விழிப்படல நன்கொடையால் கிடைத்த புதுவாழ்வு

விழிப்படல நன்கொடையால் கிடைத்த புதுவாழ்வு

படம்: பாரத்

07 Nov 2026 - 5:07 am

4 mins read

‘வட போச்சே’ எனும் உள்ளூர் தமிழ் வலையொளிக் குழுவினரில் ஒருவராக, சுவாரசியமான தலைப்புகளில் உரையாடி மக்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவர் க. பாரத், 32.

ஆனால், அவரது புன்னகைக்கும் ஒளிரும் கண்களுக்கும் பின்னால், ‘கெரடோகோனஸ்’ எனும் கண் நோயுடன் அவர் கடந்துவந்த பல்லாண்டுப் பயணம் மறைந்திருக்கிறது.

18 வயதில் கார் ஓட்டக் கற்கச் சென்றபோது மேற்கொண்ட கண் பரிசோதனையில்தான், தனது இடது கண் பார்வை பாதிக்கப்பட்டிருப்பதை பாரத் முதன்முதலில் அறிந்தார். எழுத்துகள் மங்கலாகத் தெரிந்தன. மருத்துவரிடம் சென்றபோது, அவருக்கு ‘கெரடோகோனஸ்’ எனும் கண் நோய் இருப்பது தெரியவந்தது.

கண்ணின் முன்பகுதியில் இருக்கும் ‘கார்னியா’ எனும் விழிப்படலத்தை இந்நோய் பாதிக்கிறது. கண்ணைப் பாதுகாக்கவும் ஒளி கண்ணுக்குள் செல்லவும் உதவும் விழிப்படலம், கெரடோகோனஸ் காரணமாகப் படிப்படியாக மெலிந்து முன்னோக்கிப் புடைத்து, அதன் இயல்பான வடிவத்தை இழக்கிறது. இதனால் பார்வை படிப்படியாக மங்குகிறது.

“வீட்டு மேசையிலிருந்து சுவர்க் கடிகாரத்தைப் பார்க்கும்போது, 18 வயதில் அனைத்து எண்களும் தெரிந்தன. 28 வயதிலோ உற்றுப் பார்த்தால்தான் தெரிந்தன. 32 வயதில் அவை அனைத்தும் மங்கலாகத் தெரிந்தன.

“முன்பு வாராவாரம் காற்பந்து விளையாடுவேன். பின்னர் விளையாட்டின்போது சக அணியினரை என்னால் அடையாளங்காண முடியவில்லை,” என்றார் பாரத்.

விழிப்படலம் மேலும் மெலிந்து கிழியக்கூடிய நிலையில் இருந்ததால், இவ்வாண்டு ஜூன் மாதம் விழிப்படல மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார் பாரத். அதன் பிறகு பார்வை முழுமையாக நிலைபெற ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை ஆகலாம் என்று அவரது மருத்துவர் கூறியுள்ளார். இப்போதுள்ள உருப்பிறழ்ச்சியைச் (Astigmatism) சரிசெய்ய மூக்குக்கண்ணாடி அணியவேண்டும்.

“தொடக்கத்தில் அறுவை சிகிச்சைக்குச் செல்ல எனக்குப் பயமாக இருந்தது. புதிய விழிப்படலத்தை என் உடல் ஏற்காமல் போகவும் வாய்ப்புண்டு. இத்தகைய அபாயங்களைப் புரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டியிருந்தது.

“அதனால் சிகிச்சையைச் சில ஆண்டுகள் தள்ளிப்போட்டேன். விழிப்படல மாற்று அறுவை சிகிச்சை செய்த இருவரின் அனுபவங்களைக் கேட்ட பிறகு அந்தப் பயம் குறைந்தது,” என்றார் பாரத்.

‘இன்சியாட்’ வர்த்தகப் பள்ளியில் பணியாற்றும் அவர், தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட சிகிச்சைக்கான முழுச் செலவையும் நிறுவன மருத்துவக் காப்பீடு ஈடுகட்டியது.

பார்வை மங்கினாலும் மங்காத உற்சாகம்

பார்வை படிப்படியாக மங்கியபோதும், அதை நினைத்து மனம் தளராமல் வாழ்க்கையை எதிர்கொள்ளக் கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார் பாரத்.

“மன உளைச்சலாக எடுத்துக்கொண்டால் நொடிந்துபோய்விடுவோம். இதை வாழ்க்கையின் யதார்த்தமாகவே நான் பார்க்கிறேன். இதனால் சில நகைச்சுவையான சம்பவங்களும் நடந்துள்ளன,” என்றார் அவர்.

ஒருமுறை அலுவலகத்தில் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த ஒருவரைச் சக ஊழியர் என்று நினைத்துப் பேசிவிட்டு, பின்னர் அவர் வேறொருவர் என்பதை உணர்ந்ததை நினைத்து இன்றும் சிரிக்கிறார்.

