திடல் ஒன்றுதான், கதைகளோ பல

திடல் ஒன்றுதான், கதைகளோ பல

9 mins read
சிங்கப்பூர் மாஸ்டர்ஸ் திடல்தடச் சங்கத்தின் (எஸ்எம்ஏ) 49வது ஆண்டு நிறைவு விழாவில் பலருக்கு அங்கீகாரம்.
03da0bb3-7b9e-4913-a69c-f1d13634b918
‘எஸ்எம்ஏ’ தலைவர் கோவிந்தராஜு, மலேசிய மாஸ்டர்ஸ் திடல்தடச் சங்கத் தலைவர் சிவப்பிரகாசத்துக்குப் (வலம்) பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார். - படம்: எஸ்எம்ஏ

மனத்தில் உறுதி இருந்தால் திடல்தடப் போட்டிகளில் எந்த வயதிலும் வெற்றிகளைக் குவிக்கலாம் என்பதற்குச் சான்றாகத் திகழ்கின்றனர் சிங்கப்பூர் மாஸ்டர்ஸ் திடல்தடச் சங்கத்தின் (எஸ்எம்ஏ) ஓட்டப்பந்தய வீரர்கள். அனைத்துலகப் போட்டிகளில் கலந்துகொண்டு சிங்கப்பூர்க் கொடியை உயரப் பறக்கவிடுகின்றனர். சங்கத்தில் தற்போது 35 முதல் 70 வயதுக்கும் மேல் வரை கிட்டத்தட்ட 70 உறுப்பினர்கள் உள்ளனர்.

அண்மையில் சங்கத்தின் 49வது ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில், மலேசிய மாஸ்டர்ஸ் திடல்தடச் சங்கத் தலைவரும் ஆசிய மாஸ்டர்ஸ் திடல்தடச் சங்கப் பொதுச் செயலாளருமான சிவப்பிரகாசத்திற்குச் சிறந்த தலைமைத்துவ விருது வழங்கி கெளரவித்தார், ‘எஸ்எம்ஏ’ தலைவர் கோவிந்தராஜு.

திடலிலும் வாழ்விலும் சாதனை

800 மீட்டர் ஓட்ட தேசியச் சாதனைக்கு 38 ஆண்டுகள் சொந்தம் கொண்டாடிய சின்னதம்பி பாண்டியன்.
800 மீட்டர் ஓட்ட தேசியச் சாதனைக்கு 38 ஆண்டுகள் சொந்தம் கொண்டாடிய சின்னதம்பி பாண்டியன். - படம்: சின்னதம்பி பாண்டியன்

800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தேசியச் சாதனைக்கு 38 ஆண்டுகள் சொந்தம் கொண்டாடியவர் சின்னதம்பி பாண்டியன், 59. அவரது சாதனை நேரம் ஒரு நிமிடம், 50 நொடிகள்; 1987ல் அவர் படைத்த சாதனையைச் சென்ற ஆண்டுதான், திருபன் தனராஜன் முறியடித்தார்.

சிங்கப்பூரில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பாண்டியனின் 800 மீட்டர் சாதனையும் பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் அவரது 400 மீட்டர், 800 மீட்டர் சாதனைகளும் இன்றும் நீடிக்கின்றன.

திடல்தட சாதனைகளைவிட வாழ்வில் அவர் படைத்த சாதனை இன்னும் பெரியது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டது.

“நான் மூன்று மாதங்கள் மருத்துவமனையில் இருந்தேன். பேசச் சிரமப்பட்டேன். என்னால் நின்று ஓர் அடிகூட எடுத்துவைக்க முடியவில்லை. மருத்துவமனையிலிருந்து நடந்துவந்து வீடு திரும்புவதுதான் என் ஒரே நோக்கமாக இருந்தது,” என்றார் பாண்டியன்.

“நான் ஏழு மாதங்களிலேயே தனியாக நடக்கத் தொடங்கினேன். ஆனால் இன்றும் மிகவும் பாதுகாப்பாக நடக்கவேண்டும்; அன்றாடம் எனக்கு நானே சிகிச்சை அளித்துக்கொள்வேன்,” என்றார் அவர்.

