சவுத் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலை அண்ணாந்து பார்ப்போர், காலத்தால் அழியாத அதன் பாரம்பரியத்தை உடனே உணர்ந்திடுவர்.
தென்னிந்திய பாரம்பரிய கட்டடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கோயில், சிங்கப்பூரின் ஆக பழைமையான இந்துக் கோயிலாகும். கடந்த ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் குடமுழுக்கு விழாவில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு புதுப்பிக்கப்பட்ட கோயிலின் அழகைக் கண்டு மகிழ்ந்தனர்.
இருப்பினும், பல ஆண்டுகாலமாக வானிலையாலும் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளாலும் கோயில் சற்று சேதமடைந்த நிலையை எட்டவே, புதுப்பிப்புப் பணிகள் அங்கு மேற்கொள்ளப்பட்டன.
உயர் தொழில்நுட்பத்துடன் நடந்த மறுசீரமைப்பு
கிட்டத்தட்ட $3.5 மில்லியன் செலவில் 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கோயிலின் மறுசீரமைப்புப் பணித்திட்டம், ‘கெய்டு ஆர்கிடெக்ட்ஸ்’ (CAIDE Architects), ‘மேக் கன்சல்டிங்’ (Maek Consulting) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்து அறக்கட்டளை வாரியத்தால் வழிநடத்தப்பட்டது.
“கோபுரங்களும் விமானங்களும் அதிகம் பழுதடைந்திருந்ததால் அவற்றைக் கழுவி மீண்டும் வண்ணம் தீட்டுவது சவாலாக இருந்தது,” என்றார் இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் திரு ராஜன் கிருஷ்ணன்.
இதற்கு உதாரணமாக, அவர் ராஜ கோபுரத்தை எடுத்துக்காட்டினார்.
“பல ஆண்டுகளாக சிற்பங்களின் மீது சாயம் அடுக்கடுக்காகப் பூசப்பட்டு வந்ததால் அவற்றின் கண்கள், மூக்கு, ஆபரணங்கள் போன்ற நுட்பமான வேலைப்பாடுகள் மங்கிக் காணப்பட்டன. இதைச் சரிசெய்ய இதுவரை பூசப்பட்ட சாயம் அனைத்தையும் அகற்ற முடிவு செய்தோம்.
“முன்பு பூசப்பட்ட சாயங்களை முற்றிலும் அகற்ற மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகின. ஒவ்வோர் அடுக்குச் சாயத்தையும் அகற்றியபோது அதன் காலகட்டத்தையும் நிலையையும் தீர்மானிக்க ஆய்வுகள் செய்யப்பட்டன,” என்று விளக்கினார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
ஆளில்லா வானூர்தியைக் கொண்டு முப்பரிமாண ஒளிப்பட அளவியல் ஸ்கேன் (3D photogrammetry scan), ரசாயனப் பகுப்பாய்வு ஆகியவற்றைப் பயன்படுத்தியபோது, நீண்ட காலமாக மறைந்திருந்த இரண்டு துவாரபாலகர்களின் சுவர் ஓவியங்கள் போன்ற முக்கியமான வரலாற்றுக் கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
“இக்கோயில் 1862ஆம் ஆண்டிலிருந்து பலமுறை மறுவடிமைப்பு கண்டுள்ளது என்பதை அறிந்தோம். ஆரம்பத்தில் மரத்தால் கட்டப்பட்ட இக்கோயில், பின்னர் கான்கிரீட் கட்டடமாக மாறியது; கோபுரங்களும் விமானங்களும் வெவ்வேறு காலகட்டத்தில் பல்வேறு பொருட்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டன.
“பழைய ஆவணப் புகைப்படங்களின் துணையோடு அசல் வண்ணங்களையும் பாணிகளையும் அடையாளம் காண நாங்கள் கட்டடக்கலை நிபுணர்களுடன் இணைந்து செயல்பட்டோம்,” என்று திரு ராஜன் கூறினார்.
2022ல் 12 திறமையான கைவினைக் கலைஞர்களைக் கொண்ட குழுவோடு சிங்கப்பூருக்கு வந்த சென்னையைச் சேர்ந்த கட்டடக் கலைஞரும் ஸ்தபதியுமான டாக்டர் தக்ஷிணாமூர்த்தியுடன் இந்தப் பணிக்குழு நெருங்கிப் பணியாற்றியது.
