தமிழ்நாட்டின் நன்கு அறியப்பட்ட கவிஞரும் எழுத்தாளருமான முனைவர் தமிழச்சி தங்கபாண்டியனின் கவிதைகள், அவரது எழுத்துப் பணி, சிந்தனை குறித்த நிகழ்வாக “நானும் என் பேனாவும்” என்ற நிகழ்ச்சி அக்டோபர் 25ஆம் தேதி தேசிய நூலக வாரியத்தில் நடைபெற்றது.
வாசகர் வட்டம் ஏற்பாட்டில் இடம்பெற்ற அந்நிகழ்ச்சி தமிழச்சியின் கவிதை வாசிப்புடன் தொடங்கியது. இலக்கிய ஆர்வலர்களான இசக்கிச் செல்வி, நர்கீஸ் பானு, மஹ்ஜபீன், கவிஞர் மோகனப்பிரியா ஆகியோர் தமிழச்சியின் கவிதைகளை வாசித்தனர்.
பேனாவும் நானும் என்ற தலைப்பில் உரையாற்றிய தமிழச்சி தங்கபாண்டியன் தமது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், உரைகள் என அனைத்துக்கும் தமது கள்ளிக்காட்டு நிலமே ஊற்றாக இருப்பதாகச் சொன்னார்.
அம்மண் மக்களின் வாழ்க்கை, மொழி, சித்தாந்தங்கள் எவ்வாறு தமது எழுத்தின் கதையாகவும் மொழியாகவும் இருக்கிறது என்பதை அவர் சுவைபட விவரித்தார். வெயில் பற்றி தமது கவிதையில் வெயிலோடு காதல் உணர்வை எழுதியிருப்பது பற்றி விளக்கியபோது, வெப்ப பூமியான தம் நிலத்தில் வெயில் வெறுக்கப்படுவதில்லை, அது வாழ்வோடு இயைந்து விட்ட ஒன்று என்பதைச் சுட்டினார்.
“தாங்கள் வாழ்கின்ற மண் சார்ந்து படைப்பிலக்கியங்களை உருவாக்கும்போதே அது உணர்வோடு இருக்கும். தலைப்பு, வரிகள் கொடுத்து எழுதுவது செய்வதாக இருக்கும். படைப்பிலக்கியம் என்பது உணர்விலிருந்து முகிழ்க்கும்போதே அதற்கு உயிர் இருக்கும், மற்றவர் உணர்வைத் தொடும்,” என்றார் அவர்.
தம் மண்சார்ந்த உணர்வுகளை தம் மொழியான தமிழிலேயே உயிர்ப்போடு எழுத முடிகிறது. தமக்கு உணர்வுபூர்வமான மொழியாகத் தமிழே இருப்பதால் தாம் தமிழில் மட்டுமே எழுதுவதாக நீண்ட காலம் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்த தமிழச்சி குறிப்பிட்டார்.
தொடர்ந்து இடம்பெற்ற உரையாடல் அங்கத்தில் எழுத்தின் மண்வாசனை குறித்து வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், நாம் உணர்ந்ததை எழுதுவதே சிறந்தது என்றார்.
நிலத்தை அறிய அந்நிலத்தின் வாழ்க்கையை அறிய வேண்டும், மக்களையும் பண்பாடுகளையும் புரிந்துகொள்ள வேண்டும் படைப்புகளைத் தேடி வாசிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, வரவேற்புரை வழங்கிய நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் ஷா நவாஸ், தமிழச்சியின் கவிதைகள் நிலத்தைப் பிடிமானமாகக் கொண்டவை. அறிவியல் தீண்டாத தங்கள் நினைவுலகின் அற்புதங்களைக் கவிதையாக்கும் போக்கைக் கையாண்ட கவிஞர்களில் தமிழச்சி தங்கபாண்டியனும் ஒருவர் என்று குறிப்பிட்டார்.
“கவிஞர் தமிழச்சியின் நூல்களில் ஏறத்தாழ ஆறு அல்லது ஏழு நூல்கள் தேசிய நூலகத்தில் உள்ளன,” என்றார் அவர்.
“வாசிப்பு என்பது படைப்பாளனின் சுவாசமாக இருக்க வேண்டும். வாசிப்புப் பயணத்தைத் தீவிரமாகத் தொடர்ந்தால் ஓர் எழுத்தாளராக உருவாக முடியும் என்று குறிப்பிட்டது மிக முக்கியமானது,” என்றார் நிகழ்ச்சியின் பங்கேற்ற திருவாட்டி அ. மஹ்ஜபீன்.
