில், ஐந்து சருகுமான்கள் (Mousedeers), இரண்டு தப்பீர் பன்றிகள் (Tapirs) என ஏழு விலங்குப் பொம்மைகள் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டினார்.

அவை சிறிய மூன்று சக்கர மிதிவண்டியின்மேல் அமைக்கப்பட்டிருக்க, அவற்றை ஒருவர் மிதித்து இயக்க, ஒருவர் பின்னால் நின்று உதவுவார்.

தேசிய தின அணிவகுப்பின் இரண்டாவது முன்னோட்டக் காட்சி.
தேசிய தின அணிவகுப்பின் இரண்டாவது முன்னோட்டக் காட்சி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கூண்டுவிளக்குகள், கைப்பாவைகள் ஆகிய இரண்டின் வடிவமைப்பு அடிப்படையில் அவை அமைந்துள்ளன. அதன்படி, மிதிவண்டி இயக்கப்படும்போது, விலங்குகளின் கால்கள் மேலும் கீழும் அசையும். உள்ளே இருக்கும் மின்விளக்கின் ஒளி தரையில் பட்டு, ஒளியும் நிழலும் இணைந்த அழகிய அமைப்புகளையும் உருவாக்கும்.

வான்சாகச நிகழ்ச்சிகள் உட்பட பல அங்கங்களுக்குக் கூடுதல் சிறப்பு சேர்க்கும், நான்கு ‘ஐமேக்ஸ்’ அளவு காட்சித்திரைகள் கொண்ட கட்டமைப்பு.
வான்சாகச நிகழ்ச்சிகள் உட்பட பல அங்கங்களுக்குக் கூடுதல் சிறப்பு சேர்க்கும், நான்கு ‘ஐமேக்ஸ்’ அளவு காட்சித்திரைகள் கொண்ட கட்டமைப்பு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“இவ்வளவு பெரிய உலோகக் கட்டமைப்புடன் கூடிய மிதிவண்டிகள் எடைமிக்கவை. அவற்றை இயக்குவது மிகவும் கடினமான செயல். அவை அனைத்தையும் கருத்தில்கொண்டு அவற்றை வடிவமைப்பதில் நிறைய சவால்கள் இருந்தன,” என்ற திருவாட்டி பெட்ரினா, முதலில் சராசரி அளவுகளைக் கணக்கிட்டு அதன்படி வடிவமைத்ததாகவும், ஆனால், ஓட்டுநரின் உயரம், உடல்வாகுக்கு ஏற்ப அவற்றை இயக்குவதில் பின்னர் சிரமம் ஏற்பட்டதையும் நினைவுகூர்ந்தார்.

சிங்கப்பூரின் வரலாற்றையும் வளர்ச்சியையும் கொண்டாடும் பொம்மைகள்.
சிங்கப்பூரின் வரலாற்றையும் வளர்ச்சியையும் கொண்டாடும் பொம்மைகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இயக்குபவரின் சமநிலை தவறாத வகையிலும், அவரது உடல்வாகுக்கு ஏற்ற வகையிலும், உயரம், இருக்கை, கைப்பிடி நிலைகள் ஆகியவற்றில் சிறு சிறு மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

“கடந்த செப்டம்பர் மாதம் முதலே இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. ஏறத்தாழ ஓராண்டுகால உழைப்பின் வெளிப்பாடு இது,” என்றார் அவர்.

மிதவைக் கடற்பன்றிப் பொம்மைகள்.
மிதவைக் கடற்பன்றிப் பொம்மைகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவற்றுடன், காற்று நிரப்பப்பட்ட மிதவைக் கடற்பன்றிப் பொம்மைகளும் நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன. இது, 14ஆம் நூற்றாண்டின் தெமாசெக் காலகட்டத்தில் பிரபலமாக இருந்த பீங்கான் வணிகத்தை நினைவூட்டும் வகையில் வெள்ளை, நீல நிறங்களைக் கொண்டிருக்கும்.

தொடர்ந்து, மனித இனத்தின் வரலாறு, பல்லின, பண்பாட்டுச் சமூகத்தின் வேர்களை எடுத்துக்காட்டும் வகையில், கப்பல் வடிவிலான ஒளிபொருந்திய பொம்மைகளும் அதில் இடம்பெறும்.

ஆறரை மீட்டர் நீளமும் 4.7 மீட்டர் உயரமும் கொண்ட ஆறு கப்பல்கள் அதில் இடம்பெறும்.

பார்வையாளர்களுக்கு அவற்றின் கருப்பொருள் தெளிவாகச் சென்றடைவதுடன், குழந்தைகளுக்குப் பொம்மைகள் தரும் உற்சாக உணர்வையும் கொண்டுவர ஏதுவாக வடிவமைப்புகள் பலமுறை மாற்றியமைக்கப்பட்டு, இறுதி வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளதையும் திருவாட்டி பெட்ரினா சுட்டிக்காட்டினார்.