பாண்டியன், பழையபடி திடல்தடப் பயிற்றுவிப்பாளராக இன்று வாரத்துக்கு நான்கு நாள் உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கற்பித்துவருகிறார். ‘எஸ்எம்ஏ’ சங்கத்தில் தொண்டூழியப் பயிற்றுவிப்பாளராகவும் அவர் இருக்கிறார்.

“என் வாழ்வில் இரண்டு பகுதிகள் - பக்கவாதத்துக்கு முன்பும் பின்பும். இனி எனக்கெனத் தனி அடையாளத்தைக் கண்டுபிடிக்க விரும்புகிறேன்,” என்றார் பாண்டியன்.

பிள்ளைகளால் திடலில் பிறந்த ஆர்வம்

பிள்ளைகளைக் கண்டு திடல்தடப் போட்டிகளில் பங்கேற்க ஊக்கம் பெற்றதாகக் கூறினார் கோமதி ஜெயராமன்.
பிள்ளைகளைக் கண்டு திடல்தடப் போட்டிகளில் பங்கேற்க ஊக்கம் பெற்றதாகக் கூறினார் கோமதி ஜெயராமன். - படம்: தி இண்டிபெண்டென்ட்

கோமதி ஜெயராமன், தமது மகன்கள் தேசியத் திடல்தடப் போட்டிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவதைக் கண்டு தமக்கும் நாட்டம் வந்ததாகக் கூறினார். அவரின் மகன் 5 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துள்ளார்.

‘நியூ பேப்பர் பிக் வாக்’கின் போட்டியில் தவறுதலாகப் பதிவுசெய்ததே அவரது வேகநடைப் பயணத்தின் தொடக்கம். அப்போது அவர் வேகமாக நடப்பதைக் கண்டு தேசிய வேகநடை வீரர் யூசஃப் கான் பயிற்சி வழங்க முன்வந்தார்.

‘எஸ்எம்ஏ’வில் சேர்ந்து கடந்த 20 ஆண்டுகளாக 5 முதல் 100 கிலோமீட்டர் வரையிலான வேகநடைப் போட்டிகளில் கோமதி பங்கேற்றுள்ளார். 2017 உலக மாஸ்டர்ஸ் 3,000 மீட்டர் போட்டியில் வெண்கலமும் பத்து கிலோமீட்டர் குழுப் போட்டியில் தங்கமும் ஆசிய மாஸ்டர்ஸ் போட்டிகளில் பலமுறை தங்க, வெள்ளிப் பதக்கங்களையும் அவர் வென்றுள்ளார்.

வெளியூருக்குச் செல்லும் பல வாய்ப்புகளும் பல நட்புகளும் கிடைத்தன. இதனால் மனமும் உடலும் நலமாக உள்ளன; என் குடும்பத்தாரின் ஆதரவுடன்தான் என்னால் இதில் பங்கேற்க முடிகிறது. என் கணவரும் இப்போது வேகநடையில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்,” என அவர் கூறினார்.

முறியடிக்கப்படாத சாதனைகள்

50 கிலோமீட்டர் வேக நடைக்கான சிங்கப்பூர்ச் சாதனையை 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தக்கவைத்துள்ள ஆறுமுகம் கண்ணன், 79.
50 கிலோமீட்டர் வேக நடைக்கான சிங்கப்பூர்ச் சாதனையை 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தக்கவைத்துள்ள ஆறுமுகம் கண்ணன், 79. - படம்: ஆறுமுகம் கண்ணன்

1969 தென்கிழக்காசியத் தீபகற்ப விளையாட்டுகளில் (இன்றைய சீ கேம்ஸ்) 50 கிலோமீட்டர் வேக நடையை 5 மணி நேரம் ஏழு நிமிடம் மூன்று நொடிகளில் நடந்து தேசியச் சாதனை படைத்தவர் கண்ணன் ஆறுமுகம். அந்தச் சாதனையை இன்றுவரை யாரும் முறியடிக்கவில்லை. அப்போது அவருக்கு வயது 21தான்; போட்டியில் அவர் மூன்றாம் நிலையில் வந்தார்.