“என் நண்பர்கள் தூரத்திலிருந்து கைகாட்டும்போது, அவர்கள் அருகில் வந்தபின்புதான் யார் என்று அடையாளம் காண்பேன்,” என்றார் பாரத்.

வேலையில் கணினியை அதிகம் பயன்படுத்த வேண்டியிருப்பதால், திரையில் உள்ளவற்றைப் பார்க்க முகத்தைக் கணினிக்கு மிக அருகில் கொண்டுசெல்ல வேண்டியிருந்தது.

சுற்றத்தார் அவருக்கு அதிக ஆதரவு கொடுத்தனர். நுணுக்கமான செயல்களுக்குக் குடும்பத்தினர் உதவினர். வேலையிடத்திலும் சக ஊழியர்கள் புரிந்துணர்வுடன் இருந்தனர். “எனக்கு இந்தக் கண் கோளாறு இருப்பதால் என்னால் என்ன செய்யமுடியும் என அவர்கள் சிந்தித்து வேலையைப் பிரித்துக் கொடுப்பர்,” என்றார் பாரத்.

சிகிச்சைக்குப் பிறகு அன்றாட வாழ்க்கையின் சிறிய விஷயங்கள்கூட பாரத்துக்குப் புதிய மகிழ்ச்சியைத் தருகின்றன. “இப்போது ஒரு கடைக்குச் சென்று, சுவரில் இருக்கும் உணவுப் பட்டியலைப் பார்த்தே உணவு வாங்க முடிகிறது. அதில் கிடைக்கும் மகிழ்ச்சி, ‘கெரடோகோனஸ்’ இருப்பவருக்குத்தான் புரியும்,” என்றார் பாரத்.

இறந்தவர் அளித்த புதுவாழ்வு

விழிப்படல மாற்று அறுவை சிகிச்சைக்கு, தானமாக வழங்கப்பட்ட விழிப்படலம் தேவைப்படுகிறது.

ஒருநாள் திடீரென மருத்துவமனையிலிருந்து பாரத்துக்கு அழைப்பு வந்தது. அவருக்குப் பொருத்தமான விழிப்படலம் கிடைத்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்தது. அதன்பின் இரண்டு நாள்களில் அவர் அறுவை சிகிச்சைக்குச் சென்றார்.

தனக்குக் கிடைத்த விழிப்படலத்தை நன்கொடையாக வழங்கியவர் யார் என்று பாரத்துக்குத் தெரியாது. இருப்பினும், அதைப் பெற்றுக்கொண்டதற்கான நன்றியுணர்வு தனக்கு எப்போதும் இருக்கும் என்று அவர் கூறினார்.
தனக்குக் கிடைத்த விழிப்படலத்தை நன்கொடையாக வழங்கியவர் யார் என்று பாரத்துக்குத் தெரியாது. இருப்பினும், அதைப் பெற்றுக்கொண்டதற்கான நன்றியுணர்வு தனக்கு எப்போதும் இருக்கும் என்று அவர் கூறினார். - படம்: பாரத்

தனக்குப் புதிய பார்வையை அளிக்கப் போகும் விழிப்படலம், இறந்த ஒருவரின் நன்கொடை என்பதை நினைத்தபோது கலவையான உணர்வுகள் ஏற்பட்டதாக பாரத் கூறினார்.

“அதை ஏற்றுக்கொள்வது எனக்குச் சற்று கடினமாக இருந்தது. மனக்குமுறலுக்கும் ஆளானேன்,” என்றார் அவர்.

அந்த விழிப்படலத்தை வழங்கியவர் யார் என்று பாரத்துக்குத் தெரியாது. இருப்பினும், அதைப் பெற்றுக்கொண்டதற்கான நன்றியுணர்வு தனக்கு எப்போதும் இருக்கும் என்று அவர் கூறினார். “எனக்குக் கிடைத்த இந்த மறுவாழ்வு வாய்ப்பை வீணாக்காமல் ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்,” என்றார் பாரத்.

தனக்குக் கிடைத்த மறுவாழ்வு வாய்ப்பை வீணாக்காமல் ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ விரும்புவதாகக் கூறுகிறார் பாரத்.
தனக்குக் கிடைத்த மறுவாழ்வு வாய்ப்பை வீணாக்காமல் ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ விரும்புவதாகக் கூறுகிறார் பாரத். - படம்: பாரத்

இந்நிலையில், அவரது வலது கண்ணிலும் தொடக்கநிலை ‘கெரடோகோனஸ்’ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அது தற்போது ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால், அதன் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தன்னைப்போல் கண் பார்வைப் பிரச்சினைகள் இருப்போரை உடனடியாக மருத்துவரை அணுகும்படி அவர் அறிவுறுத்துகிறார்.

“ஒன்று இல்லாதபோதுதான் அதன் அருமை தெரியும். தொடக்கத்திலேயே கண்டறிந்தால், முன்கூட்டியே சிகிச்சை பெற்று நிலைமையைச் சமாளிக்கலாம்,” என்கிறார் பாரத்.

குறிப்புச் சொற்கள்