துறைமுகத்தின் வானுயர் கரங்கள்

துறைமுகத்தின் வானுயர் கரங்கள்

2 mins read
e0ff337c-84af-415c-bf72-96875ec4d453
அலுவலகத்தில் தானியக்க முறையில் வேலை செய்யும் செல்வராஜன். - படம்: பே. கார்த்திகேயன்

உயரத்தில் இருக்கும் சிறிய கண்ணாடிக் கூண்டுக்குள் அமர்ந்து வானம், கடல், நட்சத்திரங்களின் துணையுடன் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார் திரு எஸ்.செல்வராஜன், 59.

1990ல் சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் பாசிர் பாஞ்சாங் முனையத்தில் வேலைக்குச் சேர்ந்த இவர், பாரந்தூக்கியை இயக்குபவராக உள்ளார்.

பாரந்தூக்கியை இயக்குபவராகப் பணியாற்றி வரும் திரு செல்வராஜன், உயரத்தைக் கண்டு அச்சப்படுவதில்லை.
பாரந்தூக்கியை இயக்குபவராகப் பணியாற்றி வரும் திரு செல்வராஜன், உயரத்தைக் கண்டு அச்சப்படுவதில்லை. - படம்: எஸ். செல்வராஜன்

கப்பல் கொள்கலன்கள் அல்லது பிற கனரகப் பொருள்களைத் தூக்க, நகர்த்த, அடுக்க, துறைமுகக் கொள்கலன் முனையங்களுக்குள் பெரிய, கனரக பாரந்தூக்கியை இயக்கும் பொறுப்பு இவருடையது.

பணியைப் பற்றி எதுவும் தெரியாமல் அதில் சேர்ந்த திரு செல்வராஜனுக்கு, பயிற்சி காலத்திற்குப் பிறகு தனியாகவே அனைத்தையும் கையாள வேண்டிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

வேலையில் விழிப்புடன் இருப்பதற்கு அப்பாற்பட்டு தமக்கு உயரத்தைக் கண்டு பயம் இல்லாததால் தம்மால் வேலையில் தாக்குப்பிடிக்க முடிவதாக திரு செல்வராஜன் கூறினார்.

உயரத்தில் தனிமையில் வேலை பார்ப்பது தனக்கு இன்பம் அளிப்பதாக திரு செல்வராஜன் சொன்னார்.
உயரத்தில் தனிமையில் வேலை பார்ப்பது தனக்கு இன்பம் அளிப்பதாக திரு செல்வராஜன் சொன்னார். - படம்: எஸ். செல்வராஜன்

சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தில் சேருவதற்கு முன்னர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்த திரு செல்வராஜனுக்கு எப்போதும் துறைமுகங்கள்மீது பெரும் ஈர்ப்பு உண்டு.

“சிறுவயதில் நான் வாழ்ந்த வீட்டிலிருந்தே துறைமுகத்தைப் பார்க்க முடியும். அப்போதே எனக்குத் துறைமுகத்தில் வேலை பார்க்க வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. என் அப்பாவும் சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தில் வேலை பார்த்ததால் அந்த எண்ணம் எனக்கு வலுப்பட்டது,” என்றார் இவர்.

“நேரம், காலம் பார்க்காமல் இப்பணியில் ஈடுபட வேண்டும். வானிலையைப் பொருட்படுத்தாமல் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். மழை, கடும் வெயில் எதுவாக இருந்தாலும் பாரந்தூக்கியில் இருக்கும் அறையை அடைய பல மாடிகளை அச்சமின்றி ஏற வேண்டும்,” என்றார் திரு செல்வராஜன்.

உடலுழைப்பு அதிகம் தேவைப்படும் பணியாக இருந்தாலும் தனது பணி சிங்கப்பூரின் கடல்துறை வளர்ச்சிக்குப் பங்களிப்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறார் இவர்.

மாற்றங்களுக்குத் தகவமைத்தல்

திரு செல்வராஜனின் பணியில் தொழில்நுட்பம் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. ஏறத்தாழ ஏழு ஆண்டுகளாக தானியங்கி உபகரணங்களைக் கையாளும் வல்லுநராகவும் இவர் வேலை செய்து வருகிறார்.

பாரந்தூக்கியில் ஏறி இறங்கி வேலை செய்வதுடன், கட்டுப்பாட்டு அலுவலகத்தில் உட்கார்ந்தபடியே பணிகளைக் கையாள இவர் கற்றுக்கொண்டார்.

வானிலை பற்றிக் கவலைப்படுவது, கழிவறைக்குச் செல்வது பற்றி யோசிப்பது போன்ற கவலைகள் அலுவலகச் சூழலில் இல்லையென்றாலும் பாரந்தூக்கியில் ஏறி வேலை செய்த அனுபவம் தனியானது என்றார் அவர்.

“அதே பணியைக் கணினியில் செய்வதால் நேரத்தை மிச்சப்படுத்த முடிகிறது. தவறுகள் நடப்பதற்கும் சாத்தியம் மிகக் குறைவு. மெல்ல மெல்ல பணிகள் தானியக்க முறைக்கு மாறிவிடும் என்று நினைக்கிறன்,” என்று குறிப்பிட்டார் திரு செல்வராஜன்.

ஒரு வாரத்தில் சில நாள்கள் அலுவலகத்திலும் சில நாள்கள் பாரந்தூக்கியிலும் வேலை செய்கிறார் இவர்.

தானியக்க முறைக்கு மாறவேண்டிய சூழல் ஏற்பட்டபோது திரு செல்வராஜனுக்கு விரிவான பயிற்சி வழங்கப்பட்டது.

பணி, மனத்தை இன்புற வைத்தாலும் சில தியாகங்களையும் இவர் செய்ய வேண்டியுள்ளது.

“முக்கியமாக, குடும்ப விழாக்கள், பிள்ளைகளின் பட்டமளிப்பு விழா போன்ற நிகழ்வுகளுக்குச் செல்ல முடியவில்லை. இருந்தாலும், இப்பணி மனநிறைவு அளிக்கிறது,” என்று புன்னகைத்தபடி திரு செல்வராஜன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்