புத்தாண்டு தினமான வியாழக்கிழமை (ஜனவரி 1) சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா வட்டாரம் புத்துணர்வுடனும் உற்சாகத்துடனும் களைகட்டியது.
பலருக்கும் விடியும் முன்னரே நாள் தொடங்கிவிட்டது. புத்தாண்டன்று காலையில் பல கோவில்களுக்குச் சென்று வழிபடும் வழக்கம், இன்றும் பல குடும்பங்களின் புத்தாண்டுச் சடங்குகளின் மிக முக்கிய அங்கமாகத் திகழ்கிறது.
ஓய்வுபெற்ற பாதுகாவல் அதிகாரியான ராமநாதன் ராஜகோபாலன், “ஒவ்வொரு புத்தாண்டு நாளிலும் காலையில் எழுந்து ஐந்து கோவில்களுக்கு நடப்பதே என் வழக்கம்,” என்று பெருமாள் கோவில் வழிபாட்டை முடித்த பின் கூறினார்.
இந்த நடைப்பயணம் இறைவனுடனான நேரடித் தொடர்பை உணரச்செய்யும் தனிப்பட்ட ஆன்மிக அனுபவமாக திரு ராமநாதன் குறிப்பிட்டார். “எனக்கு வேண்டியது மனநிறைவும் அமைதியும்தான். பணம் வேண்டும் என்று ஓடிக்கொண்டே வாழக்கூடாது,” என்றார் அவர்.
தம் மகளையும் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த மகளின் தோழியையும் தம்முடன் அழைத்து வந்திருந்த அவர், அடுத்த முறை மேலும் பலரை அழைத்துவர விரும்புவதாகவும் கூறினார்.
அதேபோல், டான் டோக் செங் மருத்துவமனையில் மருந்தாளராகப் பணிபுரியும் 23 வயது எம்.பி. அபிராமி, ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோவில், வடபத்திர காளியம்மன் கோவில் உட்பட ஐந்து கோவில்களுக்குத் தமது குடும்பத்துடன் புத்தாண்டு தினத்தன்று சென்று வழிபட்டார்.
‘கோல்டன் மைல்’ கார் நிறுத்துமிடத்தில், டிக் டாக் ஊடகத்தின்மூலம் பிரபலமான இடத்தைக் கண்டறிந்து முன்தினம் இரவு வாணவேடிக்கையை அங்கு ரசித்ததாக அவர் கூறினார்.
2026ஆம் ஆண்டிற்கான அவரது கவனம் பணி சார்ந்ததாகவே உள்ளது. “வேலையில் சேரும் முதல் ஈராண்டுகள் மிக முக்கியமானவை. இந்த ஆண்டு நான் கடினமாக உழைத்து நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன்,” என்று செல்வி அபிராமி குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
48 வயதான கே. ஷீலா, தம் கணவர் கே. தனசேகரன், 49, இரு மகள்களுடன் பினாங்கிலிருந்து புத்தாண்டு தினத்தன்று காலையில் சிங்கப்பூர் வந்து சேர்ந்தார். இவர்கள் பினாங்கில் உணவளிப்புத் தொழிலில் (catering) ஈடுபட்டுள்ளனர்.
“நாங்கள் ஜனவரி 10ஆம் தேதி சபரிமலைக்குச் செல்லவிருப்பதால், ஐயப்பன் பூசைக்கான பொருள்களை வாங்கிக்கொண்டிருக்கிறோம்,” என்று திரு தனசேகரன் சொன்னார்.
இந்த ஆண்டு புது வீட்டில் குடியேறும் முக்கிய நிகழ்வை மையமாக வைத்துக்கொண்டு பிரார்த்தனைகள் அமைந்திருப்பதாகவும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
78 வயது கரு. நாச்சம்மை, வீட்டில் காலை வழிபாட்டை முடித்த பிறகு பெருமாள் கோவிலுக்குத் தம் கணவர், மகன், மருமகன், பேத்திகள் என மூன்று தலைமுறையினருடன் வந்திருந்தார். ஆண்டுதோறும் புத்தாண்டை முன்னிட்டு பெரிய குடும்பமாக வெளியே செல்வது வழக்கம் என்று அவர் கூறினார்.
