பத்தாண்டுகளுக்குப் பிறகு தேசிய தின அணிவகுப்பு இவ்வாண்டு மீண்டும் தேசிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
பல்வேறு வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள், கலைஞர்கள், தொண்டூழியர்கள் ஆகியோர் தங்களின் கடின உழைப்பையும் திறன்களையும் வெளிப்படுத்தவுள்ளனர். இவர்களோடு இவ்வாண்டின் அணிவகுப்பில் சிங்கப்பூர் இந்திய இளையர்கள் பலரும் ஆர்வத்தோடும் கலந்துகொள்ள ஆயத்தமாகி வருகின்றனர்.
ஆறு அத்தியாயங்கள்
இவ்வாண்டு அணிவகுப்பில் ஆறு அத்தியாயங்கள் இடம்பெறவுள்ளன. முதலாம் அத்தியாயம், ‘தன்னிலை தாண்டி நன்னிலை’ (Go Beyond Self) அணிவகுப்புப் பிரிவு மூலம் கொண்டாட்டங்களைத் தொடங்கும்.
அத்தியாயம் இரண்டு, ‘இயல்பு கடந்து மேம்படுவோம்’ (Go Beyond the Ordinary) மக்கள் அணிவகுப்பிற்கு வழியமைக்கிறது.18 வண்ணமயமான அலங்காரம் கொண்ட இந்த ஊர்வலம், பல முக்கிய வேலைத் துறைகளை தேர்ந்தெடுத்து, சிங்கப்பூரர்களை வெளிச்சமிட்டுக் காட்டும்.
மூன்றாம் அத்தியாயமான ‘அளவின்றி முன்னேறுவோம்’ (Go Beyond Our Size), சிங்கப்பூரர்களின் வேர்களையும், சிங்கப்பூரின் வளர்ச்சி எல்லைகளைத் தாண்டி எவ்வளவு தொலைவு கடந்துள்ளது என்பதையும் காட்டும்.
‘காலத்தை விஞ்சிய முன்னேற்றம்’ (Go Beyond Time) எனும் நான்காம் அத்தியாயம், சிங்கப்பூரை அடையாளப்படுத்திய ஒலிகள், நிகழ்ச்சிகள் மூலமாக சிங்கப்பூரின் வளர்ச்சிப் பயணத்தைக் கூறும். கறுப்பு வெள்ளைக் காலத் தொடக்கத்திலிருந்து புகழ்பெற்ற உள்நாட்டுத் தயாரிப்புகள் வரையிலான தொலைக்காட்சி வரலாற்றின் நினைவலைகளை இது மீட்டெடுக்கும்.
அத்தியாயம் ஐந்தான ‘வரம்பு கடந்த வளர்ச்சி’ (Go Beyond Our Limits) வான்வெளி சாகசங்கள் மூலம் பார்வையாளர்களைக் கவரும்.
‘ஒன்றிணைந்து முன்னேறுவோம்’ (Go Beyond, Together) எனும் இறுதி அத்தியாயம், சவால்களைக் கடந்து, மனஉறுதி ஆகியவற்றை வெளிப்படுத்தி ஒருங்கிணைக்கும் கருப்பொருளோடு நிறைவடைகிறது. இறுதியாக, சிங்கப்பூர் தேசியப் பற்றுறுதி ஏற்கவும், தேசிய கீதம் பாடவும், ‘தி பீப்பிள்ஸ் கொயர்’ இசைக்குழுவின் ஆதரவோடு பார்வையாளர்கள் அழைக்கப்படுவர்.
அச்சமும் பேரார்வமும் கலந்த உணர்வு
சிண்டா இளையர் மன்றம் மூலம் 29 வயதான ஃபாரிஷா ரயீஸ் இவ்வாண்டின் அணிவகுப்பில் பங்கேற்கும் வாய்ப்பைப் பற்றித் தெரிந்துகொண்டார். அத்தியாயம் நான்கில் தமது பங்கேற்பைப் பற்றி அவர் பகிர்ந்துகொண்டார்.
“கிட்டத்தட்ட 42,000 பார்வையாளர்களுக்கு முன்னிலையில் முதன்முறையாக தேசிய தின அணிவகுப்பு மேடையில் நான் பங்கேற்ற தருணத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அச்சமும் பேரார்வமும் கலந்த உணர்வு அது. நாங்கள் நடனமாடியபோது அரங்கத்தில் எழுந்த கைதட்டல்களும் ஆரவாரமும் எங்களுக்கு மேலும் உற்சாகமூட்டி, எங்களது படைப்பை சிறப்பாக வழங்கத் தூண்டியது,” என்றார் ஃபாரிஷா.
சிங்கப்பூர் இந்திய இளையர்கள் வாழ்வில் ஒருமுறையாவது தேசிய தின அணிவகுப்பில் நேரடியாகப் பங்கேற்று, அந்த மறக்க முடியாத பேரனுபவத்தைப் பெற வேண்டும். அதன்வழி நம் சமூகத்தின் தனித்துவமிக்க அடையாளத்தையும் பண்பாட்டுப் பெருமையையும் நாட்டின் ஆகப் பெரிய மேடையில் கம்பீரமாகப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்றும் ஃபாரிஷா வலியுறுத்தினார்.
மூன்றாம் முறையாகப் பங்கேற்பு
தேசிய தின அணிவகுப்பில் மூன்றாவது முறையாகப் பங்கேற்கும் 20 வயதான இளையர் சுஷ்மிதா செந்தில்குமார், பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து ஆடும் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
“எங்கள் குழுவில் ஒன்பது வயதுச் சிறுமி முதல் 60 வயதைக் கடந்த மூத்தோர்வரை பலரும் பங்கேற்கிறார்கள். முதியவர்கள் சோர்வின்றி ஆடுவதைப் பார்க்கும்போது, எங்களைப் போன்ற இளையர்களுக்குப் புதிய தன்னம்பிக்கையும் உற்சாகமும் பிறக்கிறது,” என்றார் சுஷ்மிதா.
வேலை, படிப்பு ஆகியவற்றுக்கு இடையே நேரத்தை முறையாகக் கையாண்டு தேசிய தின அணிவகுப்பில் ஆடுவதை நண்பர்களும் குடும்பத்தினரும் பெருமையுடன் பார்ப்பதாக அவர் மேலும் கூறினார்.
மறக்கமுடியாத தருணம்
2024ஆம் ஆண்டிலிருந்து தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்றுவரும் ரக்ஷனா பாண்டியன், தமது மறக்க முடியாத தருணத்தை நினைவுகூர்ந்தார்.
தேசிய தின அணிவகுப்பைக் காண அரங்கம் முழுவதும் திரண்டிருந்த மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உரத்த குரலில் தேசிய கீதத்தைப் பாடியபோது மெய்சிலிர்த்துப்போனதாக அவர் கூறினார்.


