ஈசூன் வட்டார ஈரச்சந்தையில் அமைந்துள்ள ‘ஜெயா ஸ்பைசஸ்’ மசாலாத் தூள் கடைக்குத் தாம் அண்மையில் சென்றிருந்ததைப் பிரதமர் லாரன்ஸ் வோங் சமூக ஊடகம் வழியாகப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அந்தக் கடைக்காரர் மூன்றாவது தலைமுறையாகத் தமது குடும்ப வணிகத்தை நடத்தி வருவதாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) வெளியிட்ட பதிவின் வழியாகப் பிரதமர் வோங் தெரிவித்துள்ளார்.
“ஜெயா இந்தக் கைத்தொழிலை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் புதிய வாடிக்கையாளர்களைச் சென்றடையவும் புதுப்புது வழிகளைத் தேடி வருகிறார்,” என்று திரு வோங் கூறினார்.
பிரதமர் வோங் அந்தக் கடைக்குச் சென்று மசாலாத் தூள் கலவையைத் தயாரித்ததையும், கடைக்காரர் ‘ஜெயா’ என்கிற ஜெயசீலனுடன் உரையாடியதையும் பதிவுசெய்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
ஹைனானியக் கறி மசாலாத்தூள் கலவையைத் தயாரிக்கும் முறையைப் பிரதமருக்குத் திரு ஜெயசீலன் விளக்கிக் காட்டினார்.
மிளகாய், மஞ்சள், மிளகு ஆகியவை சேர்க்கப்படும் இந்தியக் கறிக்குழம்பின் காரமான, கடுமையான சுவையைப் போலல்லாமல், சீன வகைக் கறி மிதமான, சற்றே இனிப்பான சுவையைக் கொண்டுள்ளதாகக் காணொளியில் விவரிக்கப்பட்டது.
தமது கடையில் கையாளப்படும் ‘4-4-2’ கலவை முறையைத் திரு ஜெயசீலன் பிரதமருக்கு அறிமுகப்படுத்தினார்.
அதாவது, அந்தக் கலவையில் நான்கு பங்குக் கறித்தூள், நான்கு பங்குக் கொத்தமல்லி, இரண்டு பங்கு சீரகம் ஆகியவை இடம்பெற்றிருந்தன. அவற்றுடன் சரியான அளவில் மிளகாயையும் மஞ்சளையும் திரு வோங் சேர்த்தார்.
இறுதியாக, கறிக்குழம்பிற்குரிய தனித்துவமான இனிப்புச் சுவையைத் தருவதற்காக, கலவையுடன் கிராம்பு, ஜாதிக்காய், இலவங்கப்பட்டைத் தூள் ஆகியவற்றையும் திரு ஜெயசீலனின் வழிகாட்டுதலின்படி திரு வோங் சேர்த்தார்.
தம்மைப் போன்ற ஈரச்சந்தைக் கடைக்காரர்கள் எதிர்நோக்கும் சவால்களையும் திரு ஜெயசீலன் பிரதமரிடம் விளக்கியது காணொளியில் பதிவானது. அவருக்கும் கடையில் வேலை செய்யும் பணியாளர்களுக்கும் திரு வோங் தம் பாராட்டைத் தெரிவித்துக்கொண்டார். 2014 முதல் தந்தையிடமிருந்து வணிகப் பொறுப்புகளை ஏற்ற திரு ஜெயசீலன், ஊடகங்களுக்குப் புதியவர் அல்லர்.
செய்தித் தளங்களுக்கு நேர்காணல் அளிப்பதோடு, சமூக ஊடகங்கள்வழி வாடிக்கையாளர்களைச் சென்றடையத் தமது குழுவினருடன் புத்தாக்கத்தோடு பல்வேறு பதிவுகளையும் அவர் வெளியிட்டு வந்துள்ளார். அவர்களது உழைப்பு வீண்போகவில்லை.
“செப்டம்பர் 22ஆம் தேதி பிரதமரின் குழுவினர் என்னைத் தொடர்புகொண்டனர். பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பது பற்றிய படைப்பு ஒன்றுக்காக இணைய முடியுமா என்று அவர்கள் கேட்டனர். எந்தத் தயக்கமுமின்றி ஒப்புக்கொண்டேன்,” என்றார் திரு ஜெயசீலன்.
அதற்கு நான்கு நாள்களுக்குப் பிறகு பிரதமர் கடைக்கு வரப்போவதாகத் திரு ஜெயசீலனிடம் தெரிவிக்கப்பட்டது. இன்ப அதிர்ச்சியடைந்த திரு ஜெயசீலன், படப்பிடிப்பிற்காக கடையைத் தம் குழுவினருடன் மும்முரமாக ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்.
காணொளிக்காகப் பிரதமருடன் இணைந்த அனுபவம் இனிமையாக இருந்ததாகத் திரு ஜெயசீலன் பகிர்ந்துகொண்டார்.
“பிரதமருடன் நான் ஒரு மணி நேரம் தனிப்பட்ட முறையில் உரையாடுவேன் எனச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. என்னுடன் சேர்ந்து மசாலாப் பொருள்களைக் கலந்தது, எங்கள் ஊழியர்கள் அனைவர்க்கும் வணக்கம் தெரிவித்தது, இவ்வளவு காலமாக எனக்குப் பெருந்துணையாக இருக்கும் என் மனைவியிடம் நலம் விசாரித்தது ஆகியவற்றால் பெருமகிழ்ச்சி அடைந்தேன்,” என்று அவர் கூறினார்.
ஈரச்சந்தைகளின் எதிர்காலம் குறித்தும் தாங்கள் இருவரும் உரையாடியதாகத் திரு ஜெயசீலன் கூறினார்.
“மனப்பூர்வமாக வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் சேவை, கடின உழைப்பு, பொருள்களின் தரம், விலை ஆகியவற்றின் வழியாக ஈரச்சந்தைக் கடைகள் தனித்து நிற்கலாம்,” என்கிறார் அவர்.
