ஒரே கோட்டில் சிங்கப்பூரை வரையும் ஓவியர் ஏ பி ஸ்ரீதர்

3 mins read
திரு லீ குவான் யூவின் இறப்பால் கடற்சிங்கத்தையே கண்கலங்கச் செய்தவர்
e6f33ff3-aec0-4860-9dd0-52b0dd3c7f4d
தமது 14வது வயதிலிருந்தே திரு ஸ்ரீதர் ஓவியங்கள் வரைவதில் முழு ஈடுபாடு கொண்டிருந்தார். - படம்: ஏ பி ஸ்ரீதர்
multi-img1 of 2

இந்தியாவில் 23 காட்சிக்கூடங்களை நிறுவியுள்ள ஓவியர், 55 வயது ஏ.பி. ஸ்ரீதர்.

கலைக் கல்லூரிக்கே செல்லாமல், சுயமாக வளர்த்துக்கொண்ட திறனால் திரு ஸ்ரீதர் இன்று தம் ஓவியத் திறனால் உலகெங்கும் முத்திரை பதித்து வருகிறார்.

அவரது ஓவியக்கலைக்கு அனைத்துலக மேடையில் பாராட்டுமழை தொடர்ந்து பொழிந்து வருகிறது. இந்தியா-பிரான்ஸ் நல்லுறவை வெளிப்படுத்தும் இவரது ஓவியத்துக்காக அன்றைய பிரெஞ்சு அதிபர் பிரான்சுவா ஆலந்து தம் கைப்பட நன்றிமடல் ஒன்றை எழுதியனுப்பினார்.

சிங்கப்பூரிலும் ‘வெள்ளை இளவரசி’ என்ற திரு ஸ்ரீதரின் ஓவியத் தொடர், பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

தமது எதிர்கால இலக்குகளிலும் சிங்கப்பூரை மனதில் வைத்துள்ளதாகக் கூறியுள்ளார் திரு ஸ்ரீதர்.

பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் முன்பு காட்சிப்படுத்தப்பட்ட திரு ஸ்ரீதரின் ‘வெள்ளை இளவரசி’ ஓவியத் தொடர்.
பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் முன்பு காட்சிப்படுத்தப்பட்ட திரு ஸ்ரீதரின் ‘வெள்ளை இளவரசி’ ஓவியத் தொடர். - படம்: ஏ பி ஸ்ரீதர்

‘ஒரே கோட்டில் சிங்கப்பூர்’

சிங்கப்பூரின் முக்கிய அடையாளங்களையும் சிங்கப்பூருக்கும் இந்தியாவிற்கும் உள்ள பண்பாட்டுப் பரிமாற்றத்தையும் பல அடி நீளத் தாளில் வரையும் முயற்சியை திரு ஸ்ரீதர் தொடங்கியுள்ளார். வரும் 2025 ஜனவரிக்குள் அவர் அதை முடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘Singapore in a Single Line’ எனப்படும் அந்த ஓவியத்தில், மையில் எந்த இடத்திலும் இடைவெளி இருக்காது; கையைத் தாளிலிருந்து எடுக்காமலேயே வரைந்திருப்பது போன்று தோன்றும். திரு ஸ்ரீதர் உருவாக்கி வரும் ‘உலகமே ஒற்றைக் கோட்டில்’ என்ற ஓவியத் தொடரில் இது இடம்பெறும்.

திரு ஸ்ரீதர் உருவாக்கிவரும் ‘உலகமே ஒற்றைக் கோட்டில்’ என்ற ஓவியத் தொடரில், மையில் இடைவெளியே இல்லாத ஓவியங்கள் அடங்கும்.
திரு ஸ்ரீதர் உருவாக்கிவரும் ‘உலகமே ஒற்றைக் கோட்டில்’ என்ற ஓவியத் தொடரில், மையில் இடைவெளியே இல்லாத ஓவியங்கள் அடங்கும். - படம்: ஏ பி ஸ்ரீதர்

இதுபோல் அண்மைய ஜி20 மாநாட்டிலும் அனைத்து ஜி20 நாடுகளின் அடையாளங்களையும் சுமார் 33 அடி நீளத் தாளில் வரைந்து கிட்டத்தட்ட 1,000 பிரதிகளை உலகெங்கிலுமுள்ள முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கினார். அது ஏழு மாத உழைப்பின் பலனாக விளைந்தது.

அனைத்து ஜி20 நாடுகளின் அடையாளங்களையும் சுமார் 33 அடி நீளத் தாளில் வரைந்து அண்மைய ஜி20 மாநாட்டில் படைத்தார் திரு ஸ்ரீதர்.
அனைத்து ஜி20 நாடுகளின் அடையாளங்களையும் சுமார் 33 அடி நீளத் தாளில் வரைந்து அண்மைய ஜி20 மாநாட்டில் படைத்தார் திரு ஸ்ரீதர். - படம்: ஏ பி ஸ்ரீதர்

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் சுதந்திரத் தினத்தன்று ஆஸ்திரேலியாவில் சிட்னி கிரிக்கெட் மைதானத்திலும் ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையேயான நல்லுறவை வெளிப்படுத்தும் ஒற்றைக் கோட்டு ஓவியத்தைக் காட்சிப்படுத்த உள்ளார் திரு ஸ்ரீதர்.

