கொடைத்தன்மைக்கும் சமுதாயப் பரிவுக்கும் நன்கு அறியப்படும் பெரும் வர்த்தகர் 67 வயது முஹம்மது அப்துல் ஜலீல், அரிய, பரவலாய் அறிந்திராத தகவல்களைப் புதிய நூலின் வழி பகிர்ந்துள்ளார்.
கண்ணீர் மல்க வைத்த, நெகிழ்ச்சிமிகு வாழ்க்கை அனுபவங்கள் சில, ‘சிகரம் தொட்ட சிங்கப்பூர் சீதக்காதி’ என்ற இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மினி என்வைரன்ட்மன்ட் சர்விசஸ் (எம்இஎஸ்) பெருநிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான திரு ஜலீல், கல்வி, கலை, மொழி, பண்பாடு உள்ளிட்ட பல துறைகளுக்கு கொடையாற்றியுள்ளார். அவ்வாறு ஆதரவு தந்து இன்புற்று மகிழ்வதாகவும் தமிழ் முரசிடம் அளித்த நேர்காணலின்போது கூறினார்.
இதற்கு முன்னதாக, தம் வாழ்க்கை அனுபவங்களை ஒட்டிய படைப்புகள் பல ஊடகங்களில் பல்வேறு கோணங்களில் வெளிவந்துள்ளபோதும், பிறர் மனத்தில் பதியும் வகையில் பல்வேறு ஆழமான, அழுத்தமான தருணங்களைப் பற்றித் தெரிவிக்கவேண்டும் எனத் திரு ஜலீலிடம் கேட்கப்பட்டது.
“நூல் வெளியீட்டுக்கு முக்கிய காரணம் எனது நல்ல நண்பர் திரு மசூத். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நான் அவரிடம் உரையாடி சிறுகச் சிறுக தகவல்களைத் தந்தேன்,” என்று அவர் கூறினார்.
மேடு பள்ளம் கடந்து, உச்சாணிக் கொம்பைத் தொட்டுவிட்ட அமைதியுடன் காணப்பட்ட திரு ஜலீல், “எதிர்நீச்சலிட்டேன். சாதித்தேனா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் நான் கடலில் நீந்திக்கொண்டிருக்கிறேன். கரை எங்கே வரும் என்பது எனக்குத் தெரியாது,” எனச் சிரித்தபடி அவர் கூறினார்.
படிப்படியான ஏற்றம்
சிறு வயதில் சிட்டி ஹால் வட்டாரத்தில் தந்தை வைத்திருந்த ஒட்டுக்கடையில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அவர், பணியாற்றி வந்தார்.
துடிப்பும் உற்சாகமும் நிறைந்த சிறுவனாக அப்போது 14,15 வயதில் இருந்த திரு ஜலீல், கடையில் இருந்துகொண்டு வேலை செய்ய தம்மால் இயலாது என்று தந்தையிடம் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பரங்கிப்பேட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட அவரது தந்தைக்கு ஐந்து பிள்ளைகள். நான்கு தமக்கைகள் கொண்ட திரு ஜலீல், சிங்கப்பூரில் பிறந்தார்.
“பின்னர், வேறு என்ன வேலை செய்யப் போகிறாய் என்று என் தந்தை என்னிடம் கேட்டதை அடுத்து கடைக்கு எதிரே உள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்துபார்க்கலாம் என எண்ணினேன். அந்த நிறுவன முதலாளி எனக்குத் தெரிந்தவர் என்பதால் அவரை அணுக முடிவு செய்தேன்,” என்று அவர் கூறினார்.
தொடக்கத்தில் மாதத்திற்கு 120 வெள்ளி சம்பளத்தில் பாதுகாவல் பணியை திரு ஜலீல் மேற்கொண்டார். கால்வாயைப் பராமரிப்பது, இயந்திரங்களுக்கு மசகு எண்ணெய் ஊற்றுவது உள்ளிட்டவற்றைச் செய்தார்.
எண்ணெய் ஊற்றுவதால் ஒவ்வொரு இயந்திரத்திற்கும் 10, 15 வெள்ளி கிடைக்கும். ஆனால், நாள் முழுவதும் கடையில் இருந்தாலும் 10 வெள்ளி கூட கிடைக்காது.
கட்டுமானத் துறையில் லாபம் இருக்கும் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்று கூறிய திரு ஜலீல், இத்துறையில் நல்ல எதிர்காலம் தமக்கு இருப்பதாக எண்ணி அத்துறையில் சேர முடிவு செய்தார்.
சின்னஞ்சிறு வேலைகளில் தொடங்கி ஒப்பந்தம், மனிதவளம், வெளிநாட்டு ஊழியர் தங்குமிடம், தளவாட வசதி, பணிமனை என்று முறையே அவரது வர்த்தக முயற்சிகள் நகர்ந்தன.
மருத்துவமனை, ஹோட்டல்கள் ஆகியவற்றையும் திரு ஜலீல் கட்டியுள்ளார். பல்வேறு துறைகளைப் பற்றி கற்று, தான் கற்றவற்றைச் செயல்படுத்தும் ஆர்வம் இவருக்கு உற்சாகத்தை தந்தது.
அகடு முகடுகளைக் கடந்தவர்
சாதனைக்கான வேட்கையால் ஒரே இடத்தில் அதிக காலம் நின்றுவிடாமல் தொடர்ச்சியாக மேற்கொண்ட ஓட்டமே தமது பயணம் என்கிறார்.
