ஹாங்காங்கில் அண்மையில் நடந்தேறிய கலை, சுகாதார விழாவில் சிங்கப்பூரில் தளம் கொண்டுள்ள ‘மாயா டான்ஸ் தியேட்டர்’ கலைக்குழுவினர் பங்கேற்றனர்.
நவம்பர் 3 முதல் 7 வரை நடைபெற இவ்விழாவில் துடிப்புடன் மூப்படைதல் தொடர்பில் சிங்கப்பூரின் கலை சார்ந்த அணுகுமுறையை அவர்கள் அனைத்துலக அரங்கில் பகிர்ந்தனர்.
‘ஜாய் இன் மோஷன்’ திட்டத்திற்காகப் பயன்படுத்தப்படும் சிறப்பான வழிமுறைகள் குறித்து கலை இயக்குநர் கவிதா கிருஷ்ணனும் நிர்வாக இயக்குநர் இம்ரான் மனாஃபும் மற்றப் பங்கேற்பாளர்கள் முன்னிலையில் விளக்கமாகக் கூறினர்.
“பரதநாட்டியம், சீன விசிறி நடனம் போன்ற எளிமையான பாரம்பரிய கலை வடிவங்களை உள்ளடக்கும் இத்திட்டம், முதியோரின் நினைவாற்றல், அங்க அசைவுத்திறன் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பைத் தூண்டுகிறது,” என்று திருவாட்டி கவிதா கிருஷ்ணன் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பரதநாட்டியத்துடன் தற்கால நடனத்தைச் சமூகநலனுக்காகப் பயன்படுத்தி வரும் திருவாட்டி கவிதா, மாற்றுத்திறனாளிக் கலைஞர்களுக்கான ‘டைவர்ஸ் எபிலிட்டிஸ் டான்ஸ் கலெக்ட்டிவ்’ அமைப்பை 2018ல் நிறுவினார்.
துடிப்புமிக்க மூப்படைதல் நிலையங்களில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், முதியவர்களிடையே நல்லுறவை வளர்த்து, தனிமை உணர்வைப் போக்குவதாகவும் அவர் கூறினார்.
முதியோர்களைப் பராமரிப்பு பெறுபவர்களாக மட்டும் கருதாமல், சக வயதுடையவர்களுக்கு வழிகாட்டும் தலைவர்களாகப் பயிற்றுவிப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வெற்றிகரமான பயிற்சி
சன்லவ் துடிப்புமிக்க மூப்படைதல் மையத்தில் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட ‘ஜாய் இன் மோஷன்’ திட்டம் பற்றிய பகிர்வு அங்கம் இடம்பெற்றது.
அத்துடன், விழாவின்போது ‘எ டையிங் ஃபிளவர்’ (A Dying Flower) என்ற குறும்படம் திரையிடப்பட்டது.
மாயா டான்ஸ் தியேட்டருடன் திரைப்படத் தயாரிப்பாளர் யாசிர் எம் இணைந்து அக்குறும்படத்தை எடுத்துள்ளார்.
உடற்பயிற்சித் திட்டத்தில் பங்கேற்ற 75 வயது முதியவர் ஒருவரை மையப்படுத்தும் இந்தக் குறும்படம், கலை எவ்வாறு முதியவர்களுக்குக் கண்ணியத்தையும் ஆற்றலையும் வழங்குகிறது என்பதையும் எடுத்துரைத்தது.