ஆளில்லா வானூர்தி நிகழ்ச்சி

தேசிய விளையாட்டரங்கில் புறப்படத் தயார்நிலையில் வைக்கப்படும் இடத்தில், ஆளில்லா வானூர்திகளுடன் திரு குவெக். ‌
தேசிய விளையாட்டரங்கில் புறப்படத் தயார்நிலையில் வைக்கப்படும் இடத்தில், ஆளில்லா வானூர்திகளுடன் திரு குவெக். ‌ - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டு முதன்முறையாக 300 ஆளில்லா வானூர்திகள் கொண்ட ஒளி நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.

“அனைத்து வானூர்திகளையும் எவ்விதத் தொழில்நுட்பச் சிக்கலுமின்றி, ஒளி ஒலி அமைப்புகளுடன் ஒத்திசைவுடன் செயல்படுத்துவது சிரமமானதுதான்,” என்றார் அந்த அங்கத்தை வழிநடத்தும் மூத்த நிரலாக்க மேலாளர் குவெக் ‌ஷிங் வெய்.

இந்த வானூர்திக் காட்சியுடன், இரு வான்சாகசக் கலைஞர்களும் ஒரு பாடகரும் இணைந்து நிகழ்ச்சியைப் படைப்பர்.

அம்பு போன்ற வடிவமைப்பில் அமைந்த மேடைக்குமேல், 46 மீட்டர் x 12 மீட்டர் x 7 மீட்டர் அளவிலான கனசெவ்வக வடிவத் திரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு நடுவில் வான்சாகசக் கலைஞர்கள் இறங்கி, தொங்கியபடி மேற்கொள்ளும் சாகசக் காட்சிகள் பார்வையாளர்களின் கண்களுக்குப் பெருவிருந்தாக அமையும்.

அவை இணைந்து அழகிய காட்சியாக அமைய ஏதுவாக, வானூர்திகள் பறக்கும் இடங்களும் அவை செல்லும் பாதையும் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளதைத் திரு குவெக் சுட்டிக்காட்டினார்.

மேலும், இது உள்ளரங்கக் காட்சி என்பதால் ‘ஜிபிஎஸ்’ எனும் பொதுவான தடங்காட்டி அமைப்புக்குப் பதிலாக, ‘உள்ளரங்கத் தடங்காட்டி ’ (indoor positioning system) பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அங்கம் துல்லியமாக நடந்தேற கடந்த ஒரு மாத காலமாகத் தயாராகி வருவதாகவும் அவர் சொன்னார்.

ஆளில்லா வானூர்திக் காட்சி அங்கத்தில் இடம்பெறவுள்ள வான்சாகசக் கலைக்காட்சி.
ஆளில்லா வானூர்திக் காட்சி அங்கத்தில் இடம்பெறவுள்ள வான்சாகசக் கலைக்காட்சி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மூவர் இந்த அங்கத்தில் நிகழ்ச்சி நடத்தும் நிலையில், அவர்களுக்கும் வானூர்திகளுக்கும் குறைந்தது மூன்று மீட்டர் பாதுகாப்பான இடைவெளி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர்க் கதைகளைக் கொண்டாடும் அலங்கார ஊர்திகள்.
சிங்கப்பூர்க் கதைகளைக் கொண்டாடும் அலங்கார ஊர்திகள். - படம்: தேசிய தின அணிவகுப்பு ஏற்பாட்டுக் குழு

கெடுவாய்ப்பாக, ஏதேனும் ஒரு வானூர்தி தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் செயலிழக்க நேரிட்டால், அதற்காக 12 மாற்று வானூர்திகளும் தயாராக இருப்பதையும் திரு குவெக் சுட்டினார்.

தேசிய தின நிகழ்ச்சி வரலாற்றில் ஆகப் பெரிய ஒளி வடிவமைப்பு

வண்ண ஒளிவிளக்குகளுடன் களைகட்டும் அங்கம்.
வண்ண ஒளிவிளக்குகளுடன் களைகட்டும் அங்கம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் 1,600 நகரும் விளக்குகள் ஒளிசிந்தி மகிழ்விக்கவுள்ளன. தேசிய தின நிகழ்ச்சிகளின் வரலாற்றிலேயே ஆகப் பெரிய ஒளியூட்டு அமைப்பாகும்.

இந்த ஒளியூட்டு அமைப்பில் 54 லேசர், 1,654 பொழுதுபோக்கு ஒளியமைப்புகள், 170 சிறப்பு ஒளியமைப்புகள் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்