சேவைத்துறையில் சிறந்து விளங்குவோரை அங்கீகரிக்கும் தங்க சேவை விருது

2 mins read
ec53213c-9fd2-48d4-af40-493ea87ddeca
திரு ரமேஷ் தியாளன்கோவிந்தராஜு.  - படம்: சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம் 
multi-img1 of 2

பணி மாற்றத்தை ஆவலுடன் எதிர்பார்த்து, சிங்கப்பூர் ஹோட்டல் துறையில் காலடி எடுத்து வைத்த திரு ரமேஷ் தியாளன் கோவிந்தராஜு, 24 ஆண்டுகளாக ஹோட்டல் சேவைக்குழுவில் பணிபுரிந்து வருகிறார். 

குறிப்பாக, உடல் நலமற்ற விருந்தினர்களை அக்கறையுடன் கவனித்து வரும் அவர், சக்கர நாற்காலிகளுக்கு ஏற்பாடு செய்தல், விருந்தினர் நலத்தை அவ்வப்போது விசாரித்தல் என்று அவர்களுக்கு முன்னுரிமை அளித்து வந்தார் திரு ரமேஷ். 

சேவைத் துறையின் தொடக்கத்தில் பல சவால்களை எதிர்கொண்டாலும் முகமலர்ச்சியோடு விருந்தினர்களிடம் அன்பாகப் பேசி, உபசரித்து, அவர்களுக்குத் தேவையானதைத் தொடர்ந்து நிறைவு செய்து வருகிறார் திரு ரமேஷ். 

“பொறுமை என்பது சேவைத் துறையில் பணிபுரியும் அனைவருக்கும் அவசியம். அது சாதனைகளுக்கு வழிவகுக்கும்,” என்று தெரிவித்தார் திரு ரமேஷ். 

நவம்பர் 8ஆம் தேதி அன்று ‘வோகோ ஆர்ச்சர்ட்’ விடுதியில் நடைபெற்ற தங்க சேவை விருது (Service Gold Award 2024) நிகழ்ச்சியில் தமது உன்னத சேவைக்காக திரு ரமேஷ் அங்கீகரிக்கப்பட்டார். 

சிங்கப்பூர் கனிவன்பு இயக்கமும் சிங்கப்பூர் ஹோட்டல் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த தங்க சேவை விருது நிகழ்ச்சி, 30வது ஆண்டாக நடைபெறுகிறது. இதில் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 129 சேவைத்துறை ஊழியர்களுக்கு விருது அளித்தார்.

பணியிடத்தில் இரக்க குணம், தன்னலமற்ற சேவை, மரியாதை ஆகியவற்றை வெளிப்படுத்திய ஊழியர்களை இந்த விருது நிகழ்ச்சி சிறப்பித்தது.  

திரு ரமேஷ் போல விருது பெற்ற மற்றொருவர், 12 ஆண்டுகள் ஹோட்டல் துறையில் பணிபுரிந்து வரும் திரு சுந்தரம் கருணாநிதி. 

பணிபுரியும் ஹோட்டலுக்கு ஒரு முறை வருகை அளித்த ஜப்பானிய குடும்பத்தை நன்கு கவனித்துக்கொண்டார் திரு சுந்தரம். அவரது சேவையைப் பெரிதும் பாராட்டிய அந்தக் குடும்ப உறுப்பினர்கள், ஆண்டுதோறும் அவருக்கு ஒரு வாழ்த்து அட்டை அனுப்புவார்கள் என்று தெரிவித்தார் திரு சுந்தரம். 

“ஹோட்டலுக்கு வருகை அளிக்கும் விருந்தினர்களைச் சந்தித்து, அவர்களுடைய மொழி, கலாசாரத்தைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது,” என்றார் திரு சுந்தரம். 

சிங்கப்பூர் சுற்றுலாத் துறையில் தங்கும் விடுதிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சிங்கப்பூர் சுற்றுலாத் திட்டத்தின் செலவுகளில் 20% ஹோட்டல் துறைக்குரியது.  

“தங்கள் பணியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படும் ஊழியர்களை அங்கீகரிக்க இதுபோன்ற விருதுகள் அதிகமான ஹோட்டல் உரிமையாளர்களை ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம்,” என்று தெரிவித்தார் சிங்கப்பூர் ஹோட்டல் சங்கத்தின் தலைமை அதிகாரி திரு கென்னத் லீ. 

சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல் தொழில்துறையில் சுமார் 30,000 ஊழியர்கள் உள்ளனர். பணிக்கு அப்பாற்பட்ட சேவைக்குணம், கனிவன்பு போன்றவற்றின் அடிப்படையில் சேவைத்துறை ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 

குறிப்புச் சொற்கள்