தீபாவளிப் பண்டிகையை உவகையோடு வரவேற்கும் வகையில், லிட்டில் இந்தியாவில் சனிக்கிழமை (நவம்பர் 7) இரவு மக்கள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு தரப்பு மக்களும் அங்கு திரண்டு கடைசி நேரத்தில் தங்களுக்குத் தேவையான பண்டிகைக்கால பொருள்களை வாங்கினர்.
இரவு 8 மணி முதலே அப்பகுதியில் மக்கள் கூட்டம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. பண்டிகைக்கால விலைச் சலுகைகள் அறிவிக்கப்பட்டதும், வெளிநாட்டு ஊழியர்கள் பல இடங்களில் புத்தாடைகளையும் அலங்காரப் பொருள்களையும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் அவர்கள் சிரமமின்றி நடந்து சென்று பொருள்களை வாங்கவும் நடைபாதைகளில் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.
கண்ணைப் பறிக்கும் வண்ணமயமான தீபாவளி ஒளியூட்டு பின்னணியில் இருக்க, குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பலரும் உற்சாகமாகப் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.
நள்ளிரவானதும் ஒருவருக்கொருவர் உவகையுடன் தீபாவளி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