இப்போது 79 வயதாகும் கண்ணன், 2001லிருந்து சங்கத்தின் செயலாளராக இருந்துவருகிறார். “நானும் என் சக உறுப்பினர்களும் எங்கள் சிறுவயதில் சிங்கப்பூருக்காக ஓடினோம். இப்போது நாங்கள் எங்கள் மகிழ்ச்சிக்காக ஓடுகிறோம்,” என்றார் அவர்.

“நான் 15 ஆசிய, 11 உலக மாஸ்டர்ஸ் திடல்தடப் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். இவ்வாண்டு தென்கொரியாவில் நடைபெறவுள்ள உலக மாஸ்டர்ஸ் போட்டியிலும் பங்கேற்பது குறித்துச் சிந்தித்துவருகிறேன்,” என்றார் ‘ஸ்போர்ட்எஸ்ஜி’யில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவந்துள்ள கண்ணன்.

“அக்காலத்தில் வேக நடை மிகவும் பிரபலமாக இருந்தது. உட்லண்ட்சிலிருந்து ஃபேரர் பார்க் வரை நாங்கள் வழக்கமாக 20 கிலோமீட்டர் நடப்போம்,” என அவர் கூறினார்.

பல பரிமாணங்களில் திடல்தட வீரர்கள்

யூசஃப் கான், 73.
யூசஃப் கான், 73. - படம்: யூசஃப் கான்
(இடமிருந்து) ஏடம் சிவப்பிரகாசம், ஏ பி நாதன், ஜான் குட்டி ஸ்டான்சிலாஸ்.
(இடமிருந்து) ஏடம் சிவப்பிரகாசம், ஏ பி நாதன், ஜான் குட்டி ஸ்டான்சிலாஸ். - படம்: ரவி சிங்காரம்

யூசஃப் கான், 73, ஓட்டப்பந்தய வீரர் மட்டுமல்லர், பயிற்றுவிப்பாளரும்கூட.

தேசியச் சேவையின்போதே யூசஃபின் ஓட்டப்பந்தயத் திறன் கண்கூடாகத் தெரிந்தது.

“என் மேற்பார்வையாளர் என் திறனை அடையாளங்கண்டு, புதிய தேசிய சேவையாளர்களுக்குப் பயிற்சி வழங்கும் பொறுப்பை ஒப்படைத்தார். அப்படித்தான் பயிற்றுவிப்பாளராக என் பயணம் தொடங்கியது,” என அவர் கூறினார். இளவயதில் தேசிய நெடுந்தொலைவோட்ட வீரராக இருந்த யூசஃப் கான், பின்பு மாஸ்டர்ஸ் போட்டிகளிலும் பங்கேற்றார்.

2013ல் அனைத்துலகத் தங்க மாஸ்டர்ஸ் போட்டியில் ஆண்களுக்கான 60 வயதுப் பிரிவில் 2,000 மீட்டர் பலபாணித் தடையோட்டத்தில் (ஸ்டீபல் சேஸ்) வெண்கலம் வென்றவர் யூசஃப். அதோடு ஆசிய மாஸ்டர்ஸ் திடல்தடப் போட்டிகளில் 800 மீட்டர், 10 கிலோமீட்டர் போன்ற பிரிவுகளில் பலமுறை அவர் பதக்கங்கள் வென்றுள்ளார். ‘எஸ்எம்ஏ’ உறுப்பினர்களுக்கான தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் காலையில் கோம்பாக் விளையாட்டரங்கில் அவர் பயிற்சி அளித்துவருகிறார்.

அவரைப் போல் நெடுங்காலமாக ஓடுபவர்கள் ஏ பி நாதன், ஏடம் சிவப்பிரகாசம், சந்திரசேகரன் ஆகியோர்.

