சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழாவில் இந்த ஆண்டு தமிழக கவிஞர் அ. வெண்ணிலா சிறப்புரை ஆற்றவிருக்கிறார்.
கலைஞர் பொற்கிழி விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ள அவர் ‘தமிழின் இளமை’ என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார்.
கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், நாவலாசிரியர், திரைப்பட வசனகர்த்தா, துணை இயக்குநர், பாடலாசிரியர், ஆய்வாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர் வெண்ணிலா. பரவலாக அறியப்பட்ட இவரது “நீரதிகாரம்” நாவல் ஆனந்தவிகடன் இதழில் தொடராக வெளிவந்து, பின்னர் இரண்டு தொகுதிகளாக நூலாகவும் வெளியிடப்பட்டது.
நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினரும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மதியுரைஞருமான திரு. இரா. தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
தமிழ் மொழி விழாவின் ஓர் அங்கமாக, ஏப்ரல் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெறும் முத்தமிழ் விழாவில் தமிழ்ப் பணியாளர் ஒருவருக்கு தமிழவேள் விருது வழங்கப்படும்.
பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை நடத்தப்பட்ட மாணவர் போட்டிகளின் வெற்றியாளர்களுக்கும் பொது மக்களுக்கான சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசளிப்பும் இடம்பெறும்.
சின்னஞ் சிறார்களின் மாறுவேடப் போட்டியின் இறுதிச் சுற்றுகளும் உண்டு. கண்கவர் நடனம், தொடக்கப் பள்ளி மாணவர்களின் கதை சொல்லும் திறன், பேச்சுத் திறன் போட்டிகள் ஆகியவையும் இடம்பெறும்.