ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரவில்லை என்றால் எண்ணெய் விலை வெகுவாக உயரக்கூடும் என்று துறை சார்ந்த வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
அதனால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலைகளும் அதிகரிக்கக்கூடும் என்று அவர்கள் கூறினர்.
எண்ணெய் விலை ஏற்றம் குறித்து எஸ்பிஎச் அரங்கில் திங்கட்கிழமை (மார்ச் 30) தமிழ் முரசு நடத்திய கலந்துரையாடலில் அந்தக் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
‘சந்திப்போம் சிந்திப்போம்’ எனும் நடப்பு விவகாரத் தொடரின் மூன்றாம் கலந்துரையாடல் அது.
கலந்துரையாடலில் ஃபோர்ட்டியஸ் ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராமசாமி சொக்கலிங்கமும் ‘டிரான்ஸ்வோர்ல்ட் குழுமம் சிங்கப்பூர்’ நிறுவனத்தின் நிறுவனர் மகேஷ் சிவசாமியும் பங்கேற்றனர்.
எண்ணெய் விலை ஏற்றத்தால் ஏறக்குறைய எல்லாத் துறைகளும் பாதிக்கப்படும் என்றும் பொருளியலில் அது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் திரு சொக்கலிங்கம் சொன்னார்.
எண்ணெய் விலை ஏற்றம், பொருளியலில் மெதுவடைவை உண்டாக்கும்; விலைவாசி உயரும்; அதனால் மக்கள் பொருள்கள் வாங்குவது குறையும் என்றார் அவர்.
விலைவாசி உயர்வைப் பொறுத்து மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தில் மாற்றங்களைச் செய்யும் என்று திரு மகேஷ் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
எண்ணெய்ப் பயன்பாட்டில் போக்குவரத்துத் துறையின் பங்கே அதிகம் என்று அவர் கூறினார். அந்தத் துறை கிட்டத்தட்ட 70 விழுக்காட்டு எண்ணெய்யைப் பயன்படுத்துவதாக அவர் சொன்னார்.
கலந்துரையாடலில் மேலும் பல அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
அதன் முழுமையான காணொளி:

