இந்திய மாணவர்களுக்கான ஆதரவுத் திட்டம்: ஆர்வத்தோடு பங்கெடுத்த இளையர்

இந்திய மாணவர்களுக்கான ஆதரவுத் திட்டம்: ஆர்வத்தோடு பங்கெடுத்த இளையர்

படம்: ‘புரோஜெக்ட் முன்னேற்றம்’

14 Aug 2026 - 4:19 pm

2 mins read

சிங்கப்பூர்ச் சமூகத்திற்கு அப்பால், தமிழ்நாட்டிலுள்ள ஏலகிரி மாவட்டத்தில் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்காகத் திட்டமொன்றை வகுத்துள்ளனர் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மாணவர்கள்.

‘புரோஜெக்ட் முன்னேற்றம்’ என்ற தன்னார்வத் தொண்டு முயற்சி முதன்முதலில் 2025ஆம் ஆண்டு அறிமுகம் கண்டது. மாணவர்களால் தொடங்கப்பட்ட அந்த முயற்சியின் முக்கியக் குறிக்கோள், ஏலகிரி மாவட்டத்தின் செயின்ட் சார்ல்ஸ் பள்ளி மாணவர்களுக்கும் அங்குள்ள சிறிய உள்ளூர் வணிகங்களுக்கும் இயன்ற வழிகளில் உதவுவதாகும்.

இவ்வாண்டு முயற்சிக்குத் தலைவராகப் பொறுப்பேற்றவர் காவ்யா மணிகண்டன். சென்ற ஆண்டு டிசம்பர் மாதம், ஏலகரியில் உள்ள செயின்ட் சார்ல்ஸ் பள்ளிக்கு சக தலைவர்களுடன் அவர் பயணம் மேற்கொண்டார்.

அங்குப் பணிபுரிந்த ஆசிரியர்களுக்குத் தேவையான உதவிகளைப் பற்றியும் மாணவர்களுக்குத் தேவையான கூடுதல் கல்வி சார்ந்த உதவிகளைப் பற்றியும் நன்கு புரிந்துகொண்டு, அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யத் திட்டமிடத் தொடங்கினர்.

2026 ஜூலையில், மாற்றத்திற்குப் பாதை வகுக்கும் குறிக்கோளுடன் 22 மாணவர்களைக் கொண்ட ‘புரோஜெக்ட் முன்னேற்றம்’ குழு ஏலகிரிக்கு இரண்டு வாரப் பயணத்தை மேற்கொண்டது.

செயின்ட் சார்ல்ஸ் பள்ளியில், மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடங்கள், கணினிப் பயன்பாட்டுப் பயிற்சிகள் போன்ற பலவற்றைக் கற்பித்தனர். பள்ளி மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் வகையில், அங்குள்ள ஆசிரியர்களுக்கும் ஆங்கிலப் பாடங்களை நடத்தினர்.

“மருத்துவம், சட்டத்துறை என்று ஒருசில பிரபலத் தொழில்துறைகளைப் பற்றி மட்டுமே மாணவர்கள் அறிந்திருக்கின்றனர். வேறு பல துறைகளைப் பற்றி விரிவாக அவர்களுடன் பகிர்ந்துகொண்டு நாங்கள் தொழில்துறைகளிலுள்ள பல்வேறு வாய்ப்புகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். அது மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக அமைந்தது என்று நம்புகிறோம்,” என்றார் காவ்யா.

பள்ளியில் மட்டுமே உதவிக்கரம் நீட்டுவதோடு நிறுத்திவிடாமல், மாணவர்கள் அங்கிருந்த உள்ளூர்த் தொழில்கள் சிலவற்றை மேம்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டனர். சமூக ஊடகங்களின் வழி, தொழில்களை விளம்பரப்படுத்தும் உத்திகளை உள்ளூர்க் கடைக்காரர்களுக்கு மாணவர்கள் கற்பித்தனர். இரண்டு வார முயற்சியானாலும் நீண்டகால வருமானப் பெருக்கத்திற்கான விதையை மாணவர்கள் விதைத்துச் சமூக முன்னேற்றத்திற்கான பாதையை வகுத்தனர்.

தமிழ் தெரியாத மற்ற இனங்களைச் சேர்ந்த இளையரையும் தமிழ்நாட்டில் இடம்பெற்ற தொண்டு முயற்சி ஒன்றில் ‘புரோஜெக்ட் முன்னேற்றம்’ ஈடுபடுத்தியது. அவர்களில் ஒருவர், 23 வயது மேத்தியூ லிம்.

“இந்த முயற்சியில் நான் எதிர்கொண்ட ஒரு தடை, மொழி. ஆனால், அன்பும் மனிதநேயமும் அந்தத் தடையை உடைக்கக்கூடிய தன்மையைக் கொண்டவை என்பதை இந்தப் பயணம் எனக்குக் கற்பித்தது. அத்துடன், சிங்கப்பூரில் நமக்கு எளிதாகக் கிடைக்கும் வாய்ப்புகளின் மதிப்பையும் வளங்களின் மதிப்பையும் நான் இதன்வழி உணர்ந்தேன்,” என்று நினைவுகூர்ந்தார் மேத்தியூ.

“பெரும்பாலானோர் தொண்டு என்பது வசதி குறைந்தோருக்கு உதவும் முயற்சியாகும் என்ற தவறான புரிதலைக் கொண்டுள்ளனர். ஆனால் இந்த முயற்சி வழி, நான் அங்கிருந்த மாணவர்களிடமிருந்து ஏராளமான பாடங்களைக் கற்றுக்கொண்டேன். வசதி குறைந்தோர் பலவீனமானவர்கள் அல்லர். அவர்களிடம் தென்படும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் வியக்கத்தக்கவை,” என்றார் புரோஜெக்ட் முன்னேற்றத்தில் பங்கேற்ற 20 வயது சஞ்சனா சரவணன்.

குறிப்புச் சொற்கள்