பொதுப் பேருந்துப் பயணங்கள் சுமுகமாக இருக்கவேண்டும் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பு. ஆனால் சில சமயங்களில் அது நிறைவேறுவதில்லை.
அப்படித்தான் ஒருமுறை இரு பயணிகளுக்கு இடையிலான வாக்குவாதம் 27 வயது தாருகாவின் பேருந்துப் பயணத்தைக் கசப்பாக்கியது.
அந்த வாக்குவாதத்தை நிறுத்த பேருந்து ஓட்டுநர் படாத பாடுபட்டார். பயணத்தையும் அது வெகுவாகத் தாமதப்படுத்தியதைத் தாருகா பகிர்ந்துகொண்டார்.
அப்போதே வாக்குவாதம் செய்த பயணிகளைப் பேருந்திலிருந்து இறக்கிவிட்டிருந்தால் நேரம் மிச்சமாகியிருக்குமே என்றார் தாருகா.
தாருகாவைப் போன்ற பல பயணிகளுக்கு இனிப் பேருந்துப் பயணங்கள் சுமுகமாக அமையும்.
தொந்தரவு தரும் பயணிகளை பேருந்திலிருந்து வெளியேறச் சொல்ல பேருந்து ஓட்டுநர்களுக்கு திங்கட்கிழமை (மார்ச் 10) முதல் அதிகாரம் வழங்கப்படுகிறது.
பேருந்தில் பயணம் செய்வோர் சில விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது கட்டாயம். அவ்வாறு செய்யாதோரை ஓட்டுநர் எப்போது வேண்டுமானாலும் பேருந்திலிருந்து இறங்கச் சொல்லலாம்.
பேருந்துப் பயணிகள் யாருக்கும் தொந்தரவு தராத வகையில் நடந்துகொள்ளவேண்டும்; பொதுச் சுகாதாரத்தைப் பின்பற்றவேண்டும்; பாதுகாப்பான முறையில் பயணம் செய்யவேண்டும்; கனிவன்புடன் இருக்கவேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
இந்த விதிமுறைகளை மீறும் பயணிகளை வெளியேற்றுவதற்கு ஓட்டுநர்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தால் தொந்தரவு ஏற்படுத்தும் சம்பவங்கள் குறையும் என்கிறார் 21 வயது ரியா.
பொதுப் போக்குவரத்தில் பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்வோரைக் கண்டிக்க இந்த அதிகாரம் அவசியம் என்றார் 33 வயது திரு முருகன்.
பேருந்து ஓட்டுநர்கள் புதிய நடைமுறையை வரவேற்றாலும் அதை முழுமையாகப் பயன்படுத்துவதில் சிறு தயக்கம் இருக்கவே செய்யும் என்கிறார் எஸ்பிஎஸ் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்துவரும் திருவாட்டி இந்துமதி நாராயணன், 59.
சில பயணிகள் அதிக சத்தம் போடுவார்கள், சிலர் பேருந்து சற்று தாமதமாக வந்தால் கத்துவார்கள், கதவுகளைப் பலமாக அடிப்பார்கள் எனத் தாம் எதிர்கொண்ட சில அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
அவற்றுக்கெல்லாம் புதிதாக வழங்கப்பட்ட அதிகாரம் முற்றுப்புள்ளி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தபோதும், தொந்தரவு தரும் பயணி பேருந்திலிருந்து இறங்க மறுத்தால் நிலைமை இன்னும் சிரமமாகும் என்று திருவாட்டி இந்துமதி கருதுகிறார்.

