தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலர் பருவக் கல்வித்துறை மேம்பாட்டிற்காக அறிமுகமாகும் புதிய திட்டம்

2 mins read
ffa24549-f42a-4b34-9f37-c8954c6e5e73
பருவ மேம்பாட்டு அமைப்பின் தொழில்முறை வளர்ச்சித் திட்டத்தில் நியமனம் செய்யப்பட்ட கல்வியாளர்களுள் ஒருவரான சங்கீதா சுப்பிரமணியம் (இடமிருந்து 2வது), மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவாவுடன் உரையாடுகிறார். - படம்: பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு

பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு ‘லீடர்ஷிப் பூஸ்டர்’ என்ற புதிய தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா தெரிவித்துள்ளார்.

மரினா ஒன் அரங்கத்தில் திங்கட்கிழமை (மே 19) நடைபெற்ற பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் தொழில்முறை வளர்ச்சித் திட்ட நியமன விழாவில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

இப்புதிய திட்டம் தலைமைத்துவ மேம்பாட்டுக் கட்டமைப்பு, ஆரம்பகால வளர்ச்சிக் கட்டமைப்பு, இளம் மாணவர்களைப் பேணி வளர்த்தல் பணிச்சட்டம், சிங்கப்பூர் பாலர் பள்ளி அங்கீகாரப் பணிச்சட்டம் போன்ற தற்போதைய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மேலும் வலுச்சேர்க்குமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பாலர் பருவக் கல்வி நிலையங்களில் தலைமைத்துவப் பதவிகளில் பணியாற்றியவர்கள் தங்கள் முக்கியத் தலைமைத்துவப் பண்புகளான தொடர்பு, முடிவெடுத்தல், திறன் வளர்ச்சி, ஒருங்கிணைத்தல் போன்றவற்றை மெருகேற்றிக்கொள்ள இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று திரு எரிக் சுவா தமது உரையில் கூறினார்.

இந்த ஆண்டு பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் தொழில்முறை வளர்ச்சித் திட்டத்தில் நியமனம் செய்யப்பட்ட 185 பாலர் பருவக் கல்வியாளர்களுள் 40 தலைவர்கள் இப்புதிய திட்டத்திற்குத் தேர்வாகினர்.

அவர்களில் ஒருவரான 37 வயது சங்கீதா சுப்பிரமணியம் இப்புதிய திட்டத்தில் பங்குகொள்ள ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறினார்.

கடந்த 18 ஆண்டுகளாக ‘பிரைட் கிட்ஸ் ஸ்கூல் ஹவுஸ்’ பாலர் பருவக் கல்வி நிலையத்தில் பணியாற்றி வரும் இவர், கடந்த ஏழு ஆண்டுகளாக அந்நிலையத்தின் தலைமையகத்தில் பாடத்திட்ட, வழிகாட்டுதல் தலைவராகப் பணியாற்றி வருகிறார். 

“இத்துறையில் சேரும்போதே, தலைவராக வேண்டும் என்ற இலக்கு இருந்தது. இன்று இந்தத் திட்டத்திற்குத் தேர்ச்சி பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதோடு தொடர்ந்து மாணவர்களின் முன்னேற்றத்திற்கான மாற்றங்களைப் பாடத்திட்டங்களிலும் இதர பள்ளி நடவடிக்கைகளிலும் செய்யவேண்டும் என்ற ஊக்கத்தைத் தருகிறது,” என்று அவர் கூறினார்.

இத்திட்டத்தில் தன்னைவிட மூத்த தலைவர்களிடமிருந்து கற்பதற்கும், இளைய தலைவர்களுக்குக் கற்பிப்பதற்கும் சங்கீதா ஆர்வமாக உள்ளார். 

நியமன விழாவின் முடிவில் அரங்கிலிருந்த கல்வியாளர்கள் அனைவரும் எழுந்து நின்று மின்னிலக்க விளக்கு ஒன்றைக் கையில் ஏந்தி தங்கள் நியமனத்தைக் கொண்டாடினர்.

விழா நிறைவுபெறும் தருணத்தில், “தொடர்ந்து கூடுதல் ஒளியுடன் மின்னுங்கள்! அப்போதுதான் நாளைய தலைமுறையினரை நம்மால் ஒளிரவைக்க முடியும்,” என்றார் திரு எரிக் சுவா.

குறிப்புச் சொற்கள்