கவிமாலை அமைப்பின் நிறுவனரும் முன்னாள் ஊடகவியலாளருமான திரு பிச்சினிக்காடு இளங்கோவுக்குப் ‘பாவேந்தர் பாரதிதாசன் விருது’ வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக்களம் ஆண்டுதோறும் நடத்தும் பாவேந்தர் இலக்கிய விழா, சிறப்பு இலக்கிய உரையுடன் இவ்வாண்டும் நடத்தப்பட்டது.
சென்ற மாதம் (ஏப்ரல்) 20ஆம் தேதி மாலை 6 மணியளவில், பாவேந்தர் பாரதிதாசனின் 136ஆம் பிறந்தநாளை நினைவூட்டும் வகையில் இந்த இலக்கிய விழா, தேசிய நூலகத்தின் 16ஆம் தளத்தில் நடந்தேறியது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களத்தின் தலைவர் முனைவர் இரத்தின வேங்கடேசன், இனி வரும் ஆண்டுகளில் பாரதிதாசன் கவிதைகளைப் பள்ளி மாணவர்களிடமும் இளையர்களிடமும் கொண்டுசேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் இரா.தினகரன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் இளையர் முத்து சுவேதா, பாவேந்தரைப் பற்றி உரையாற்றினார்.
மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவரும் சிறப்புப் பேச்சாளருமான திரு ஸ்டாலின் குணசேகரன் கலந்துகொண்டு, ‘பாவேந்தர் கண்ட கனவு’ என்ற தலைப்பில் உரையாற்றினார்
பாரதிதாசன் கண்ட பல கனவுகள் கடைசி வரை நிறைவேறவில்லை எனக் குறிப்பிட்ட திரு ஸ்டாலின், அறிவியல் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டிருந்த பாரதிதாசன், விமானத்தில் ஏறிப் பயணம் செய்ய வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டதையும் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
செல்வி மானஸா தீபனின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு ராமலஷ்மி விஸ்வநாதன், கண்ணன் சேஷாத்ரி, முனைவர் உஷா சுப்புசாமி ஆகியோரின் உரைகள் அழகு சேர்த்தன.
விருது பெற்றதில் மகிழ்ச்சி
உணர்ச்சிமிகு கவிதைக்கும் சிந்தனைமிகு கருத்துக்கும் சமூக மேம்பாட்டுக்கும் மொழி அக்கறைக்கும் பாரதிதாசனைப் போன்று பாடிய கவிஞர்கள் எவரும் இல்லை என்றார் விருது பெற்ற திரு பிச்சினிக்காடு இளங்கோ.
“எந்த இடத்திலும் யாருக்கும் அஞ்சாமல் தமது சொந்தக் கருத்தை நிலைநாட்டியவர் பாவேந்தர்; யாரையும் அவர் விட்டுவைத்ததில்லை. ஆனால், பாரதியாரை மட்டும் தலையிலும் மனத்திலும் சுமந்து வாழ்ந்த கவிஞர் பாவேந்தர்,”என்றார் அவர்.
ஏற்கெனவே பாரதியார் விருதைத் தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்திடமிருந்து பெற்றவர் திரு இளங்கோ. இப்போது பாரதியின் தாசனான பாரதிதாசன் விருதையும் பெறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி என்று அவர் குறிப்பிட்டார்.

