ஒப்பிலான் சங்கம் (சிங்கப்பூர்) எனும் புதிய பொதுநலச் சமூக அமைப்பு அக்டோபர் 1ஆம் தேதி இரவு அதிகாரபூர்வமாக ‘ஹோம்டீம்என்எஸ் காத்திப்’பில் அறிமுகம் காண்கிறது.
இரவு நடைபெறும் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மற்றும் கலாசார, சமூக, இளையர்துறை மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யான் வருகையளிக்கிறார்.
அவருடன் வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக், அல்ஜுனிட் அடித்தள ஆலோசகர் டாக்டர் ஃபைசல் அப்துல் அஸீஸ் ஆகியோரும் பங்கேற்பர்.
சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தின் ஆலோசகர் பேராசிரியர் அ வீரமணி, வளர்தமிழ் இயக்கத் தலைவர் நசீர் கனி, ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத் (சிங்கப்பூர்) தலைவர் முகைதீன் அப்துல் காதர், ‘செம்மொழி’ இதழாசிரியர் இலியாஸ் ஆகியோர் வாழ்த்துரையாற்றவுள்ளனர்.
சிங்கப்பூரில் முதன்முதலில் தேசிய சேவை செய்தவர்களில் ஒருவரான திரு முகம்மது ஜமாலுத்தீன், 76, சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் விழிப்புப் படையில் (Vigilante Corps) 12 ஆண்டுகள் பகுதிநேரமாகப் பணியாற்றியவர்.
1960ல் பத்து வயதில் சிங்கப்பூர் வந்த அவர்,1977ஆம் ஆண்டு முதல் ஆயர் ராஜா உணவு நிலையத்தில் ‘முகமது இஸ்மாயில்’ உணவகத்தை நடத்திவந்துள்ளார்.
“நல்லுள்ளங்களின் உந்துதலாலும் முயற்சியாலும் இச்சங்கம் தொடங்கியுள்ளது; அரசாங்கமும் அங்கீகாரம் வழங்கியுள்ளது,” என்றார் திரு ஜமாலுத்தீன்.
“எங்கள் முக்கிய நோக்கங்களில் ஒன்று மேல்படிப்புக்கு உதவிக்கரம் நீட்டுதல். இஸ்லாமியக் கல்விக்குத் துணைப்பாட நிலையம் அமைப்போம். வயதானவர்களுக்கு மருத்துவ வசதிகள் வழங்குவோம். இங்குள்ள சட்டதிட்டங்கள்பற்றி வழிகாட்டுவோம். பெண்கள் முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோம். நல்ல செயல்திட்டங்களைச் செயல்படுத்துவோம்,” என்றார் பொருளாளர் ஜபுகர் சாதிக் (அல் மஹ்ஃபி).
தொடர்புடைய செய்திகள்
“சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாகப் புலம்பெயர்ந்திருந்தாலும் பெரும்பாலானவர்கள் உணவகத் தொழிலில் ஈடுபட்டிருந்ததால் சமூகமாக ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தவில்லை.
“தற்போது இரண்டாம் தலைமுறை, சங்கத்தின் தேவை அறிந்து இம்முயற்சியை எடுத்துள்ளது,” என்றார் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷாநவாஸ்.
சங்கத்தின் ஆலோசகராகத் திரு முகம்மது கவுஸ் இருக்கிறார்.
சிறப்புமிக்க சிறு கிராமம்
தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தின் மன்னார் வளைகுடாக் கடற்கரையோரம் அமைந்துள்ளது ‘ஒப்பிலான்’ எனும் சிறு கிராமம்.
“எல்லையற்றுப் பரவியிருக்கும் உடைமரங்கள், மனத்தோடு ஒட்டிக்கொள்ளும் கடலோரக் காற்று, கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தலின் தொன்மையும் நிறைந்தது,” என ஒப்பிலான் அழகை வர்ணிக்கிறார் ஷாநவாஸ்.
