புரோப்நெக்ஸ் தலைமை நிர்வாகி இஸ்மாயில் கஃபூரின் அடுத்த இலக்கு

புரோப்நெக்ஸ் தலைமை நிர்வாகி இஸ்மாயில் கஃபூரின் அடுத்த இலக்கு

படம்: புரோப்நெக்ஸ்

23 Oct 2026 - 4:35 pm

4 mins read

சொத்துச் சந்தை துறையில் புகழ்பெற்று விளங்கும் 63 வயது இஸ்மாயில் கஃபூர், வீடுகளை விற்பனை செய்து தமது தொழிலைக் கட்டியெழுப்புவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, தமது குடும்பத்திற்குப் போதுமான இடமில்லாத ஒரு வீட்டில் வளர்ந்தார்.

லெங்கோக் பாரு புளோக் 54ல், பெற்றோர், ஐந்து சகோதரர்கள் என ஏழு பேர் ஓரறை வாடகை வீட்டில் வசித்து வந்தனர். தம் பெற்றோருக்கு முறையான படுக்கையறைகூட இல்லை என்றும் ஒரு திரைச்சீலை மட்டுமே அவர்களின் இடத்தைப் பிரித்திருந்தது என்றும் திரு இஸ்மாயில் நினைவுகூர்ந்தார்.

அதற்குப் பிறகு கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இவர் சிங்கப்பூர் ராணுவத்தில் இருந்தபோது நார்மன்டன் பார்க் அடுக்குமாடி வீட்டுக்கு மாறினார். இப்போது இவரது வீடு நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு தனி வீடாக உள்ளது.

பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரணநிலைத் தமிழ்த் தேர்வில் தோல்வியடைந்த திரு இஸ்மாயில், கல்வியில் தாம் பின்தங்கி இருப்பதை உணர்ந்தார். அதன்பின் ராணுவத்தில் சேர்ந்த இவர் கர்னல் பதவிக்கு உயர்ந்தார். ஓய்வூதியம் தரும் ராணுவ வேலையைத் தமது 32வது வயதில் துறந்த இவர், சொத்துச் சந்தைத் துறையில் சொந்தமாகத் தொழில் தொடங்கினார். அதுவே இறுதியில் புரோப்நெக்ஸ் ஆனது.

புரோப்நெக்சின் தலைமை நிர்வாக அதிகாரியாக இவரது பதவிக்காலத்தில்தான், 2018 ஜூலையில் அந்நிறுவனம் சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. அத்துடன், அந்நிறுவனம் அண்மை ஆண்டுகளில் வட்டார அளவிலும் விரிவாக்கம் கண்டது.

இந்தச் சொத்து நிறுவனத்தின் வருவாய் சீராக இருந்துவருகிறது. இவ்வாண்டின் முற்பாதியில் அதன் நிகர லாபம் ஆண்டு அடிப்படையில் 3.1 விழுக்காடு சரிந்து $40.9 மில்லியனாகக் குறைந்தது; அதே நேரத்தில் வருவாய் 0.7 விழுக்காடு கூடி, $603 மில்லியனாக அதிகரித்தது.

ராணுவத்திலிருந்து தலைமை நிர்வாக அதிகாரி, பின்னர் தலைவர் பதவி

தலைமை நிர்வாக அதிகாரியாக இல்லாத சூழலிலும் நிறுவனம் தொடர்ந்து வளர்வதை உறுதிசெய்வதுதான் இப்போதைக்குத் திரு இஸ்மாயில் முன்னுள்ள சவா;.

“என் ஆர்வத்தையும் ஆற்றலையும் பார்த்தால், என்னால் இன்னும் 10 ஆண்டுகளுக்குத் தலைமை நிர்வாக அதிகாரியாகத் தொடர்ந்து பணியாற்ற முடியும் என்றுதான் தோன்றுகிறது. ஆனால், அந்தப் பதவியை நான் தொடர்ந்து வகிப்பது சரியாக இருக்காது. எனக்குப் பிறகு அந்தப் பொறுப்பை ஏற்பவர் கெல்வின் ஃபோங். அவர் கடந்த 24 ஆண்டுகளாக என்னுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அவர் அதற்கெனத் தயார்ப்படுத்தப்பட்டுள்ளார்,” என்றார் திரு இஸ்மாயில்.