சென்ற ஆண்டு மலேசிய அனைத்துலக மாஸ்டர்ஸ் திடல்தடப் போட்டிகளில் 400 மீட்டர் பிரிவில் வெண்கலம் வென்றவர் ஏ பி நாதன்.

1983 தென்கிழக்காசிய விளையாட்டுகளில் நெடுந்தொலைவோட்டத்தில் மூன்றாம் நிலையில் வந்தவர் சந்திரசேகரன்.

1982ல் சிங்கப்பூர் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் நெடுந்தொலைவோட்டத்தில் உள்ளூரில் இரண்டாம் நிலையிலும் (2 மணி நேரம், 43 நிமிடங்கள்), 1979ல் பெஸ்தா சுக்கானில் 10,000 மீட்டர் போட்டியில் தங்கமும் வென்றார் ஏடம் சிவப்பிரகாசம்.

வயது வரம்பு இல்லை

தொடர்ந்து பல சாதனைகள் படைத்துவரும் மதிமாறன் வேலாயுதம்.
தொடர்ந்து பல சாதனைகள் படைத்துவரும் மதிமாறன் வேலாயுதம். - படம்: மதிமாறன் வேலாயுதம்

ஓடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இன்னொருவர் மதிமாறன் வேலாயுதம், 45. அவர் 15 வயதிலிருந்து ஓடிவருகிறார். 17 வயதில் அவரின் உடல் எடை 34 கிலோகிராமாகவும் உயரம் 1.49 மீட்டராகவும் இருந்ததால் தொடக்கத்தில் வெற்றி என்பது அவருக்கு எட்டாக்கனியாக இருந்தது.

நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி ஓட்டப்பந்தய அணியின் ‘மாற்று ஆட்டக்காரர்’ குழுவில் இருந்த அவர், முன்னணி ஓட்டப்பந்தய வீரர்களின் பயிற்சிக்கு உதவியதோடு சொந்தப் பயிற்சியிலும் ஈடுபட்டார். அப்போது கல்லூரியின் மாணவ வளர்ச்சி மேலாளர் குரு அவரது திறனை அடையாளங்கண்டு, அவருக்கென ஓடுவதற்குச் சிறந்த காலணிகளை வாங்கித் தந்தார். கடும் பயிற்சியுடன் மதிமாறன் 2.4 கிலோமீட்டர் தொலைவை 7 நிமிடம் 15 நொடிகளில் முடித்தார்.

நாளடைவில் கல்லூரியின் முதல் அணியில் ஓடும் வாய்ப்புக் கிடைத்து, கல்லூரியைப் பிரதிநிதித்து இரு வெள்ளிப் பதக்கங்களை அவர் வென்றார். 1,500 மீட்டர், 3,000 மீட்டர், 5,000 மீட்டர், 5 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் ஆகியவற்றுக்கான கல்லூரிச் சாதனைகளை அவர் தம்வசப்படுத்தினார்.

தேசியச் சேவையில், சிங்கப்பூர் ஆகாயப்படையில் அவருடைய படைப்பிரிவில் ஆக வேகமாக ஓடிச் சாதனை புரிந்திருக்கிறார் மதிமாறன். மற்ற வீரர்களுக்கு அவர் பயிற்சியும் வழங்கினார்.

லண்டனில் பட்டப்படிப்பின்போது ஓட்டப்பந்தயப் போட்டிகளில் ஓடுவதிலிருந்து இடைவேளை எடுத்த மதிமாறன், மீண்டும் அதற்குத் திரும்புவதற்கு நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியின் தொலைதூர ஓட்ட அணியும் ‘எஸ்எம்ஏ’வும் வழிவகுத்தன.

சங்கத்தின் மூலம் பெஸ்தா சுக்கான், ஆசிய மாஸ்டர்ஸ் போட்டிகள் போன்றவற்றில் அவர் பங்கேற்றார். 2019ல் 3,000 மீட்டர் பல பாணித் தடையோட்டத்தில் (ஸ்டீபல் சேஸ்) ஆசியாவில் நான்காம் நிலையை எட்டி, ‘எஸ்எம்ஏ’ சாதனையை முறியடித்தார். அதே ஆண்டு பெஸ்தா சுக்கான் 5,000 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் நிலையிலும் 1,500 மீட்டர், 800 மீட்டர், 400 மீட்டர் ஓட்டங்களில் முதல் நிலையிலும் வந்தார் மதிமாறன்.