“வழக்குப் பெயர்களாகப் பல கிராமங்களுக்கு ஒரே பெயர் இடப்பட்டுக் குழம்பும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகின் வேறு எந்தக் கிராமத்திற்கும் இந்தப் பெயர் இல்லை.
“தனித் தமிழ்ப் பெயர்களை நாடுதோறும் விதைத்த மொழிச் செம்மல் மறைமலை அடிகளாரின் புகழ்பெற்ற பெயர்ச்சொல் அகராதியில் அனிச்சம், ஆதிரை, இன்பா, ஈழச்செல்வி, எழிலி, ஒண்டொடி, ஓவியா, அன்பன், ஆதவன், இனியன், ஈழவன், என்னவன், ஏரழகன், உறங்காப்புலி, ஊரன், ஐயன் என்ற பெயர்களோடு ஒப்பிலான் என்ற பெயரும் இடம்பெற்றுள்ளது.
“கிளையால், நிலத்தால், குழுவால், காலத்தால், பருவத்தால், மரபால் பெயர் பெற்ற ஊர்களின் பெயருக்கு மத்தியில் இது ஒரு வினையால் பெயர் கொண்ட ஊராக ஆராய்ச்சிக்கு உரியதாகிறது.
“பக்கத்துக் கிராமங்கள் ஒத்தப்பனை, ஒத்தவீடு என்று எதுகை மோனையில் வரிசைபிடிப்பதும் இது ஒரு புலவரின் கைங்கரியம் பெற்ற ஊராக இருக்குமோ என்ற எண்ணத்தை மேலோங்கச் செய்கிறது,” என வர்ணித்தார் திரு ஷாநவாஸ்.
போர்ச்சுகீசிய ஆட்சிக்காலத்தில் ஒப்பிலானில் முத்து எடுக்கப்பட்டது. அங்குப் பனைத்தொழிலும் மீன்பிடித்தொழிலும் முன்னிலை வகித்தன என்றும் அவர் கூறினார்.
சிங்கப்பூருக்குச் சொந்தமாகினர்
“ஒப்பிலான் கிராம மக்கள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை சிங்கப்பூருக்குக் குழுக்களாகக் குடியேறினர்.
“இதில் தனிச்சிறப்பு என்னவெனில், ஜப்பானிய ஆட்சிக்காலத்திற்குப் பிறகு சிங்கப்பூரைத் தவிர வேறு எந்த ஊருக்கும், மலேசியாவுக்குக்கூட நாங்கள் புலம்பெயரவில்லை. ஒப்பிலானைக் ‘குட்டிச் சிங்கப்பூர்’ என்றுகூடச் சொல்லலாம்,” என்றார் திரு ஷாநவாஸ்.
சிங்கப்பூரில் ஒப்பிலானைப் பூர்வீகமாகக் கொண்ட 500 குடும்பங்கள் வாழ்கின்றன என்பது அவருடைய கணிப்பு.
“1940களில் கூலித் தொழிலாளர்களாகவும் கடைச் சிப்பந்திகளாகவும் சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த ஒப்பிலான் மக்களின் சந்ததியினர் இன்று தீவெங்கும் பரவியுள்ளனர்,” என்றார் அவர்.
“1973ல் பதிவுபெற்று இயங்கிய ‘தோஸான்’ போக்குவரத்து நிறுவனத்தில் கல், மணல் சரக்குக் கப்பலில் அதிகம் பேர் கூலித் தொழிலாளர்களாக இருந்தனர். அதற்கு முன்னதாகவே கப்பலில் மண்டூர்களாகப் பலர் வேலை செய்துள்ளனர்.
“கணக்காயர், தொழில்நுட்பர், கல்வியாளர் போன்ற தகுதிகள் இல்லாமல் தம் உடல் உழைப்பால் சிங்கப்பூர் உணவுப் பண்பாட்டில் குறிப்பிடத்தக்க இடத்தைத் தக்கவைத்துத் தம் குடும்பத்தின் நலனே தன் நலமெனக் கருதும் பெற்றோர் வளர்த்த பிள்ளைகள், இன்று சிங்கப்பூரில் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிலையங்களில் பட்டம் பெற்றுச் சிங்கப்பூர்ச் சமூகத்தில் குறிப்பிடத்தக்கவர்களாகத் திகழ்கின்றனர்,” என்றார் திரு ஷாநவாஸ்.
