இளையோரின் திறமைகளை வெளிக்கொணர முனையும் ‘கவிதை மன்றம்’

இளையோரின் திறமைகளை வெளிக்கொணர முனையும் ‘கவிதை மன்றம்’

2 mins read
a82377da-852d-4cc0-b3db-89e098cbc280
கவிமாலைச் சுவரொட்டி. - படம்: கவிமாலை
Google News Preferred Icon

சிங்கப்பூரில் தமிழ்மொழியையும் இலக்கிய வளர்ச்சியையும் முன்னிறுத்தும் நோக்கில் கவிமாலையின் விதைகள் இளையர் அணி ஏற்பாடு செய்யும் ‘கவிதை மன்றம்’ நிகழ்ச்சி, வரும் ஆகஸ்ட் 10ம் தேதி மாலை 4 மணி அளவில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சி முழுமையாக இளையர்களால் திட்டமிடப்பட்டு, அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் பல்வேறு அங்கங்களைக் கொண்டுள்ளது. சிறார் பங்கேற்கும் ‘சிங்கையின் சிற்பிகள்’ என்ற தலைப்பிலான அங்கமும் இடம்பெறவுள்ளது.

அதில் ஆதீரன், கவின் ஆத்விக், விரித்திகா, ஜெகந்நாத், சுதிக்‌ஷா ஆகியோர் சிங்கப்பூரின் முன்னோடிகளான ராஃபிள்ஸ், நாராயணப்பிள்ளை, கோ. சாரங்கபாணி, லீ குவான் யூ, சங் நீல உத்தமா ஆகிய கதாபாத்திரங்களில் மேடையேறவுள்ளனர்.

மேலும், ரகுநந்தன் தலைமையில் நடைபெறும் கவியரங்கத்தில், சரண்யா முசிலா, பிரபவ், மகாலட்சுமி, சாய் பாலாஜி ஆகியோர் ‘டிஜிட்டல் உலகில் தமிழ்’ என்ற தலைப்பில் கவிதைகள் வழங்கவுள்ளனர்.

அதனுடன், தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பான ‘மனோன்மணீயம்’ நாடகமும் அரங்கேற உள்ளது. சுந்தரம்பிள்ளையின் இந்தப் புகழ்பெற்ற படைப்பு, காதல், நாட்டுப்பற்று, அரசியல் சிந்தனைகள் ஆகியவற்றை இணைக்கும் இலக்கியச் சின்னமாகும். இந்நாடகம் மாணவர்களின் மேடைத் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அமையவுள்ளது.

நிகழ்ச்சியின் நெறியாளராக விஷாலினி செயல்படுவார். வரவேற்புரையை ஹரிவர்த்தனியும் நன்றியுரையை ஸ்ருதிகாவும் வழங்க உள்ளனர். இளையர் அணியின் செயல்பாடுகள் குறித்து வர்ஷிகா, நித்யாஸ்ரீ ஆகியோர் பகிர்ந்துகொள்ளவுள்ளனர்.

மேலும், இந்நிகழ்ச்சியுடன் தொடர்புடைய கவிதை எழுதும் போட்டி பற்றிய அறிவிப்பும் வெளியிடப்பட்டது. சிங்கப்பூரின் முன்னோடிக் கவிஞர்களான பரணன், ந.பழனிவேலு, க.து.மு.இக்பால், முருகடியான், பாத்தேறல் இளமாறன் ஆகியோர் பற்றி கவிதைப் போட்டியின் வெற்றியாளர்கள் கவிதைகளைப் படைப்பார்கள். வெற்றிபெறும் போட்டியாளர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்.

கவிதைகள் விதை… இளையர்கள் மழை, நாளைய தலைமுறைக்காக நாங்கள்!’ எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்ச்சி நடைபெறுவதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்கவும் போட்டிக்குப் பதிவு செய்யவும் பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தலாம்: https://tinyurl.com/5czhyvjt

இளையர்கள், மாணவர்கள், கவிதை ஆர்வலர்கள் என அனைவரும் அந்த மாணவ இலக்கிய விழாவைச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்