மாற்றுத்திறனாளி காற்பந்து ஆட்டக்காரர்கள் 20 பேர் சேர்ந்து ஒரு கிலோமீட்டர் ‘டிரிபிலிங் ரிலே’ எனப்படும் பந்தைத் தொடர்ந்து உதைத்துச் செல்வதை 5 நிமிடம் 13 நொடிகளில் முடித்து புதிய சிங்கப்பூர்ச் சாதனையைப் படைத்துள்ளனர்.
50 மீட்டர் நீளம் கொண்ட திடல்பகுதியை ஆட்டக்காரர்கள் ஒவ்வொருவராகக் கடந்து இச்சாதனையைப் படைத்தனர்.
தொழில்நுட்பக் கல்விக்கழக மத்திய வளாகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிங்கா கிண்ணக் காற்பந்துப் போட்டியின்போது இச்சாதனை படைக்கப்பட்டது.
மற்ற இளையர்களைப் போல மாற்றுத்திறனாளிகளும் உற்சாகத்துடன் காற்பந்து விளையாட இப்போட்டி வழிவகுத்தது.
சிங்கப்பூரில் கடந்த 16 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் சிங்கா கிண்ண அனைத்துலகக் காற்பந்துப் போட்டி இளையர்களுக்குப் போட்டித்தன்மைமிக்க சூழலில் காற்பந்து விளையாடும் வாய்ப்பை வழங்குகிறது.
புதிய முயற்சியாக மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் கண்டது.
சென்ற ஆண்டு நடைபெற்ற போட்டியுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டதாகச் சிங்கா கிண்ணப் போட்டியின் நிறுவனர் செல்வகுமார் பன்னீர்செல்வம் கூறினார்.
“சென்ற ஆண்டு இடம்பெற்ற நிகழ்ச்சி போட்டியாக இருந்ததால் விளையாட்டாளர்கள் சிலருக்குக் காயங்களும் மனக்கசப்பும் ஏற்பட்டன. அதனால், இம்முறை நட்புமுறை ஆட்டமாக மாற்றி விளையாட்டாளர்களை மகிழ்ச்சியாக விளையாட ஊக்குவித்தோம்,” என்றார் அவர்.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகச் சாதனை முயற்சி வடிவமைக்கப்பட்டதென அவர் குறிப்பிட்டார்.
“மாற்றுத்திறனாளி ஆட்டக்காரர்களின் திறனுக்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்ற நோக்குடன் முயற்சி அமைந்தது,” என்று திரு செல்வகுமார் கூறினார்.
இளையர் பிரிவில் ஒன்பது குழுக்களும் பொதுப் பிரிவில் ஒன்பது குழுக்களும் போட்டியில் பங்கெடுத்தன. ஒவ்வொரு குழுவிலும் உடற்குறையற்ற விளையாட்டாளர் ஒருவரும் இடம்பெற்றிருந்தார்.
“உடற்குறையற்ற விளையாட்டாளர்களும் மாற்றுத்திறனாளி விளையாட்டாளர்களும் சேர்ந்து விளையாடுகையில் இருதரப்பினருக்கும் இடையே நட்புறவு, புரிந்துணர்வு, பரிவு ஆகியவை அதிகரிக்கும்,” என்று நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் குமரன் ஆறுமுகம் சொன்னார்.
விளையாட்டாளர்களில் ஒருவரான 13 வயது ஷர்மன் கேசவன், போட்டியில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சியளித்ததாகக் கூறினார்.
தமது பேரனுக்கு இத்தகைய நடவடிக்கைகள் பெரிதும் உதவுவதாகத் தாத்தா திரு குணசேகரன் பகிர்ந்துகொண்டார்.
“என் பேரனுக்குச் சிறிதளவு தொடர்புக் குறைபாடு இருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் அவருக்கு அது உடற்பயிற்சியாக அமைவதோடு மனநிறைவும் அளிக்கிறது,” என்றார் திரு குணசேகரன்.
போட்டியின் மற்றொரு சிறப்பம்சமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மற்ற விளையாட்டு வீரர்களுடன் இணைந்து நட்புமுறை ஆட்டத்தில் விளையாடினர்.
வெளியுறவு, தேசிய வளர்ச்சித் துணை அமைச்சர் ஆல்வின் டான், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் ஹமீது ரசாக், கேப்ரியல் லாம் ஆகியோரும் விளையாட்டில் கலந்துகொண்டனர்.
“காற்பந்தில் எந்தப் பாகுபாடும் கிடையாது. நிறம், மொழி, சமயம், உடற்குறை என்று எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து விளையாட இப்போட்டி நல்ல தளம் அமைத்துத் தந்துள்ளது.
“திடலில் அவர்களுக்குச் சமமான வாய்ப்பு கிடைக்கப் பெற்றது போலவே வாழ்விலும் அவர்களுக்குச் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்,” என்று டாக்டர் ஹமீது ரசாக் வலியுறுத்தினார்.
