ஆசிய கலாசாரங்களை ஒன்றிணைக்கும் புதிய எக்ஸ்போ விழா

ஆசிய கலாசாரங்களை ஒன்றிணைக்கும் புதிய எக்ஸ்போ விழா

2 mins read
209650ad-4b4f-4a10-a428-b8a3d30ba130
இந்த நிகழ்வில் வணிக மையங்கள், சங்கங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  - படம்: ஷாபாஸ் நிறுவனம்

பல ஆசியக் கலாசாரங்களைப் போற்றும் முயற்சியில் ஷாபாஸ் நிறுவனம் தனது முதல் ஆசிய எக்ஸ்போ விழாவை ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியது. 

இந்த நிகழ்வில் வணிக மையங்கள், சங்கங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 

விழாவை ஆரவாரத்துடன் தொடங்கி வைத்த ஷாபாஸ் நிறுவனத்தின் தலைமை நிறுவனர் அப்துல் மாலிக் அப்துல் சலாம், “காலப்போக்கில் நாம் முன்னேறும்போது, ​​​​நமது பண்பாடு என்னவென்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அதை நினைத்து நாம் எப்போதும் பெருமைப்பட வேண்டும்,” என்று சொன்னார். 

‘கான்ஸ்டெல்லர் வென்யூஸ்’ நிறுவனத்தின் துணைத் தலைவர் இங் சிம் லிம்மும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். 

பாரம்பரிய குஷெங் இசை, மலாய், இந்திய நடனங்கள் போன்ற அங்கங்களும் கண்களுக்கு விருந்தாக அமைந்தன. 

ஆசிய நாடுகளின் இன்றியமையாத சுவைகளை வந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் பல ஆசிய உணவு வகைகளை ஷாபாஸ் கிச்சன் பரிமாறியது. 

தாய்லாந்து, இந்தோனீசியா, மியன்மார், இலங்கை, இந்தியா, பிலிப்பீன்ஸ், மலேசியா போன்ற ஆசிய நாடுகளின் முக்கியப் பழங்கள், நறுமணப் பொருள்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தேநீர் வகைகள் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டன. 

சிங்கப்பூரின் 59ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் கேக் வெட்டும் அங்கமும் இடம்பெற்றது. 

ஆசிய நாடுகளின் பண்பாட்டையும் மரபையும் எடுத்துக்கூறும் பல ஆசிய வணிகங்களை ஒன்றிணைக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்படும் இந்த எக்ஸ்போ விழா, வரும் அக்டோபர் 3ஆம் தேதியிலிருந்து 6ஆம் தேதிவரைக்கும் சிங்கப்பூர் எக்ஸ்போ, மண்டபம் 6A இல் நடைபெறும். 

இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு நடைபெற இருக்கும் ‘மெகா இந்தியன் எக்ஸ்போ’ விழாவுடன் இந்த ஆசிய எக்ஸ்போ விழாவிலும் பொதுமக்கள் கலந்துகொள்ளலாம். காலை 10  மணி முதல் இரவு 10 மணி வரை இவ்விழா இடம்பெறும்

பல ஆசியக் கலாசாரக் கண்காட்சிகள், உணவு வகைகள், பாரம்பரிய நிகழ்ச்சி அங்கங்கள், பொருள்களை  வாங்க, விற்க வாய்ப்புகள், தொழில் முனைவோருக்கான வணிக வாய்ப்புகள் போன்றவற்றை பொதுமக்கள் இந்த ஆசிய எக்ஸ்போ விழாவில் எதிர்பார்க்கலாம். 

குறிப்புச் சொற்கள்