பின்தங்கிய குடும்பங்களுக்கும் மாணவர்களுக்கும் ஆதரவளிப்பதன் மூலம் கொண்டாட்ட உணர்வை அனைவரிடமும் கொண்டுசேர்க்கும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) ‘புரொஜெக்ட் கிவ் ஹார்ட்லண்ட்ஸ்’ திட்டம் இவ்வாண்டு 2,350 குடும்பங்களைச் சென்றடையவுள்ளது.
இது, கடந்த ஆண்டைவிட 47 விழுக்காடு அதிகம்.
சிண்டா சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘புரொஜெக்ட் கிவ்’, சனிக்கிழமை (அக்டோபர் 4) உட்லண்ட்ஸ் அவென்யூ 1ல் உள்ள ‘ஏஸ் தி பிளேஸ்’ சமூக மன்றத்தில் நடந்தது.
செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விக்ரம் நாயர், இங் ஸி ஷுவான் இருவரும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
ஜூரோங் வெஸ்ட், அங் மோ கியோ, சுவா சூ காங், நீ சூன், தஞ்சோங் பகார், செம்பவாங், புக்கிட் பாத்தோக் உள்ளிட்ட எட்டு வட்டாரங்களில் வசிக்கும் குடும்பங்களுக்குத் தீபாவளிப் பரிசுப் பைகள் வழங்கப்படும்.
பண்டிகைக்குத் தேவையான பொருள்கள், தின்பண்டங்கள், பற்றுச்சீட்டுகள் என $120 மதிப்புள்ள பொருள்கள் அடங்கிய பைகள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் தொடர்பில் நிதி திரட்டு, பல்வேறு நடவடிக்கைகள், மூத்தோருடனான ஈடுபாட்டு நிகழ்ச்சிகளுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம், மீடியாகார்ப், நற்பணிப் பேரவை ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இவை ஏற்பாடு செய்யப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
மேலும், உள்ளூர் வர்த்தகங்கள், சமூகக் குழுக்கள், பள்ளிகள் உள்ளிட்ட பல அமைப்புகளும் இத்திட்டத்துக்கு ஆதரவளித்துள்ளன.
“கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் இத்திட்டம், சமுதாயத்துக்காக சமுதாயம் துணைநிற்கும் என்பதை மறுவுறுதிப்படுத்துகிறது. குறிப்பாக, இத்திட்டத்தின் பயனர்கள் பெரும்பாலும் மூத்தோர் என்பதால் அவர்களை நேரடியாக இவை சென்றடையவேண்டும் என விரும்புகிறோம்.
“சிண்டாவின் குடும்பச் சேவை நிலையம்மூலம் சரியானவர்களைத் தேடி அவர்களிடம் கொண்டுசேர்க்கிறோம். பண்டிகைக் கொண்டாட்ட உணர்வு அனைவரையும் சென்றடைவது இதன் முக்கிய நோக்கம்,” என்றார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன்.
இளையர்கள் இதில் அதிகம் ஈடுபடுவதாகவும் பிறருக்கு உதவும்போது அவர்களின் முகத்தில் வெளிப்படும் புன்னகை, இளையர்களுக்கு உற்சாகம் தரும் என தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.
“என் குடும்பம், நண்பர்களுடன் பண்டிகைக் காலத்தைச் செலவிடுவதே வழக்கம். இத்திட்டத்தின் மூலம் சமூகத்தில் பலரைச் சந்தித்து உரையாடுவது சிறந்த அனுபவம். இதில் தொண்டாற்றுவது மகிழ்ச்சி,” என்றார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவி அம்ரிதா பூர்ணா கிரண், 20.
நிகழ்ச்சியில் தீபாவளி தொடர்பான விளையாட்டு நடவடிக்கைகளில் உதவிய ப்ரபவ் சுந்தரவடிவேல், 20, “இந்தத் திட்டம் தொடர்ந்து பல பரிமாணங்கள் எடுத்து விரிவடைந்துள்ளதைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. இதில் பங்களிப்பது நிறைவான அனுபவம்,” என்றார்.
“பண்டிகைக்காலச் செலவுகளைக் குறைத்து கொண்டாட்ட உணர்வை வீடுவரை கொண்டு வருகிறது இத்திட்டம். பரிசுப் பை எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்,” என்றார் செம்பவாங் குடியிருப்பாளர் பரமேஸ்வரி, 50.
“கடந்த ஈராண்டுகளாக இத்திட்டத்தின்கீழ் உதவி கிடைப்பதில் மகிழ்ச்சி. இது உதவி என்பதைத் தாண்டி, உணவு, நடவடிக்கைகள் என நிகழ்ச்சியாக நடத்துவது கூடுதல் சிறப்பு,” என்றார் ரவீந்திரன், 60.