“இந்திய கோயில் கட்டடக்கலையில் அரிதான மூவிலைச் செடி வடிவிலான வளைவுகள் (trefoil arches), வட்டமான சன்னல்கள் போன்ற இந்த சிங்கப்பூர் கோயிலின் தனித்துவமான அம்சங்களை நாங்கள் கவனமாகப் பாதுகாக்க வேண்டியிருந்தது. 2022ல் தொடங்கிய இப்பணியை 2023ல் நடைபெற்ற குடமுழுக்கு விழாவிற்குமுன் முடித்துக் கொடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது,” என்றார் டாக்டர் தட்சிணாமூர்த்தி ஸ்தபதி.
நகர மறுசீரமைப்பு ஆணையம் ஈராண்டுகளுக்கு ஒருமுறை வழங்கிவரும் ‘கட்டடக்கலை மரபுடைமை விருதுகள்’ நிகழ்ச்சி, நவம்பர் 8ஆம் தேதி நடைபெற்றது. அதில் ஸ்ரீ மாரியம்மன் கோயில் உட்பட மூன்று முக்கிய வழிபாட்டுத் தலங்கள் விருது பெற்று சிறப்பிக்கப்பட்டன.
விக்டோரியா சாலையில் அமைந்திருக்கும் செயின்ட் ஜோசப் தேவாலயம், ‘மரபுடைமைப் பாதுகாப்பு விருதை’யும் (Conservation Award), ஸ்ரீ மாரியம்மன் கோயில், மலபார் மசூதி இரண்டும் ‘சிறப்பு விருதை’யும் (Special Mention) பெற்றன.
கோயில் மறுசீரமைப்புப் பணிகளுக்கான முயற்சிகள் சிறப்பு விருதுடன் அங்கீகரிக்கப்பட்டதற்கு இந்து அறக்கட்டளை வாரியமும் கோயில் குழுவும் நன்றி தெரிவித்துக்கொண்டன.
“இந்த விருது ஒரு கட்டடத்தை மறுசீரமைப்பு செய்ததற்கு மட்டுமல்லாமல் சிங்கப்பூரின் கலாசார கட்டமைப்பின் முக்கியப் பகுதியைப் பாதுகாப்பதற்கு நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளை அங்கீகரிக்கவும் வழங்கப்பட்டுள்ளது,” என்றார் ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் துணைத் தலைவர் திரு டி.ஜி.கிரிதரன்.
“197 ஆண்டு பழைமையான பாரம்பரியத்தைக் கொண்ட இந்தக் கோயில், மறுசீரமைப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட இக்கோயிலின் கட்டடக்கலையைக் காணவும் அதைப் பற்றி அறிந்துகொள்ளவும் கட்டடக்கலை வல்லுநர்களும் மாணவர்களும் கோயிலுக்கு அண்மைய காலமாக வந்த வண்ணம் உள்ளனர்,” என்று அவர் விவரித்தார்.
“எங்களின் இந்த முயற்சி ஒட்டுமொத்த இந்து சமூகத்திற்கே பெருமை தேடித் தந்துள்ளது. வருங்கால தலைமுறையினருக்குக் கோயிலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இது உணர்த்துகிறது என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார் திரு ராஜன்.
வருங்காலத்தில் இந்து அறக்கட்டளை வாரியம் பல மறுசீரமைப்புப் பணிகளைத் திட்டமிட்டு வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் குடமுழுக்கு விழா நடைபெறவிருக்கும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் பணியும் இவற்றில் அடங்கும் என்று வாரியம் தெரிவித்தது.
தனித்துவம் பெற்ற வேலைப்பாடு
இந்தியாவின் கேரளாவைப் பூர்வீகமாகக்கொண்ட சிங்கப்பூர் மலபார் முஸ்லிம் சமூகத்தால் நிர்வகிக்கப்பட்டுவரும் மலபார் மசூதியில், 2020 முதல் 2023 வரை கணிசமான மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.
சிங்கப்பூரின் முதல் அதிபர் யூசோப் இஷாக் 1963ஆம் ஆண்டு திறந்துவைத்த இந்த மசூதி, 1995ஆம் ஆண்டு முதன்முதலில் புதுப்பிக்கப்பட்டது. இன்று அதன் தனித்துவத்தைப் பறைசாற்றும் நீலம் வெள்ளை ‘லேபிஸ் லாசுலி’ கற்கள் அப்போது சுவரில் பதிக்கப்பட்டன.
