உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, மே 1ஆம் தேதி நடத்தப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கான கவிதைப் போட்டியின் பரிசளிப்பு விழா தந்தையர் தினத்தன்று நடைபெற்றது.
வேலை அனுமதிச்சீட்டு (வொர்க் பர்மிட்) வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக, தமிழ் முரசு நாளிதழும் அழகப்பா கல்விநிலைய முன்னாள் மாணவர் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்த கவிதைப் போட்டியில் ‘சிங்கப்பூர் – என் அனுபவங்கள்’ என்ற தலைப்பை மையமாகக் கொண்டு 61 ஊழியர்கள் கவிதை எழுதினர்.
போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்தில் மே 15ஆம் தேதி அன்று நடைபெற்றது.
மனிதவள அமைச்சின் ‘உறுதி, பராமரிப்பு, ஈடுபாட்டுக் குழு’வின் (ACE group) தலைவர் துங் யுவை ஃபாய் விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரில் மகிழ்ச்சியுடன் வேலை புரிவதற்கான தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் ACE குழுவின் நோக்கத்திற்கு ஏற்ப இப்போட்டி அமைந்துள்ளது என்று திரு துங் சுட்டினார்.
“தந்தையாக, கணவராக தங்கள் கடமையை ஆற்ற சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்திருக்கும் ஊழியர்களின் கடின உழைப்பே இன்றைய சிங்கையை வடிவமைத்துள்ளது,” என்றார் அவர்.
தலைமையுரை ஆற்றிய முனைவர் சுப திண்ணப்பன், கவிதை எழுதும் திறனை வளர்த்துக் கொள்வது குறித்துப் பகிர்ந்துகொண்டார்.
முதல் பரிசுப் பெற்றவருக்கு 1000 வெள்ளியும், இரண்டாவது பரிசாக 600 வெள்ளியும், மூன்றாம் பரிசாக 400 வெள்ளியும் வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
20 கவிதைகளுக்கு ஊக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
“சிங்கப்பூரில் பல அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் நான் கவிதை எழுதியுள்ளேன். ஆனால், மிகப்பெரிய பரிசாக 600 வெள்ளியை இந்நிகழ்ச்சியில்தான் பெற்றுள்ளேன்” என்று பெருமகிழ்ச்சியோடு தெரிவித்தார் இரண்டாம் பரிசைத் தட்டி சென்ற கிருஷ்ணன் மகேஷ் குமார், 49.
கவிதை எழுதும் தம் திறமையும் தமிழ்மீது அவர் கொண்டுள்ள பற்றும் வீண் அன்று எனப் பதிவிட இப்போட்டி உதவியதாகவும் அவர் கூறினார்.
தம் தந்தையும் வெளிநாட்டில் பணிபுரிவதால் எந்தப் பண்டிகையையும் அவருடன் கொண்டாடியதில்லை என்றும் தற்போது தம் இரண்டு வயது மகனுக்கும் அதே நிலை என்றும் உணர்ச்சிமேலிடக் கூறினார் மூன்றாம் பரிசைப் பெற்ற பெரியசாமி குகன், 29.
“தனிமையில் வாடும் வெளிநாட்டு ஊழியர்கள் பலர் தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபடுவர். அத்தகைய சிந்தனைகளிலிருந்து விடுபட்டு, தங்கள் கல்வியறிவை பயன்படுத்த இப்போட்டி ஒரு தளமாக அமைந்துள்ளது,” என்றார் அவர்.
“நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களைச் செயல்படுத்தும் வெளிநாட்டு ஊழியர்களின்றி சிங்கை இவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்காது. அவர்களின் பங்களிப்பு இமயமலை அளவுக்கு உயரமானது. அவர்களின் நலனைக் கருதி, தமிழ் முரசோடு இணைந்து இப்போட்டியை ஏற்பாடு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி,” என்றார் அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழுவின் நிறுவனர் திரு. அ.கி.வரதராஜன்.