கண்கலங்கிய கடற்சிங்கம்

திரு லீ குவான் யூ இறந்தபோது சிங்கப்பூர் கடற்சிங்கம் கண்ணீர் விடுவதாக திரு ஸ்ரீதர் வரைந்திருந்தார்.
திரு லீ குவான் யூ இறந்தபோது சிங்கப்பூர் கடற்சிங்கம் கண்ணீர் விடுவதாக திரு ஸ்ரீதர் வரைந்திருந்தார். - படம்: ஏ பி ஸ்ரீதர்
சிங்கப்பூர் என்பதே ஒரு கனவுதான். அக்கனவை நனவாக்கிய தலைவர் இறந்தால் என்ன விளைவு? சிங்கப்பூரின் அடையாளமே கண்கலங்கிவிடும். திரு லீயைப் பற்றிய நூல்கள், கட்டுரைகளைப் படித்துள்ளேன். நிறைய கேள்விப்பட்டுள்ளேன். அவரை நேரில் சந்திக்க விரும்பினேன்; ஆனால் முடியவில்லை. அவரது ஆளுமைக்கு உகந்த படைப்பை வழங்க விரும்பினேன்.
ஏ பி ஸ்ரீதர், 55

முன்னாள் பிரதமர் லீ குவான் யூ இறந்தபோது சிங்கப்பூர் கடற்சிங்கம் கண்ணீர் விடுவதாக திரு ஸ்ரீதர் வரைந்திருந்தார். அவரது ஓவியத்தைப் பிரதமர் அலுவலகம் பாராட்டிப் பெற்றுக்கொண்டது.

“சிங்கப்பூர் என்பதே ஒரு கனவுதான். அக்கனவை நனவாக்கிய தலைவர் இறந்தால் என்ன விளைவு? சிங்கப்பூரின் அடையாளமே கண்கலங்கிவிடும்.

“திரு லீயைப் பற்றிய நூல்கள், கட்டுரைகளைப் படித்துள்ளேன். நிறைய கேள்விப்பட்டுள்ளேன். அவரை நேரில் சந்திக்க விரும்பினேன்; ஆனால் முடியவில்லை. அவரது ஆளுமைக்கு உகந்த படைப்பை வழங்க விரும்பினேன்,” என நினைவுகூர்ந்தார் திரு ஸ்ரீதர்.

சிங்கப்பூரில் நிரந்தரக் காட்சிக்கூடத்தை அமைப்பதைக் குறித்து சிந்தித்து வருவதாகவும் கூறினார் திரு ஸ்ரீதர்.

“சிங்கப்பூரில் ஏற்கெனவே எத்தனையோ காட்சிக்கூடங்கள் உள்ளன என்பதால் மிகவும் தனித்துவமானதாக இருக்கவேண்டும்,” என்றார். சிங்கப்பூரின் விலைவாசியால் தற்போது மற்ற நாடுகளில்தான் காட்சிக்கூடங்கள் அமைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறினார்.

திரு ஸ்ரீதருக்கு ‘மோனா லிசா’ ஓவியம் மீது தனி மோகம் உள்ளது. அதனால், மோனா லிசாவைப் பல்வித புத்தாக்கக் கோணங்களில் காண்பிக்கும் காட்சிக்கூடத்தைப் புதுச்சேரியில் நவம்பரில் திறக்கவுள்ளார் திரு ஸ்ரீதர். அதோடு, பனிக்கூழின் வரலாற்றைச் சித்திரிக்கும் பனிக்கூழ் அரும்பொருளகத்தையும் அதே மாதம் திறக்கவுள்ளார்.

திரு ஸ்ரீதர் ‘மோனா லிசா’வைப் பல்வேறு கோணங்களிலும் வரைந்துள்ளார்.
திரு ஸ்ரீதர் ‘மோனா லிசா’வைப் பல்வேறு கோணங்களிலும் வரைந்துள்ளார். - படம்: ஏ பி ஸ்ரீதர்
தன் உருவில் மோனா லிசா.
தன் உருவில் மோனா லிசா. - படம்: ஏ பி ஸ்ரீதர்

அடுத்த ஆண்டு 19 காட்சிக்கூடங்கள் அடங்கிய அதிசயத் தெருவையும் புதுச்சேரி, கோவா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட இடங்களில் திறக்கவுள்ளதாகக் கூறினார் திரு ஸ்ரீதர்.

‘நொடிப்பொழுதில் உருவாக்கப்படும் ஓவியங்கள்’ என்ற புதிய பாணியையும் திரு ஸ்ரீதர் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்துவார். அதற்காகக் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அவர் சுமார் 90,000 ஓவியங்களை உருவாக்கியும் சேகரித்தும் வந்துள்ளார்.

“நான் ஒன்றைச் செய்வதில் குறிவைத்தால் அதைச் செய்துமுடிக்கும்வரை எனக்குத் தூக்கம் வராது. உலகத்தைத் தொடவேண்டும் என்ற குறிக்கோள் இருந்தால் நிச்சயம் முட்டுக்கட்டைகளை அகற்றி சாதிக்கலாம்,” என்றார் திரு ஸ்ரீதர்.

குறிப்புச் சொற்கள்