சிங்கப்பூரின் செழுமையான பாரம்பரியத்தைப் பொதுமக்களுக்கு நினைவூட்டும் விதமான பழைமை வாய்ந்த படைப்புகள், புகைப்படங்கள், கையெழுத்துப் படிகளைத் தேசிய நூலக வாரியத்துக்கு நன்கொடையாக அளித்த நல்லுள்ளங்களைப் பாராட்டும் வகையில், செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 26) விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சிங்கப்பூரின் வரலாற்றை எடுத்தியம்பும் கதைகளுக்கு ஆழமும் அர்த்தமும் சேர்க்கும் 4000க்கும் மேற்பட்ட ஆவணங்களை நன்கொடையாக அளித்தோருக்குப் பாராட்டாக அமைந்தது இவ்விருந்து.
தேசிய நூலகக் கட்டடத்தில் (The Pod) நடைபெற்ற இவ்விருந்தில் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவர், தங்கள் மனதுக்கும் குடும்பங்களுக்கும் நெருக்கமான அரும்பொருள்களைப் பொதுமக்களுக்குப் பயனளிக்கும் வண்ணம் நன்கொடை அளித்தோரைப் பாராட்டிப் பேசினார்.
மேலும், 2025ல் நடைபெறவுள்ள கண்காட்சியில், முன்னோடிக் கலைஞர் லியு காங்கின் குடும்ப சேகரிப்புகளின் உதவியுடன் இதுவரை கண்டிராத அளவு புகைப்படங்கள், காணொளிகள்வழி (Audio Visuals) 1950களில் சிங்கப்பூரின் கலை வரலாற்றின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் இடம்பெறும் என்றும் சொன்னார்.
இவ்விருந்தில் தமிழ், சீன, மலாய் மக்களின் வாழ்வியலை விவரிக்கும் ஆவணங்கள், பிரசுரங்கள் உள்ளிட்ட பதிவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகத்துடன் இணைந்து பாதுகாத்துவரும் நன்கொடையளிக்கப்பட்ட தகவல்கள் குறித்த காணொளிகள் இந்நிகழ்வில் இடம்பெற்றன.
நன்கொடையளிக்கப்பட்ட ‘கட்டை விரல்’ கையெழுத்து தட்டச்சுப் படி
எழுத்தாளர், வானொலி ஒலிபரப்பாளர், ஊடகவியலாளர், நாடகாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட கவிதைவேள் கா. பெருமாள் எழுதிய ‘கட்டைவிரல்’ நூலின் கையெழுத்துத் தட்டச்சுப் படியை இவ்வாண்டு நன்கொடையாக அளித்துள்ளனர் அவரது குடும்பத்தினர்.
“கேமரன் மலையில் தேயிலைத் தோட்ட ஊழியராக வாழ்வைத் தொடங்கிய தனது தந்தை, தமிழ் மீது கொண்டிருந்த பேராவல் காரணமாக நாடகங்கள், பாடல்கள், கட்டுரைகளை படைத்தார். அவரது படைப்புகள் எங்கள் குடும்பப் பொக்கிஷம்,” என்றார் அவரது மூத்த மகனான திருத்தக்க தேவன்.
தொழில்நுட்பம் வளர்ந்திராத காலங்களிலேயே மொழியில் சிறந்து விளங்கிய முன்னோர்களின் பாதையில் அடுத்தடுத்த தலைமுறையும் செயல்பட இந்த எழுத்துக்கள் ஊக்குவிக்கும் என நம்புவதாகவும் அதனை அனைவர்க்கும் கொண்டு சேர்க்கவே இதனை தேசிய நூலகத்திடம் நன்கொடையாக அளித்ததாகவும் சொன்னார் அவரது இளைய மகன் பாரி.
தொடர்புடைய செய்திகள்
இவர்கள் இருவரும் வெவ்வேறு துறைகளுக்குச் சென்றுவிட்டாலும், தந்தையின் எழுத்துகளின் முக்கியத்துவத்தை அறிந்து அவரது படைப்புகளின் மூலப் படியை பாதுகாப்பாக வைத்திருந்தனர். எனினும், அவை காலம் தாண்டி நிலைத்து நிற்கச் செய்ய அதனை உரிய நிபுணர்களிடம் ஒப்படைத்துள்ளது மகிழ்ச்சி என்றும் தெரிவித்தனர்.
இதன் மூலம் அவரது படைப்புகள் பேசப்பட்டு, அவர் அழியாப் புகழ் எய்துவார் என்பது பெருமை என்றும் கூறினர்.
இதுதவிர, பாஸ்கர் ஆர்ட்ஸ் அகாடமியின் சார்பில் 1950களில் நடந்த நிகழ்வுகளின் கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள், 1957ஆம் ஆண்டு தமிழவேள் கோ சாரங்கபாணியின் தலைமையில் நடைபெற்ற இந்தியப் பாரம்பரிய நடன நிகழ்வின் மூல விளம்பரப் புத்தகம் (Original Broucher) உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
“இது வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களின் வாழ்வியல் முறை, உடை, பயன்படுத்திய மொழி வடிவம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்துகிறது. வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளுக்கு ஆவணங்கள் இருந்தாலும், இடைப்பட்ட காலத்தில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள் குறித்தும், அப்போதிருந்த சுற்றுப்புறம் குறித்தும் தெரிந்துகொள்ள இவை உதவுகின்றன,” என்றார் கலை நூலகரான முகமது ஷஃபி.
தன்னைப் போன்ற கலை, வரலாற்றில் ஆர்வம் கொண்டோருக்கும் ஆய்வாளர்களுக்கும் இவை மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் சொன்னார்.