43 வயதிலும் 2.4 கிலோமீட்டர் ஓட்டத்தை 7 நிமிடம் 40 நொடிகளில் அவர் முடித்துள்ளார். சென்ற ஆண்டு (2025) சிங்கே அணிவகுப்பில் 5 மீட்டர் உயரத்திலிருந்து குதித்து ‘ஸ்கேட்டிங்’ சாகசம் படைத்தார். “இனி தொடர்ந்து என் சொந்தச் சாதனைகளை முறியடிக்க விரும்புகிறேன். மனம் வைத்தால் நிச்சயம் முடியும்,” என்றார் மதிமாறன்.

தொலைக்காட்சியில் போட்டிகளைக் கண்டதால் நாட்டம்

வேகநடை மூலம் தோழிகளான கெளசலா (இடம்), கோமதி.
வேகநடை மூலம் தோழிகளான கெளசலா (இடம்), கோமதி. - படம்: கோமதி ஜெயராமன்

“நான் 19 வயதிலிருந்து வேக நடையில் ஈடுபட்டு வருகிறேன். ஆசிய விளையாட்டுகளில் மியன்மாரைச் சேர்ந்த ஒருவர் போட்டியிடுவதைத் தொலைக்காட்சியில் கண்டதும் எனக்கும் அதில் பங்கெடுக்க ஆர்வம் பிறந்தது. நான் 1984ல் வேகநடைப் பயிற்சியைத் தொடங்கினேன். ‘ஸ்போர்ட்எஸ்ஜி’மூலம் பயிற்றுவிப்பாளர் டெரிக் டி சூசாவுக்கு அறிமுகமாகினேன். அவரிடமும் பின்பு அமுதவல்லியிடமும் பயிற்சி பெற்றேன். ‘சுவிஃப்ட் கிளப்’ உறுப்பினராக இருந்தேன். 2017ல் ‘எஸ்எம்ஏ’வில் இணைந்தேன்,” என்றார் கெளசலா கோர். 2019 பெஸ்டா சுக்கான் 3,000 மீட்டர் நடையில் வெண்கலம், ‘கிளப் ஸூம்’ 1,200 மீட்டர் இருபாலர் நடையில் ஏழாவது இடம் உட்பட பல வெற்றிகளை அவர் பெற்றுள்ளார்.

புகழ்பெற்ற ‘பிக் வாக்’

ஸ்டர்லிங் ரோட்டில் வளர்ந்த நாகலிங்கம் சில்வா, 74, நண்பர்களுடன் சேர்ந்து வேக நடையில் ஈடுபட்டார். குவீன்ஸ்டவுனிலும் ஆர்ச்சர்ட் ரோட்டிலும் நடைப் பயிற்சி மேற்கொண்டார்.

“1960களில் ‘பிக் வாக்’ போட்டியில் நான் கலந்துகொண்டேன். ஓட்டப்பந்தய வீராங்கனை ஜெயமணி, கண்ணன், பிகேஎஸ் மணியம், கே திரு போன்றோருடன் கலந்துகொண்டேன்,” என்றார் சில்வா.

‘சுவிஃப்ட் கிளப்’ ஏற்பாடுசெய்த 10,000 மீட்டர் போட்டியில் 1968, 1969ல் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்; 1972 பெஸ்டா சுக்கான் போட்டியிலும் பங்கேற்றிருந்தார் சில்வா.

