தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அறப்பணியாளர்களுக்கு அதிபர் விருது

5 mins read
a6ab8f54-dd5a-46dd-bd89-c07f55ec3e64
அதிபரிடமிருந்து விருதுபெறும் ‘24ஏ‌ஷியா’ நிறுவனர் நஸ்முல் கான். உடன் (இடமிருந்து) என்விபிசி தலைமை நிர்வாகி டோனி சோ, கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ, என்விபிசி துணைத் தலைவர் சுஹாய்மி ஸைனுல்-அபிதீன். - படம்: தேசிய தொண்டூழிய, அறக்கொடை நிலையம் (என்விபிசி)
multi-img1 of 2

தொண்டூழியத்தைப் பாராட்டும் சிங்கப்பூரின் ஆக உயரிய ‘அதிபர் தொண்டூழிய, அறக்கொடை விருது’களை வழங்கிச் சிறப்பித்தார் அதிபர் தர்மன் சண்முகரத்னம்.

அக்டோபர் 1ஆம் தேதி இரவு நடந்த விருது நிகழ்ச்சியில் 12 பிரிவுகளில் 16 விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்விருது நிகழ்ச்சியை தேசியத் தொண்டூழிய, அறக்கொடை நிலையம் (என்விபிசி) 13வது ஆண்டாக ஏற்பாடு செய்திருந்தது. இதுவரை இல்லாத வகையில் இம்முறை விருதுகளுக்கு 451 பரிந்துரைகள் வந்திருந்தன. இது சென்ற ஆண்டைவிட 53% அதிகம்.

முதன்முறையாக, ‘பெரிய அறநிறுவனங்கள்’, ‘சிறிய, நடுத்தர அறநிறுவனங்கள்’, ‘அடித்தள முயற்சிகள்’ எனும் மூன்று பிரிவுகள்கொண்ட ‘நலம் பேணும் சமூகங்கள்’ (Communities of Good) தூண் அறிமுகமானது.

ராஃபிள்ஸ் ஹோட்டலில் நடந்த விழாவுக்குக் கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சரும் கல்விக்கான மூத்த துணையமைச்சருமான டேவிட் நியோவும் வருகையளித்தார்.

என்விபிசி, சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்துடன் புதிய பங்காளித்துவத்தையும் அறிவித்தது. இதன்வழி, இவ்வாண்டின் வெற்றியாளர்கள், இறுதிச் சுற்றுக்குத் தேர்வுபெற்றோர் உட்பட மொத்தம் 27 பேருக்கும் எதிர்கால வெற்றியாளர்களுக்கும் வழிகாட்டுதல், கற்றல் வாய்ப்புகள் அளிக்கப்படும்.

20 ஆண்டுகளுக்குமுன் சிங்கப்பூருக்கு வந்தவர் 24ஏஷியா நிறுவனர் நஸ்முல் கான், 44.

2018 தேசிய தினத்தன்று அவர் 24ஏஷியாவை நிறுவினார். அன்றிலிருந்து இன்றுவரை 24ஏஷியா, மின்னிலக்கத் திறன்கள், பொது இடங்களில் பேசுதல், தலைமைத்துவம் போன்றவற்றில் 3,800க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இல்லப் பணிப்பெண்களுக்கும் பயிற்சி வழங்கியுள்ளது; வருடாந்தர அனைத்துலக வெளிநாட்டவர் தினக் கொண்டாட்டங்களில் 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஈடுபடுத்தியுள்ளது; உணவு விநியோகம், கடற்கரைத் தூய்மைப் பணி எனப் பல்வகையான நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்துவருகிறது.

24ஏ‌ஷியா தலைமை நிர்வாகி ஜோசஃப், நிறுவனர் நஸ்முல் கான், தூதர் முகம்மது மஹின் (இடமிருந்து).
24ஏ‌ஷியா தலைமை நிர்வாகி ஜோசஃப், நிறுவனர் நஸ்முல் கான், தூதர் முகம்மது மஹின் (இடமிருந்து). - படம்: ரவி சிங்காரம்

கண்ணீரில் தொடங்கிய தொண்டூழியப் பயணம்

2017ல் பங்ளாதேஷுக்குச் சென்றிருந்த திரு கான், சிங்கப்பூருக்குத் திரும்பும் வேளையில் ஒரு பெண்மணி விமான நிலையத்தில் அங்குமிங்கும் அலைவதைக் கண்டார்.

“நான் என் மகனுக்கு ஒரு தின்பண்டம் செய்துள்ளேன். அவருக்குக் கொடுத்தனுப்புவதற்கு யாரேனும் உதவி செய்வார்களா எனத் தேடுகிறேன்,” என அந்தப் பெண்மணி கூறியதை நினைவுகூர்ந்தார் திரு கான்.