2000க்குப் பிறகு முதல் தலைமுறைப் பட்டாதாரிகள் பலர் உருவாகி சமூகத்தில் மருத்துவர், மருந்தாளுநர், அரசாங்க ஊழியர்களாகவும் தங்களது பாரம்பரியத் தொழிலில் புதுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் வல்லுநர்களாவும் உயர்ந்தனர்.
சிங்கப்பூர் இலக்கியப் பரிசு பெற்ற எழுத்தாளர் ஷாநவாஸ், காலஞ்சென்ற கவிஞர் இளம்பரிதி, எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சிப் புகழ் உதுமான் கனி போன்றவர்கள் சிங்கப்பூர்க் கலை இலக்கிய உலகில் அதிகம் அறியப்பட்டவர்கள்.
உணவகத் துறையில் தனித்திறம் படைத்தவர்கள்
சிங்கப்பூரின் பண்பாட்டு அடையாளமாகத் திகழும் அங்காடி உணவுக் கடைகளில் ஒப்பிலான் மக்கள் வேலை செய்ததாகவும் பல இன மக்களின் சுவைக்கேற்ப உணவுகளை உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது.
“சிங்கப்பூரிலுள்ள மீ கோரெங், ரோஜாக், ரொட்டி பரோட்டா போன்ற உணவுகளை இந்தியர்கள் விரும்பும் வகையில் மசாலா சேர்த்து மேலும் காரமாகவும் ருசியாகவும் மாற்றினோம்,” என்றார் ஜமாலுதீன்.
இத்தகைய உணவுகளை ஒப்பிலான் மக்கள் மீண்டும் தமிழகத்துக்கும் கொண்டுசென்றுள்ளதாகக் கூறினார் திரு ஜமாலுத்தீன்.
“ரோஜாக்கின் “குவா” இனிப்பும் காரமும் கலந்த சுவையுடன் இருக்கும். பழக்கப்படுத்திவிட்டால் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலும் சலிக்காது. அந்தக் குவாவை மற்ற இனத்தவர்களும் சாப்பிடும் வகையில் உருவாக்கியவர்களில் ஒப்பிலான் கடைக் காரர்களுக்குப் பங்கு உண்டு,” என்றார் ஷாநவாஸ்.
சிங்கப்பூர்வாழ் ஒப்பிலான் மக்களின் உணவுப் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் ஷாநவாஸ் ‘சத்து கோஸோம் சத்து துளொர்’, ‘அயல் பசி’, ‘நனவு தேசம்’ என தேசிய அளவில் பரிசுபெற்ற மூன்று நூல்களை எழுதியுள்ளார்.
ஒப்பிலான் சமூகத்தினர் 100க்கும் அதிகமான உணவுக் கடைகளை இன்றும் நடத்திவருவதாகக் கூறினார் ஷாநவாஸ். அல் காசிம், அல் ஹபீப் உணவுக்கடைகள் போன்றவை அவற்றில் அடங்கும்.
சங்கத்தில் இணைவது
தொடக்கமாக, ஏறக்குறைய 220 உறுப்பினர்கள் சங்கத்தில் பதிவுசெய்துள்ளனர்.
தற்போது உறுப்பினர்களாக ஒப்பிலான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் உள்ளனர். ஆனால் அனைத்துத் தரப்பு மக்களும் உறுப்பினர்களாகச் சேரலாம்.
சங்கத்தில் சேர விரும்புவோர் 80285757 என்ற எண்ணை அழைக்கலாம். பதிவுக் கட்டணம் இல்லை. மாதச் சந்தா $10. மேல்விவரங்களுக்கு https://oppilan.org.sg/ எனும் இணையத்தளத்தை நாடலாம்.