ஓட்டத்திலும் குத்துச்சண்டையிலும் பற்று

சிங்கப்பூரில் மூன்று நட்சத்திரங்கள் கொண்ட ஒரே குத்துச்சண்டை நடுவர் ஸ்டீவன் நாதன்.
சிங்கப்பூரில் மூன்று நட்சத்திரங்கள் கொண்ட ஒரே குத்துச்சண்டை நடுவர் ஸ்டீவன் நாதன். - படம்: ஸ்டீவன் நாதன்

400 மீட்டர், 800 மீட்டர், 1,500 மீட்டர் போன்ற பந்தயங்களில் ஓடுபவர் ஸ்டீவன் நாதன். ராணுவத்தில் இருந்தபோது குத்துச்சண்டையிலும் ஈடுபடத் தொடங்கினார். மேற்பார்வையாளரின் உந்துதலில் சிங்கப்பூர் ஆயுதப்படை விளையாட்டு மன்றக் (சாஃப்சா) குத்துச்சண்டைப் போட்டியில் கலந்துகொண்டார். “முதன்முறை எனக்குப் பேரடி, தோற்றேன். ஆனால், அடுத்த ஆண்டு அதே போட்டியில் வென்றேன்,” என்றார் அவர்.

விளையாடுவதைவிட நடுவராக இருப்பதிலேயே அவருக்கு அதிக ஆர்வம்.

சிங்கப்பூரில் மூன்று நட்சத்திரங்கள் கொண்ட ஒரே குத்துச்சண்டை நடுவராக அவர் 2015ல் தகுதிபெற்றார். மூன்று நட்சத்திரங்கள் வைத்திருப்போர் ஒலிம்பிக் போட்டிகளுக்குக்கூட நடுவராக இருக்கலாம்.

2023, 2024ல் அய்பா, ‘வர்ல்ட் பாக்சிங்’ ஆகிய அமைப்புகளின்கீழ் அனைத்துலகத் தொழில்நுட்ப அதிகாரியாகப் பணியாற்ற அவர் தகுதிபெற்றார்; அதன்மூலம் நடுவர்களை மேற்பார்வையிடுபவராகவும் அவர்களுக்குப் பயிற்சி வழங்குபவராகவும் இருந்து வருகிறார் ஸ்டீவன் நாதன்.

அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள்

(இடமிருந்து) ஏடம் சிவப்பிரகாசம், சந்திரசேகரன், ஜெஃப்ரி இங், யூசஃப் கான்.
(இடமிருந்து) ஏடம் சிவப்பிரகாசம், சந்திரசேகரன், ஜெஃப்ரி இங், யூசஃப் கான். - படம்: ரவி சிங்காரம்

“நான் வேலையிலிருந்து ஓய்வுபெற்றதும் 55 வயதில் வேகநடையில் ஈடுபடத் தொடங்கினேன். அன்றிலிருந்து நான் உள்ளூரிலும் வெளியூரிலும் பல போட்டிகளில் கலந்துகொண்டுள்ளேன். ஆண்டுதோறும் குறைந்தது 15 போட்டிகளில் பங்கேற்கிறேன்,” என்றார் முன்னாள் காவல்துறை அதிகாரி ஜான் குட்டி ஸ்டான்சிலாஸ்.

“எஸ்எம்ஏ, விளையாட்டாளர்களை வெளியூருக்கு அனுப்பிவருகிறது. அண்மையில், சென்னையில் நடைபெற்ற ஆசிய மாஸ்டர்ஸ் போட்டிகளுக்கு நாங்கள் 15 போட்டியாளர்களை அனுப்பினோம். வெற்றி தோல்வி முக்கியமல்ல; அவர்களின் நலன் மேம்படுகிறது,” என்றார் ‘எஸ்எம்ஏ’ தலைவர் கோவிந்தராஜு.

“வயதாக ஆக, செய்யும் பயிற்சியின் தீவிரத்தைக் குறைக்காமல், எண்ணிக்கையை மட்டும் குறைத்துக்கொள்ள வேண்டும். முன்பு 200 மீட்டர் ஓட்டத்தில் 15 முறை ஈடுபட்டால், இப்போது 8லிருந்து 10 முறை வரை ஓட வேண்டும்,” என்றார் யூசஃப் கான்.

மேல் விவரங்களுக்கு: https://www.facebook.com/SingaporeMastersAthletics/

குறிப்புச் சொற்கள்