1990ல் கிட்டத்தட்ட 3,000 ஊழியர்களுக்கான தங்குவிடுதியின் ஏலக் குத்தகையைச் சமர்ப்பித்தபோது இந்தத் திட்டத்தின்மீது சில தரப்பினருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்பதாக திரு ஜலீல் குறிப்பிட்டார்.
“ஆனால் அந்தக் காலகட்டத்தில் சிங்கப்பூர்ப் பொருளியலிலும் உள்கட்டமைப்பு, கட்டுமானத் துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி, இந்தக் கட்டுமானத் திட்டத்திற்கான தேவையை உறுதிப்படுத்தியது,” என்று அவர் கூறினார்.
கொவிட் 19 காலகட்டத்தில் 22 மாதங்களாக கடும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டதையும் நினைவுகூர்ந்த திரு ஜலீல், முடக்கங்களுக்கு இடையே ஆதரவு அளித்த நிதியாளர்கள், பணியாளர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோரால் தைரியம் அடைந்ததையும் கூறினார்.
இதேபோல் 1985 சிங்கப்பூர்ப் பொருளியல் மந்தம், 1997 ஆசிய நிதி நெருக்கடி, 2008 உலகப் பொருளியல் மந்தம் போன்றவை தமக்கு முக்கிய படிப்பினைகளைக் கற்பித்ததாக அவர் கூறினார்.
பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் நடந்து 45 ஆண்டுகள் ஆகியுள்ளதாகக் கூறிய திரு ஜலீல், காலஞ்சென்ற தாயாரும் மனைவியும் அண்ணனைப் போல தம் வாழ்வில் இருக்கும் காதர் பாய் என்பவரும் உறுதுணையாய் இருந்ததாகவும் அவர் கூறினார்.
“வேலையே எனது முழுமூச்சு. அதே நேரத்தில் குடும்பத்திற்கும் குறை வைக்கவில்லை. செய்ய வேண்டிய கடமைகளை உரிய நேரத்தில் செய்தேன். எனக்கு பொழுதுபோக்குகள் அதிகம் இல்லை. வானொலியில் ஒலி 968 கேட்பேன். அதற்கு அடுத்து செய்தித்தாள் படிப்பேன்,” என்று அவர் கூறினார்.
வெற்றிக்கு அடித்தளம் நற்சிந்தை
குறுநகையுடன் அவர், “விளையாட்டுத்தனமாக இறங்க முற்பட்டேன். இன்றும் விளையாடிக்கொண்டிருக்கிறேன். சாதித்துவிட்டேன் என்று என் மனம் என்னிடம் சொல்ல மறுக்கிறது. ஏனென்றால் நான் நானாகத்தான் இருக்கிறேன். மாறவில்லை,” என்று கூறினார்.
வர்த்தகராக இருக்கும்பட்சத்தில் முடிவுகளை எடுக்கும் துணிவும் தேவை என்கிறார் திரு ஜலீல்.
அதே நேரத்தில், அளவுக்கு அதிகமாக கடப்பாடுகளை மேற்கொண்டு அகலக்கால் வைக்காமல் நிதானம் காப்பது முக்கியம் என்று பொருளியல் மந்தநிலை ஏற்பட்ட காலகட்டங்களிலிருந்து கற்றதாகத் திரு ஜலீல் கூறினார்.
“பொறுமை அதிகம் தேவைப்படுகிறது. உணர்ச்சிவயப்பட்டு அவசரப்படவோ கோபப்படவோ கூடாது. நமக்கு மேற்பட்ட இறைசக்தியை எண்ணி, இறைவன் மீதே பாரத்தைப் போட்டுவிட்டு வாழ்க்கையை நடத்தவேண்டும்,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரின் 60 ஆண்டு வளர்ச்சிப்பாதை, தமது சொந்த வளர்ச்சியுடன் இழையோடி வருவதைக் குறிப்பிட்ட திரு ஜலீல், இந்நாட்டுக்கு மிகுந்த நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஆள்பலம், பண வசதி, சிறந்த இடம் ஆகியவற்றை இந்நாடு வழங்கியது. சிங்கப்பூரின் மேம்பாட்டை மக்களின் நற்பண்பு நிலைப்பெறச் செய்ததாகத் திரு ஜலீல் குறப்பிட்டார்.
நல்லதை நினைக்கும்போது நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது நடக்கும் என்றும் அவர் கூறினார்.
பெரியவர்களுடன் பழக இளையர்க்கு ஊக்குவிப்பு
எளிமையான அந்தக் காலத்திலிருந்து தற்போதைய செழிப்புக்கு இந்நாடு மாறியது நல்லது என்றாலும் இளம் வயதில் சொகுசுப் பொருள்கள் பற்றிய கவலைகள் இன்றி எது கிடைக்கிறதோ அதை மகிழ்ச்சியுடன் ஏற்கும் பண்பு அந்தக் காலத்தில் இருந்ததை அவர் சுட்டினார்.
பழுத்த அனுபவம் உள்ள பெரியவர்களுடன் உறவாடி அவர்களது கருத்துகளை அறிவதற்குத் தமிழ்ச் சமூக நிகழ்ச்சி நல்ல தளங்களாகத் திகழ்வதாகத் திரு ஜலீல் கூறினார்.
தமிழ் வழியாகப் பெரியவர்களுடன் உரையாடி உங்கள் தொடர்பு வட்டத்தை விரிவுபடுத்துங்கள். நீங்கள் தமிழில் உரையாடும்போது அவர்கள் உணரும் மகிழ்ச்சி அளப்பரிது, என்று அவர் கூறினார்.