திரு கான் அவருக்கு உதவ முன்வந்தார். அவருடைய மகனை உடனே தொலைபேசியில் தொடர்புகொண்டு தாய்க்கு நம்பிக்கையளித்தார்.

சிங்கப்பூரில் வந்திறங்கியதும் மரினா பே சேண்ட்ஸ் கட்டுமானத் தளத்தில் பணியாற்றிவரும் அந்தப் பெண்மணியின் கனை நேரில் கண்டு தின்பண்டத்தை ஒப்படைத்தார் திரு கான்.

அதனைப் பெற்ற மகன் தாயாரைத் தொலைபேசியில் அழைத்ததும் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. “பல நாள்கள் தாயாரிடமிருந்து பிரிந்திருந்ததால் மனம் நெகிழ்ந்து அழுகிறாரோ என நான் எண்ணி ஆறுதலளித்தேன். ஆனால் அவர் தொடர்ந்து அழுவதைப் பார்த்துத் தொலைபேசியை எடுத்தேன்.

“அவருடைய தாயார் இறந்துவிட்டார் என்ற துயரச் செய்தி கிடைத்தது. எனக்கும் கண்களில் கண்ணீர் மல்கியது. எப்படி நேற்று என்னுடன் பேசியவர், என் சொந்த தாய்போல நான் கருதியவர், இன்று இறந்துவிட்டார் என என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“ஆறாத் துயரில் இருந்த மகன், ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக இதே வேலையைச் செய்துவந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை உட்பட அன்றாடம் 12 முதல் 16 மணி நேரம், மாதத்தில் 30 நாள்கள் ஓய்வே எடுக்காமல் பணியாற்றி வந்துள்ளார். கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதே காரணம். அதனாலேயே அவரால் தன்னை மேம்படுத்திக்கொள்ளக்கூட நிதியோ நேரமோ ஒதுக்கமுடியவில்லை,” என்று திரு கான் விவரித்தார்.

அவரைப் போன்றவர்களுக்கு உதவ விரும்பும் எண்ணத்தைத் திரு கான், தம் மனைவியிடம் பகிர்ந்தபோது, தொடக்கத்தில் மற்ற குழுக்களுடன் தொண்டூழியம் செய்யும்படி மனைவி அறிவுறுத்தினார். அப்படித்தான் அவரது தொண்டூழியப் பயணம் தொடங்கியது.

“ஆனால் பல அமைப்புகளிலும் வெளிநாட்டு ஊழியர் தொண்டூழியர்கள் இருப்பதில்லை என உணர்ந்தேன். அதனால் உள்ளூர் மக்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இடையே பாலம் அமைக்க விரும்பினேன். அவர்களின் திறன்களை வளர்க்கவும் விரும்பினேன். அதனால்தான் 24ஏஷியாவைத் தொடங்கினேன்,” என்றார் திரு கான்.

ஒரு சமயம் 24ஏ‌ஷியா ஏற்பாடுசெய்த ரத்த நன்கொடை நிகழ்ச்சிக்கு வந்திருந்த வெளிநாட்டு ஊழியர் தம்மிடம் கூறியதைத் திரு கான் நினைவுகூர்ந்தார்.

“எனக்கு ஆங்கிலம் நன்கு தெரியாது; உள்ளூரில் நண்பர்களும் இல்லை. அதனால், என் சார்பில் என் ரத்தம் எனக்காகப் பேசும் என்றுதான் ரத்த நன்கொடை அளிக்கிறேன்,” என்று அப்போது அந்த ஊழியர் கூறியிருந்தார்.

“கடற்கரைச் சுத்தப்படுத்துதல், ரத்த தானம், போன்ற நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொண்டுள்ளேன். அப்போது பல உள்ளூர் மக்களுடன் சேர்ந்து தொண்டூழியம் புரிய வாய்ப்பு கிடைக்கிறது,” என்றார் 24ஏஷியா தூதர் முகமது மஹின், 31.

அதிபர் தர்மன், கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ ஆகியோரிடம் ‘24ஏ‌ஷியா’ பற்றி விவரிக்கும் ‌திரு நஸ்முல் கான்.
அதிபர் தர்மன், கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ ஆகியோரிடம் ‘24ஏ‌ஷியா’ பற்றி விவரிக்கும் ‌திரு நஸ்முல் கான். - படம்: ரவி சிங்காரம்