புரோப்நெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் திரு இஸ்மாயில் கஃபூர் (இடது), புரோப்நெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு கெல்வின் ஃபோங்.
புரோப்நெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் திரு இஸ்மாயில் கஃபூர் (இடது), புரோப்நெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு கெல்வின் ஃபோங். - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

புரோப்நெக்ஸ் நிறுவனமானது ஒரு நிறுவனர் மட்டுமே கட்டுப்படுத்தும் குடும்பத் தொழிலாக இராமல், ஒரு முறையான நிறுவனமாகச் செயல்பட வேண்டும் என்று திரு இஸ்மாயில் வலியுறுத்தினார். இதற்காக, இயக்குநரவை, தன்னாட்சிமிக்க இயக்குநர்கள், தெளிவாக வரையறுக்கப்பட்ட பொறுப்புகளுடன் கூடிய தலைமை அதிகாரிகள் அடங்கிய கட்டமைப்பை அவர் முன்னிறுத்துகிறார்.

தலைமை நிர்வாக அதிகாரிப் பதவியிலிருந்து விலகுவது என்பது ஓய்வுபெறுவதைக் குறிக்கவில்லை. மாறாக, நிர்வாகத் தலைவர் என்ற தமது புதிய பொறுப்பின்மூலம், வட்டார அளவில் புரோப்நெக்சின் வளர்ச்சி, உத்திசார் பங்காளித்துவம், நிறுவனத்தின் வணிகச் சின்ன மதிப்பு, அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்குதல் போன்ற முக்கிய பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த முடியும் என்று திரு இஸ்மாயில் கருதுகிறார்.

“நாங்கள் ஆசியான் வட்டாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். அதே சமயம், இந்தியா அல்லது மத்திய கிழக்கு நாடுகளையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. உலகின் எந்தப் பகுதிக்கும் செல்ல தயாராக இருக்கிறேன். எங்களது தொழில்நுட்பம், செயல்முறை அறிவு, பயிற்சி, விற்பனை தொடர்பான மனித உளவியல் அணுகுமுறை ஆகியவற்றை எடுத்துச் சென்று, அந்தந்த நாடுகளின் பண்பாட்டிற்கு ஏற்ப அவற்றை மாற்றியமைக்கிறோம்.

புரோப்நெக்ஸ் ஏற்கெனவே இவ்வட்டாரத்தில் தடம்பதித்து வருகிறது. இந்தோனீசியாவில் சுரபாயா, ஜகார்த்தா, பாலி, பாத்தாம், மலேசியாவில் சாபா, சரவாக், ஜோகூர் பாரு, கோலாலம்பூர், பினாங்கு, வியட்னாமில் ஹோ சி மின் சிட்டி, கம்போடியா, ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் ஆகிய இடங்களில் அந்நிறுவனம் இயங்கி வருகிறது.

சமூகத்திற்குத் திரும்ப வழங்குதல்

தம்முடைய எளிமையான தொடக்கக் காலத்தை திரு இஸ்மாயில் ஒருபோதும் மறப்பதில்லை. வசதி குறைந்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அவரது விருப்பம், புரோப்நெக்ஸ் நிறுவனத்தின் 25வது ஆண்டு விழாவின்போது வெளிப்பட்டது. அப்போது, பல்வேறு சமூக நல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டதோடு, $10 மில்லியன் மதிப்பிலான அறக்கட்டளை நிதியும் உருவாக்கப்பட்டது.

இந்த அறக்கட்டளை நிதி, திரு இஸ்மாயிலும் புரோப்நெக்சின் இணை நிறுவனர் ஆலன் லிம்மும் சேர்ந்து அமைத்த புரோப்நெக்ஸ் அறநிறுவனத்திற்கு வலுசேர்க்கும். அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த நிதியை $25 மில்லியனாக உயர்த்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அந்த அறநிறுவனத்தின் முதலீடுகள்மூலம் ஈட்டப்படும் வருவாய், வசதிகுறைந்த மாணவர்களுக்கான உதவித் திட்டங்களுக்கும் கல்வி சார்ந்த முயற்சிகளுக்கும் பயன்படுத்தப்படும்.

மேலும், புரோப்நெக்ஸ் நிறுவனம் 2025ஆம் ஆண்டில் சமூக உண்டியல் அமைப்பிற்கு $6 மில்லியன் நிதியுதவி வழங்கியது. அது, அந்த அறப்பணி அமைப்பிற்குக் கிடைத்த ஆகப் பெரிய தனிப்பட்ட நன்கொடை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: அப்துல் ஹாதி தமிழாக்கம்: வீ. பழனிச்சாமி

குறிப்புச் சொற்கள்
சொத்துச் சந்தைபங்குச் சந்தைதலைமை நிர்வாக அதிகாரி