சிங்கப்பூர் - இந்தியா இடையே திறனாளர் பரிமாற்றம் அவசியம்: பியூஷ் குப்தா

சிங்கப்பூர் - இந்தியா இடையே திறனாளர் பரிமாற்றம் அவசியம்: பியூஷ் குப்தா

படம்: எஸ்எம்யு

23 Nov 2026 - 6:27 am

2 mins read

சிங்கப்பூர்: இந்தியாவிடம் பரந்த சந்தையும் பிரம்மாண்டமான மனிதவளமும் உள்ளன. சிங்கப்பூரிடம் மூலதனம், உள்கட்டமைப்பு நிபுணத்துவம், அனைத்துலக அளவில் விரிவடையும் லட்சியம் ஆகியவை உள்ளன. எனவே, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளியல் பங்காளித்துவம் இயல்பிலேயே பொருத்தமானது என கெப்பல், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக (எஸ்எம்யு) தலைவரும் டிபிஎஸ் குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான பியூஷ் குப்தா தெரிவித்துள்ளார். 

நவம்பர் 17ஆம் தேதி எஸ்எம்யுவில் நடைபெற்ற சிங்கப்பூர்-இந்தியா ஹேக்கத்தான், TiEcon SG 2026 நிகழ்வுகளுக்கு இடையே தப்லா! இதழுக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில் அவர் இதனைக் கூறினார்.

2025-26 நிதியாண்டில் US$19.8 பில்லியன் முதலீட்டுடன், இந்தியாவின் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீட்டாளராகச் சிங்கப்பூர் திகழ்கிறது. 2000ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்குச் சென்ற மொத்த முதலீடு US$194 பில்லியனைத் தாண்டியுள்ளது. 

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் தொழில் தொடங்குவது எளிதாகியிருந்தாலும், முன்தேதியிட்ட கொள்கை மாற்றங்கள் முதலீட்டாளர்களிடையே நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

திறன் இடைவெளியைக் குறைத்தல்

இருதரப்பு வர்த்தகமும் அரசாங்க ஒத்துழைப்பும் வளர்ச்சியடைந்திருந்தாலும், தொழில்முனைவோர், நிபுணர்கள், மாணவர்களின் எல்லை தாண்டிய நடமாட்டத்தை அதிகரிக்க இன்னும் பல நடவடிக்கைகள் தேவை என திரு பியூஷ் வலியுறுத்தினார்.

குறுகியகாலப் பரிமாற்றத் திட்டங்கள் எளிதானவை என்றாலும், நீண்டகாலப் பணிகளுக்கு வேலைவாய்ப்பு, குடியிருப்பு விதிகள் சவாலாக உள்ளன. சிங்கப்பூரின் 'காம்பஸ்’ மதிப்பீட்டுக் கட்டமைப்பு மூலம் தகுதியான இந்தியத் திறனாளர்கள் இங்கு வாய்ப்புகளைப் பெற முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

வகுப்பறைகளைத் தாண்டிய கல்வி

வழக்கமான வகுப்பறைக் கல்வியுடன் தொழிற்பயிற்சிகள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பயன்பாட்டு ஆய்வுகளில் இருநாட்டுக் கல்வி நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் கூறினார்.

அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM-A) உட்பட பல இந்திய நிறுவனங்களுடன் எஸ்எம்யு இணைந்து செயல்பட்டாலும், தற்போதைய முயற்சிகள் ‘கடலில் ஒரு துளி' போன்றவைதான் என்றும் கல்வி ஒத்துழைப்பைப் பேரளவில் விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வசதியான சூழலை விட்டு வெளியேறுதல்

இளையர்கள் தங்கள் வசதியான சூழலைவிட்டு வெளியேறி, நேரடி அனுபவங்களைப் பெற வேண்டும் எனத் தனது சொந்த அனுபவத்திலிருந்து திரு பியூஷ் அறிவுறுத்தினார். அரசாங்க ஒப்பந்தங்கள், நிறுவன முதலீடுகளைத் தாண்டி, இருநாட்டு மக்களிடையே உருவாகும் நீடித்த உறவுகளே சிங்கப்பூர்-இந்தியா பங்காளித்துவத்தின் அடுத்த அத்தியாயத்தை வலுப்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்இந்தியாகல்வி