மாணவர்களின் தமிழாற்றலைக் கலைத்திறனுடன் ஒன்றிணைக்கும் தளமாக அமைந்தது நவரசத் திருவிழா 2026.
தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ் மாணவர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.
‘பஞ்சபூதங்கள்’ என்ற கருப்பொருளையொட்டி அனைத்துப் போட்டிகளும் அமைந்தன.
பெரும்பாலும், நடனம், நாடகம், பாடல், ஓவியம் வரைதல் ஆகிய திறன் போட்டிகளைத் தமிழ்மொழி விழாவில் காணலாம்.
நவரசத் திருவிழாவில் அப்போட்டிகளுடன் ‘ரீல்ஸ் சவால்’, ‘முடிவு என்ன?’ என்ற புத்தாக்கப் போட்டிகளும் நடைபெற்றன.
‘முடிவு என்ன?’ சவாலில் காலாங் இந்திய நற்பணிச் செயற்குழுவின் இளைய உறுப்பினர்களின் குறும்படம் மாணவர்களிடம் காண்பிக்கப்பட்டது.
மாணவர்கள் இணைகளாகச் சேர்ந்து அந்தக் குறும்படத்திற்கான முடிவை 45 நிமிடங்களில் உருவாக்கி நடித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) காலாங் சமூக மன்றத்தில் ஒன்பது உயர்நிலைப் பள்ளிகளிலிருந்து மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் எனப் பலரும் கூடி நவரசத் திருவிழாவில் கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
“இளம் மாணவர்களின் தமிழ் மொழி, கலைகள் மீதான ஈடுபாட்டை வலுப்படுத்தவும் தமிழ் மொழியை வாழும் மொழியாக இருக்க ஊக்குவிக்கவும் இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறுகிறது,” என்று நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு உறுப்பினரான 31 வயது வெங்கடேஷ் மயில் இராவணன் குறிப்பிட்டார்.
நாடகப் போட்டியில் ‘உள்ளத்தின் தீ’ என்ற தலைப்பில் தங்களின் படைப்பை ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மேடையேற்றினர்.
அவர்களில் 15 வயது சுமன் சுஜோட்சனா இப்போட்டியில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பங்குபெற்று வருகிறார்.
“இதைப் போன்ற போட்டிகளில் ஈடுபடுவதற்கு முதல் பரிசு பெறுவது மட்டும் காரணமாக இருக்கக்கூடாது. பேச்சுத்திறன், படைப்புத் திறன் போன்ற வாழ்க்கைக்கு இன்றியமையாத திறன்களை இந்தப் போட்டிகளின்மூலம் வளர்த்துக்கொள்ளலாம். இந்த நன்மைகளை மாணவர்களிடம் எடுத்துரைப்பது அவசியம்,” என்று சுஜோட்சனா கூறினார்.
தன் புத்தாக்கத்திறனை வளர்த்துக்கொள்ள ‘முடிவு என்ன?’ போட்டியில் கலந்துகொண்டார் காமன்வெல்த் உயர்நிலைப் பள்ளி மாணவர் ராஜவேல் சர்வேஷ்.
“போட்டியில் பிற மாணவர்களின் படைப்பைக் காணும்போது அவர்களது கண்ணோட்டங்களையும் உத்திமுறைகளையும் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது,” என்றார் உயர்நிலை மூன்றாம் வகுப்பில் பயிலும் ராஜவேல்.