“உலகம் அமைதியாக இருக்க வேண்டும், செல்வம் பெருக வேண்டும், மக்கள் நோயின்றி வாழ வேண்டும்,” என்று திருவாட்டி நாச்சம்மை தமது வேண்டுதல்களைப் பகிர்ந்துகொண்டார்.
டென்னிஸ் பயிற்சியாளர் நந்தகோபால், 56, பகுதிநேர ஆசிரியரான திலகா, 55, அவர்களது மகள்கள் அனைவரும் புத்தாண்டை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற ‘பாட்லக்’ விருந்தில் கலந்துகொண்டதையடுத்து, புத்தாண்டு நாள் காலையில் பெருமாள் கோவிலுக்குச் சென்றனர்.
2026ஆம் ஆண்டிற்கான இவர்களது விருப்பங்கள் உடல்நலத்தையும் நல்வாழ்வையும் சார்ந்ததாக உள்ளன. “நாங்கள் வலிமையுடன் இருக்க விரும்புகிறோம்,” என்று திரு நந்தகோபால் கூறினார்.
அதேவேளையில், அவரது மகள்கள் ஹேமா ஹரிணி, 21, சஷ்டி ஹரிதா, 18, ஆகியோர் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தி, தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதை இலக்காகக் கொண்டுள்ளனர்.
குடும்பத்தைப் பிரிந்து வாழும் பல வெளிநாட்டு ஊழியர்களுக்கு லிட்டில் இந்தியா நண்பர்களுடன் ஒன்றுகூடும் இடமாகத் திகழ்கிறது
கோவிலுக்கு வந்திருந்த தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட 39 வயது பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஏ. பாண்டித்துரை, பணி மேம்பாடு குறித்து தமது புத்தாண்டு இலக்குகளை அமைத்துள்ளார்.
பொது ஊழியராகத் தொடங்கி பாதுகாப்பு மேற்பார்வையாளராக தற்போது பணியாற்றும் அவர், 2026ல் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு உயரவிருக்கிறார்.
“இந்தியா, பங்ளாதேஷ் அல்லது தாய்லாந்து என எங்கிருந்து வருபவராக இருந்தாலும் என்றைக்கும் சாதாரண ஊழியராகவே இருந்துவிடாமால் கல்விக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம். உங்கள் திறமையை வெளிக்கொண்டுவர வேண்டும்,” என்றார் அவர்.
இல்லப் பணிப்பெண்ணாகப் பணிபுரியும் 50 வயது கந்தசாமி சரோஜா, 2026ஆம் ஆண்டை புது நம்பிக்கையுடன் எதிர்கொள்வதாகக் கூறினார்.
“பழைய கவலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நேர்மறையாகச் சிந்திக்கிறேன்,” என்றார் அவர். லிட்டில் இந்தியாவில் உள்ள புத்தர் கோவிலில் வழிபாடு செய்ய வந்ததாக அவர் கூறினார்.
இலங்கையில் வாழும் தம் மகள், இரண்டு பேரக்குழந்தைகளின் உடல்நலத்திற்காகவும் உலக அமைதிக்காகவும் அவர் வேண்டிக்கொண்டார்.
66 வயது ராசம்பாள் ராஜுக்கு கோவில்கள் தாம் இழந்த உறவுகளின் நினைவுகளைச் சுமந்து நிற்கின்றன. “நான் ஒவ்வோர் ஆண்டும் மாரியம்மன் கோவிலுக்குச் செல்வது வழக்கம். அங்குதான் என் தாயார் செல்வார். ஐந்து ஆண்டுகளுக்குமுன் காலமான என் கணவரும் அங்குதான் செல்வார்,” என்று அவர் பகிர்ந்துகொண்டார்.
உடல்நலச் சவால்கள் இருந்தபோதிலும், பாரம்பரியத்தைக் காக்க அவர் அங்கு ஆண்டுதோறும் செல்கிறார். கூட்ட நெரிசலுக்கு மத்தியில் எதிர்பாராதவிதமாக இவ்வாண்டு தம் சகோதரரின் முழுக் குடும்பத்தையும் சந்தித்தபோது மகிழ்ச்சியில் திளைத்ததாக அவர் கூறினார்.

