பிலிப்பீன்ஸ் கலை விழாவிற்கு நடனம்வழி பங்களித்த மாற்றுத்திறனாளிகள்

பிலிப்பீன்ஸ் கலை விழாவிற்கு நடனம்வழி பங்களித்த மாற்றுத்திறனாளிகள்

படம்: மாயா டான்ஸ் தியேட்டர்

01 Oct 2026 - 5:11 am

2 mins read

மாற்றுத்திறனாளிகள் அங்கம் வகிக்கும் நடனக்குழு ஒன்று, சிங்கப்பூரிலிருந்து பிலிப்பீன்சுக்குச் சென்று அங்குள்ள நிகழ்த்துகலை விழாவில் பங்கேற்றது.

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் செப்டம்பர் 11 முதல் 13 வரை நடைபெற்ற கலை விழாவில் மாயா டான்ஸ் தியேட்டரின் ‘டைவர்ஸ் எபிலிட்டிஸ் டான்ஸ் கலெக்ட்டிவ்’ நிகழ்ச்சியில் சாதனை படைத்தது.

இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள ஒரே நடனப் படைப்பாகத் தங்களது நடனம் இருந்ததாக குழுவினர் கூறினர்.

மணிலாவிலுள்ள பண்பாட்டு மையம் ‘கிரியேட் பிலிப்பீன்ஸ்’ அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த விழா, கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு மீண்டும் நடந்தது.

பலவண்ண ஆடைகளில் திறனை வெளிப்படுத்திய நடனமணிகள்.
பலவண்ண ஆடைகளில் திறனை வெளிப்படுத்திய நடனமணிகள். - படம்: மாயா டான்ஸ் தியேட்டர்

தைவான், ஐரோப்பா, அமெரிக்கா, இந்தோனீசியா, மங்கோலியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இதற்காக ஒன்றுகூடினர்.

தேசிய கலைகள் மன்றத்தின் ஆதரவுடன் கவிதா கிருஷ்ணனின் கலை இயக்கத்திலும் இம்ரான் மனாஃப்பின் தயாரிப்பிலும் ‘ரேண்டம் சேப்டர்ஸ்’ என்ற இந்தத் தயாரிப்பு உருவானது. 

நாடு கடந்தும்கூட எல்லைகளைத் தாண்டி மாற்றுத்திறனாளிகள் கலைகள் வளர்ப்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துரைப்பதாக ஆக்கபூர்வத் தயாரிப்பாளரும் சுற்றுப்பயண மேலாளருமான இம்ரான் தெரிவித்தார்.

“இங்கு சிங்கப்பூர்க் கொடியைப் பெருமையுடன் உயரப் பிடிக்க முடிவதை எண்ணி மகிழ்கிறோம்,” என்றார் அவர்.  

நடனம், இசை, கவிதை, திரைப்படப்பிடிப்பு ஆகியவற்றை நிகழ்ச்சி ஒருங்கிணைத்தது. 

பல்துறைக் கலைஞர் பிப் மொக்ராம், நாடகக் கலைஞரும் எழுத்தாளருமான ஹேமங் யாதவ், இசை இயக்குநரும் வயலின் கலைஞருமான கைலின் யோங் ஆகியோர் இதில் இடம்பெற்றனர். 

ஜூன் லின், வெங் ஜியாயிங், அரசி ராஜ்குமார், லாவெல் சீ ஆகிய கலைஞர்கள் இணைந்து நடனமாடினர்.

கலாசாரப் பதக்கம் பெற்ற மறைந்த தமிழ்க் கவிஞர் ந.பழனிவேலுவின் ‘துணை’ என்ற கவிதையை ஹேமங் யாதவ் உள்வாங்கி விளக்கினார். 

திருவாட்டி கவிதா, பரதநாட்டிய அசைவுகளை வடிவமைத்து ‘ஆரம்பத்திலிருந்தே தொடங்குவோம்’ என்ற தேவதாசனின் கவிதையுடன் பிணைக்கப்பட்ட மாயா டான்ஸ் தியேட்டரின் சிறப்பு அம்சமான படைப்புடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. 

மேடைக்கு அப்பாற்பட்டு, மாயா டான்ஸ் தியேட்டர் கல்வி சார்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தியது. 

நடனக் கலைஞர்கள் செயின்ட் ஸ்கோலாஸ்டிகா கல்லூரி மாணவர்களுக்காக பரதநாட்டியப் பட்டறை ஒன்றையும் திருவாட்டி கவிதா நடத்தினார்.

குறிப்புச் சொற்கள்