தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களின் கால்நூற்றாண்டு சிறுகதைத் தொகுப்புகள்

தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களின் கால்நூற்றாண்டு சிறுகதைத் தொகுப்புகள்

2 mins read
bb7c027b-b897-4878-b26c-caa90cc47ecc
நூல் வெளியீடு, சனிக்கிழமை (மே 23 ) மாலை 4 மணிக்குக் கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. - படம்: நன்னூல் பதிப்பகம்

தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்கள் 21ஆம் நூற்றாண்டின் முதல் கால்நூற்றாண்டில் புனைந்துள்ள தமிழ்ச் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்படவுள்ளன.

2000 முதல் 2025 வரை வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பாகத் திருத்துறைப்பூண்டி நன்னூல் பதிப்பகத்தின் சார்பில் மணலி அப்துல் காதர், அவற்றை இரண்டு தொகுதிகளாக வெளியிடுகிறார். கடையநல்லூர் இஸ்லாமிய இலக்கியக் கழகமும் நூல் வெளியீட்டில் இணைந்துகொள்கிறது.

‘கால் நூற்றாண்டுக்கால இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்’ என்பது நூலின் தலைப்பு.

தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சார்ந்த அந்தக் கதைகள், இஸ்லாமியப் பண்பாட்டு விழுமியங்களை எடுத்துக்காட்டுகின்றன.

சனிக்கிழமை (மே 23) மாலை 4 மணிக்குக் கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

நல்லாசிரியர் கே.எம். செய்யது மசூது தலைமையில் நடைபெறும் விழாவில், சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவரும் எழுத்தாளருமான அ. முஹம்மது பிலால் சிறப்புரையாற்றி நூலை வெளியிடுகிறார். 

நூலின் முதல் படியை மேலப்பாளையம் முஸ்லிம் கல்விக் குழுத் தலைவர் அல்ஹாஜ் எல்.கே.எஸ்.மீரான் முஹைதீன் பெற்றுக்கொள்வார். நாகர்கோவிலைச் சேர்ந்த நாவலாசிரியரும் எழுத்தாளருமான எம். மீரான் மைதீன் நூல் விமர்சன உரை நிகழ்த்துவார்.

மேலும், சிங்கப்பூரில் பல்லாண்டுகளாக மாணவர்களும் இளையர்களும் பேச்சுக்கலையில் திறன் பெற, ‘பேசும் கலை வளர்ப்போம்’ இயக்கம் மூலம் செயல்படும் எழுத்தாளரும் பட்டிமன்ற நடுவருமான அ. முஹம்மது பிலாலின் சேவையைப் பாராட்டும் விதமாக, இஸ்லாமிய இலக்கியக் கழகமும் நன்னூல் பதிப்பகமும் இணைந்து அவருக்கு ‘பேசும் கலை இயக்கப் புரவலர்’ என்ற சிறப்பு விருதை வழங்கவிருக்கின்றன.

சிறுகதைக் களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ள சிங்கப்பூர் இஸ்லாமியத் தமிழ் எழுத்தாளர்களின் ஒன்பது கதைகள் பிற மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளன. அதன்படி, குளச்சல் யூசுப் மொழிபெயர்ப்பில் மலையாளத்திலும் தெப்பளா சீனுவாஸ் மொழிபெயர்ப்பில் தெலுங்கிலும் கொழும்பு ஹுமைரா அல்அமீன் மொழிபெயர்ப்பில் சிங்களத்திலும் உருவாக்கப்பட்ட நூல்களும் விழாவில் வெளியாகின்றன.

குறிப்புச் சொற்கள்