பள்ளித் துன்புறுத்தலைத் தூரந்தள்ளிய இளையர்

அதிபரிடமிருந்து விருதுபெறும் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் காமில் மன்சுர். உடன் (இடமிருந்து) என்விபிசி தலைமை நிர்வாகி டோனி சோ, கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ, துணைத் தலைவர் சுஹாய்மி ஸைனுல்-அபிதீன்.
அதிபரிடமிருந்து விருதுபெறும் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் காமில் மன்சுர். உடன் (இடமிருந்து) என்விபிசி தலைமை நிர்வாகி டோனி சோ, கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ, துணைத் தலைவர் சுஹாய்மி ஸைனுல்-அபிதீன். - படம்: தேசிய தொண்டூழிய, அறக்கொடை நிலையம்
உங்கள் வாழ்வில் நடப்பதைக் கண்டு மனம் துவண்டுவிடாதீர்கள். அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும் உங்கள் முயற்சிகளைக் கைவிடாதீர்கள். சமூகத்திற்கு அவை மிகவும் முக்கியம்.
‘நலம் பேணும் மக்கள் (மாணவர்)’ பிரிவில் விருதுபெற்ற காமில் மன்சுர், 19

உயர்நிலைப் பள்ளியில் பயின்றபோது துன்புறுத்தலுக்கு ஆளாகினார் காமில் மன்சுர், 19. அது அவருடைய தன்னம்பிக்கையைப் பாதித்தது.

“ஆனால் அதையே நினைத்து நான் நொந்துக்கொள்ளவில்லை. என் கல்வியில் கவனம் செலுத்தினேன். என்மீது உண்மையாக அக்கறைச் செலுத்துவோரை என் நண்பர்களாக்கிக் கொண்டேன். அவர்கள் என் வளர்ச்சிக்கு உதவினர்,” என்றார் காமில்.

அதனால், தன்னைப் போன்ற இளையருக்கு உதவவேண்டும் என்ற ஆசை அவருக்குள் பிறந்தது. அதன்படி, இளையரின் மனநலத்துக்கு உதவ அவர் சென்ற ஆண்டு ‘புரோஜெக்ட் ரெசொலியூட்’ எனும் திட்டத்தை ‘ஒய்எம்சிஏ யூத் ஃபார் காசஸ்’ (YMCA Youth for Causes 2024) திட்டத்தின்கீழ் தொடங்கினார்.

இதன்வழி, இளையருக்கான திட்டங்களை நடத்திவரும் ‘பெத்தெஸ்டா பராமரிப்புச் சேவைகள்’ லாப நோக்கற்ற அமைப்புக்காக அவர் 6,000க்கும் மேற்பட்டோரை அணுகி S$87,000 நிதி திரட்டினார். நிறுவனங்களுக்கு நிதி கோரி மின்னஞ்சல்கள் எழுதியனுப்பினார்; கண்காட்சிச் சாவடிகள், காணொளி மூலமும் நிதி திரட்டினார்.

இம்முயற்சிகளை அவர் தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவ ஆலோசகராக இருந்தபோது மேற்கொண்டார். இப்போது ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் முதலாமாண்டு மாணவரான அவர் தன் சமூக சேவைப் பயணத்தைத் தொடர பல வாய்ப்புகளைப் பெறுவார்.

‘நலன் பேணும் மக்கள் (மாணவப் பிரிவு)’ விருதுபெற்ற ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் காமில் மன்சுர்.
‘நலன் பேணும் மக்கள் (மாணவப் பிரிவு)’ விருதுபெற்ற ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் காமில் மன்சுர். - படம்: ரவி சிங்காரம்

“மாணவர்கள் தம் வாழ்க்கை இலக்குகளை அறியவும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவும் ‘வாழ்வை வடிவமைத்தல்’ (Designing your life), ‘தாக்கத்தை வடிவமைத்தல்’ (Designing your impact) எனும் திட்டங்களை வழங்குகிறோம்,” என்றார் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி தலைவர் ஜியேன் லியூ. ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியும் அதிபர் விருது பெற்றது.

இதையடுத்து சிங்கப்பூர் இளையர் தொண்டூழியர் அணி (Youth Corps) தலைமைத்துவத் திட்டத்திலும் சேர விரும்புகிறார் காமில்.

“உங்கள் வாழ்வில் நடப்பதைக் கண்டு மனம் துவண்டுவிடாதீர்கள். அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும் உங்களது முயற்சிகளைக் கைவிடாதீர்கள். சமூகத்திற்கு அவை மிகவும் முக்கியம்,” என்கிறார் காமில்.

அதிபர் தர்மன், கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ ஆகியோருடன் உரையாடும் காமில் மன்சுர்.
அதிபர் தர்மன், கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ ஆகியோருடன் உரையாடும் காமில் மன்சுர். - படம்: ரவி சிங்காரம்
ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி சார்பில் அதன் தலைவரும் தலைமை நிர்வாகியுமான ஜியேன் லியூ அதிபரிடமிருந்து விருது பெறுகிறார்.
ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி சார்பில் அதன் தலைவரும் தலைமை நிர்வாகியுமான ஜியேன் லியூ அதிபரிடமிருந்து விருது பெறுகிறார். - படம்: தேசிய தொண்டூழிய, அறக்கொடை நிலையம்
குறிப்புச் சொற்கள்