புதுப்பித்தலின் ஓர் அங்கமாக அண்மையில் பழைய மசூதியின் சில பகுதிகள் மீட்டெடுக்கப்பட்டதுடன் அதனையொட்டி மூன்று மாடி புத்திணைப்புக் கட்டடம் கட்டப்பட்டு 592 சதுர மீட்டர் அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
இதன் விளைவாகக் கூடுதல் பிரார்த்தனை இடங்கள், வகுப்பறைகள் ஆகியவை அமைக்கப்பட்டதுடன் மின்தூக்கிகள், படிக்கட்டுகள் ஆகியவையும் மேம்படுத்தப்பட்டன.
லியு & வோ கட்டடக் கலைஞர்கள் தலைமையிலான இந்த மறுசீரமைப்புப் பணிகளில், மசூதியின் வளமான வரலாற்றையும் மலபார் முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரியங்களையும் வெளிப்படுத்தும் வகையில் மரபுடைமைக் காட்சிக்கூடம் ஒன்றும் அமைக்கப்பட்டது.
குறிப்பாக, இளைய தலைமுறையினருக்குக் கல்வி, கலாசாரம் தொடர்பான ஒரு தளமாக இது செயல்படும் என பள்ளிவாசலின் நிர்வாக வாரியம் நம்புகிறது.
இதற்கு வழங்கப்பட்ட சிறப்பு விருந்தானது, சமூகத்தின் கூட்டுமுயற்சிகளுக்குக் கிடைத்த அங்கீகாரம் என்று மலபார் மசூதியின் மூத்த நிர்வாக தலைவர் ஹாஜி முஹம்மது கைருல் ஜமீல் யாஹ்யா கூறினார்.
“இந்த விருது, மலபார் மசூதி சமூகத்தை மட்டுமல்லாமல் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம், வாரரீஸ் இன்வெஸ்ட்மென்ட், பங்குதாரர்கள், தொழில் வல்லுநர்கள் முதலியோரின் நெருக்கமான ஒத்துழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றையும் பிரதிபலிக்கிறது,” என்றார் அவர்.
வளமான வரலாற்றை மீட்டுத்தந்த புதுப்பிப்பு
விக்டோரியா சாலையில் அமைந்துள்ள 112 ஆண்டுகள் பழைமையான செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் முதலில் கட்டுமானப் பழுதுபார்ப்புப் பணிதான் தொடங்கப்பட்டது.
பின்னர், $25 மில்லியன் மதிப்பிலான மறுசீரமைப்புப் பணியாக அது மாறியது.
ஆரம்பத்தில், கூரையையும் மேடையையும் பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்ளவே திட்டமிடப்பட்டது. பின்னர், 1900ஆம் ஆண்டு செய்யப்பட்ட அசல் பூச்சு வேலையின் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து தேவாலயத்தின் வரலாற்று அம்சங்களை மீட்டெடுக்கும் மறுசீரமைப்புப் பணியாக அது மாறியது. இதை ஓங்&ஓங் கட்டடக் கலைஞர்கள் அமைப்பு வழிநடத்தியது.
வரைபடமிடல், சுத்தம் செய்தல், பதிக்கப்பட்டிருந்த ‘என்காஸ்டிக்’ ஓடுகள் (encaustic tiles) போன்றவற்றைச் சரிசெய்தல் ஆகியவை முக்கியப் பணிகளில் அடங்கும். நவீன இயந்திர, பொறியியல் அமைப்புகளைத் தேவாலயத்தின் வரலாற்று அம்சங்களுடன் ஒருங்கிணைத்து இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
1900களின் முற்பாதியிலிருந்து கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், ‘டார்மர்’ சன்னல்கள் தேவாலயத்தில் மீண்டும் பொருத்தப்பட்டன.
மேலும், 34 சிலைகள், 14 சிலுவைப் பாதைகள் (Stations of the Cross) உள்ளிட்ட கலைப்பொருட்கள் கவனத்துடன் மீட்டெடுக்கப்பட்டபோது, அதிக வண்ணப்பூச்சு அடுக்குகளின் கீழ் மறைந்துகிடந்த நுட்பமான தங்க இலை வடிவங்கள் வெளிப்பட்டன.
மொத்தம் எட்டு கண்ணாடி நிபுணர்கள் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி, 72 சன்னல்களின் வடிவமைப்புகளைப் பாதுகாத்ததுடன் அவற்றின் வண்ணங்களையும் புதுப்பித்தனர்.
இந்த நுணுக்கமான செயல்முறைகள், தேவாலயத்தின் வளமான பாரம்பரியத்தைச் சமகால செயல்பாட்டுடன் இணைத்ததற்காக மரபுடைமை பாதுகாப்பு விருதைப் பெற்றது.