தொழில்நுட்பம் கோலோச்சும் காலத்தில் மின்னிலக்கத் திரைகளில் மூழ்கிக்கிடக்கும் சிறாரிடையே வாசிப்பு ஆர்வத்தை மீண்டும் தூண்டும் நோக்கத்துடன் ‘நித்திரைக் கதைகள்’ எனும் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் தேசிய நூலக அரங்கத்தில் செப்டம்பர் 12ஆம் தேதி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. கோலாலம்பூர் கூட்டரசுப் பகுதித் தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கம் (பெர்தாமா) ஏற்பாடு செய்த இவ்விழாவில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
சிறுவயதில் ஒரே தமிழ்ப்பள்ளியில் பயின்ற நண்பர்கள் இருவரின் உயர்வுக்கு உரமூட்டிய நட்பும் தாய்மொழிப் பற்றும் இந்த முயற்சிக்கு வித்தாக அமைந்தன.
மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்க உதவித் தலைவர் கேசவன் நாகராஜு, 49, கூட்டரசுப் பகுதித் தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கத் துணைத் தலைவர் பார்த்திபன் இராமச்சந்திரன், 49, ஆகியோரின் நீண்ட நாள் கனவு, வண்ணமயமான நூலாக உருவெடுத்துள்ளது.
“தமிழ்ப் பள்ளியில் படித்த நாங்கள், தாய்மொழிக்கும் கல்விக்கும் ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ணினோம். அதுவே எங்களை இம்முயற்சியை நோக்கி இயக்கியது,” என்று திரு கேசவன் நாகராஜு நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மலேசியா முழுதும் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் நூலகங்களுக்கு ‘நித்திரைக் கதைகள்’ நூல் தொகுப்பை இலவசமாகக் கொண்டுசேர்க்கும் மாபெரும் இலக்கோடு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
“இதன்வழி, தொடக்கப்பள்ளி மாணவர்கள் வாசிக்கும் பழக்கத்திற்கு ஈர்க்கப்பட்டு, அவர்களின் கற்பனைத் திறனும் நற்பண்புகளும் வளர இது போன்ற நூல்கள் பெரிதும் துணைபுரியும். குழந்தைகள் இரவில் உறங்குவதற்கு முன்பாகத் தாய்மொழியில் இனிய கதைகளைக் கேட்டு மகிழ இந்நூல் சிறந்த வழிகாட்டியாகவும் அமையும்,” என்று திரு பார்த்திபன் இராமச்சந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தேசிய ஒருமைப்பாட்டுத் துணை அமைச்சர் யுனேசுவரன் ராமராஜ், இந்த நூல்களைஜோகூர் மாநிலத்தில் உள்ள அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளுக்கும் வழங்குவதற்கு ஆகும் செலவைத் தாமே ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.
“செயற்கை நுண்ணறிவுக் காலத்திலும் நூல் வாசிப்பின் மூலமே மனித அறிவை விரிவுபடுத்த முடியும்,” என்று அவர் வலியுறுத்தினார். மலேசியர்களிடையே வாசிப்புப் பழக்கம் அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், இதுபோன்ற வாசிப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தின் ஆதரவு என்றும் உண்டு என்பதை உறுதிப்படுத்தினார்.
மலேசிய எழுத்தாளர்களின் முழுமையான பங்களிப்புடன் உருவாகியுள்ள இத்தொகுப்பில் 61 கதைகள் அடங்கிய 10 நூல்கள் உள்ளன. பல்வேறு கருப்பொருள்களை மையமாகக் கொண்ட கதைகளில், கதைமாந்தர்களின் வண்ணமயமான படங்களும் ஒவ்வொரு கதையின் முடிவிலும் வாழ்வியலுக்குத் தேவையான முக்கியக் கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரளான வாசகர்களும் பெற்றோரும் தங்களுக்கு மட்டும் புத்தகங்களை வாங்காமல், தமிழ்ப் பள்ளிகளுக்கும் நூல்களை வழங்கி, தங்களின் பேராதரவை வெளிப்படுத்தினர்.
